Published : 15 Apr 2014 10:06 AM
Last Updated : 15 Apr 2014 10:06 AM

போலீஸ்காரர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே…

நடந்தோ பைக்கிலோ வெளியூர்க்காரர்கள் யாராவது ஊருக்குள் வந்துவிட்டார்கள் என்று தெரிந்தால் இந்த கிராமவாசிகள் யாரும் தங்களுடைய வீட்டைவிட்டு வெளியே வருவதே இல்லை. காரணம் அடுத்து மாவோயிஸ்டுகள் வருவார்கள், அவர்கள் வந்து போன பிறகு போலீஸ்காரர்கள் வருவார்கள் என்ற அச்சம்தான்.

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜி.கே. வீதி மண்டல் பிரதேசத்தின் கும்கும்புடி கிராமவாசிகளுக்குத்தான் இந்த நிரந்தர அச்சம். அடர்ந்த காடுகளைக் கொண்ட மலைப்பகுதியில் இந்தக் கிராமம் இருக்கிறது. கிராமவாசிகள் மரத்தையும் மட்டைகளையும் வெட்டி, மஞ்சம்புல் வேய்ந்து குடிசை என்ற ஒன்றைத் தாங்களாகவே அமைத்துக்கொண்டு இங்கே வசித்துவருகின்றனர்.

நக்சல்கள் என்றும் மாவோயிஸ்டுகள் என்றும் அழைக்கப்படும் இடதுசாரி தீவிரவாதிகள் இந்தக் கிராமங்களை இப்போது தங்கள் பிடியில் வைத்துள்ளனர். அவர்களுடைய பிரச்சாரத்தாலும் அச்சுறுத்தலாலும் பல இளைஞர்கள் அவர்களுடைய இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். எனவே, அவர்களைக் கண்காணிக்கவும் பிடிக்கவும் போலீஸார் அடிக்கடி இந்தக் கிராமங்களுக்கு வருகின்றனர். போலீஸார் எங்கே வந்தார்கள், யாரைப் பார்த்தார்கள், என்ன விசாரித்தார்கள் என்று கேட்க மாவோயிஸ்டுகள் உடனே அங்கே குவிகின்றனர்.

இரண்டு பக்கமும் அடி

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இந்தக் கிராமவாசிகளுக்கு மாவோயிஸ்டுகளால் நிம்மதியே போய்விட்டது. தார்ச் சாலை என்பதே இந்தக் கிராமத்தில் கிடையாது. சுமார் 36 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர்தான் இங்கே வசிக்கின்றனர். எல்லா மலைக்கிராமங்களையும் போலவே இதுவும் அடிப்படை வசதி குறைவானதுதான். கோந்த் என்ற பழங்குடிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். நூக்க துரை என்ற பிரிவினரும் இங்கே வாழ்கின்றனர்.

குடிதண்ணீர் வேண்டும் என்றால் மலையிலிருந்து விழும் அருவிதான் ஒரே குடிநீர் ஆதாரம். அருவிக்கு இந்தக் கிராமத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். ஆறு குடும்பங்களில் மட்டும் தொலைக் காட்சிப் பெட்டிகள் இருக்கின்றன. அதில் கொர்ர பாலண்ணா என்பவர் வீட்டில் மட்டும்தான் கேபிள் இணைப்பு இருக்கிறது. மற்றவர்கள் பக்கத்தில் உள்ள பெத்தவலசா கிராமத்துச் சந்தைக்குச் சென்று திரைப்படக் குறுந்தகடுகளை வாங்கிவந்து போட்டுப்பார்க்கின்றனர். மலைமேலே இருக்கும் இந்தக் கிராமம் மாவோயிஸ்டுகளின் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

பிடித்துக்கொடுத்தால் பரிசு

விசாகப்பட்டினத்திலிருந்து இந்த ஊர் 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. படேரு சட்டப்பேரவைத் தொகுதியில் இது வருகிறது. பிடித்துக்கொடுத்தால் 4 லட்ச ரூபாய் பரிசு என்று போலீஸாரால் அறிவிக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் ஜிம்மெலா ஹரி என்பவருக்கும் கொர்ர சீதய்யா என்பவருக்கும் இது சொந்த கிராமம். இங்கிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிந்தபள்ளி என்ற வட்டத்தின் கொம்மாங்கி கிராமத்தைச் சேர்ந்த குடுமலா ரவி என்பவர் தலைக்கு 25 லட்ச ரூபாய் பரிசு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அவர், மாவோயிஸ்டுகள் படையின் முக்கிய தளபதி. கும்கும்புடி கிராமத்தின் மீது நடந்த திடீர் சோதனைக்குப் பிறகு கொர்ர சன்யாசி ராவ் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

படேரு தொகுதியில் தேர்தலுக்கான அறிகுறிகளே இல்லை. கிரண்குமார் ரெட்டி அமைச்சரவையில் பழங்குடி நலத்துறை அமைச்சராக இருந்த பி. பாலராஜு, காங்கிரஸ் கட்சி தனக்குப் போட்டியிட வாய்ப்பு தரும் என்று நம்புகிறார். 1993-ல் சிந்தபள்ளி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது அவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.

“எங்களுடைய துயரங்களை யாருமே புரிந்துகொள்வ தில்லை. சாலை வசதி, தொலைபேசி இணைப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார நிலையங்கள் என்று அடிப்படை வசதிகள் மட்டும் செய்துதரப்பட்டாலும் நாங்கள் மற்றவர்களுக்குச் சமமாக முன்னேறுவோம்” என்கிறார் பெயரைச் சொல்ல விரும்பாத இளைஞர். அச்சம் காரணமாகவே கிராமத்தைச் சேர்ந்த யாரும் பேச முன்வரவில்லை.

அவர்கள் வந்தார்களா?

“மாவோயிஸ்டுகளின் ஆதிக்கமுள்ள பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் எப்போதும் அச்சத்தில்தான் வாழ்கின்றனர். அண்ணலு (அண்ணன்மார்கள்) எப்போது வந்து கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் சாப்பாடும் தண்ணீரும் கொடுக்க வேண்டும். அவர்கள் வந்து போனதும் போலீஸார் வருவார்கள். எத்தனை பேர் வந்தனர், எந்தப் பக்கம் சென்றனர் என்று கேட்டு மிரட்டுவார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாடு காரணமாக இந்த கிராமத்தில் யாரும் வாக்களிப்பதே இல்லை.

போலீஸாரிடம் சரணடைந்த சிந்திரி கார்லா என்பவர் பலபம் என்ற ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவோயிஸ்டுகள் அவரை அதற்காகவே சுட்டுக்கொன்றனர்.

2013-ல், போலீஸாருக்குத் தகவல் சொல்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஏழு பழங்குடிகளை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர். பழங்குடிகளுக்கு இடையிலான சாதிப் பூசலில் மூன்று பேர் சாகுலு என்ற ஊரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

“மாவோயிஸ்டுகள் எவ்வளவு எச்சரித்தாலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது. மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் அதே வேளையில் மக்களுக்குத் தேவையானவற்றையும் அளிக்கிறோம். நோயாளிகளை அவர்கள் இருக்கும் இடங்களிலேயே பரிசோதித்து மருந்துகளை வழங்குகிறோம். குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக்கொடுக்கிறோம்.

இளைஞர்களுக்குத் தற்காப்புப் பயிற்சி அளிக்கிறோம். இதனால் கணிசமானவர்கள் மாவோயிஸ்டுகளின் வலையில் சிக்காமல் தப்பிவருகின்றனர்” என்கிறார் மாவட்ட காவல்துறை ஆணையர் விக்ரம்ஜீத் டுக்கல்.

©‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x