Published : 04 Feb 2015 11:33 AM
Last Updated : 04 Feb 2015 11:33 AM

டெல்லி தேர்தல் களம் 2014 | வெல்வாரா மஃப்ளர் மனிதர்? - சாதிப்பாரா இரும்புப் பெண்?

வெல்வாரா மஃப்ளர் மனிதர்?

- ஷுபோமோய் சிக்தர், வர்கீஸ் கே. ஜார்ஜ்

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலை மஃப்ளர் மனிதர் என்று இகழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறே கேலிச்சித்திரங்களும் வரையப்படுகின்றன. தன்னை எப்படிக் கேலிச்சித்திரமாக வரைகிறார்களோ அதே போல உடையணிந்து, சாமானிய மனிதர் என்ற தோற்றத்துடனேயே தேர்தல் பிரச்சாரத்துக்கும் பொதுக்கூட்டங்களுக்கும் செல்கிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ‘கேஜ்ரிவால் அவ்வளவுதான், இனி தலையெடுக்க முடியாது’ என்றார்கள். இப்போது டெல்லி களத்தில் விஸ்வரூபமெடுத்து வருகிறார். பிரதமர் மோடி உட்பட 25 மத்திய அமைச்சர்கள், 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏராளமான மாநில முதலமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், லட்சக் கணக்கில் தொண்டர்கள் என்று பாஜக இறக்கிவிட்டிருக்கும் பிரச்சாரப் பட்டாளமே கேஜ்ரிவாலின் செல்வாக்குக்கு சான்று.

பாஞ்ச் சால் - கேஜ்ரிவால்

‘பாஞ்ச் சால் - கேஜ்ரிவால்’என்ற முழக்கம் டெல்லி முழுக்க ஒலிக்கிறது. ‘அடுத்த 5 ஆண்டுகளுக்கு கேஜ்ரிவால்’ என்பது இதன் பொருள். கிராரி சட்டப் பேரவைத் தொகுதியில் ஏராளமான ஏழைத் தொழிலாளர்கள் கேஜ்ரி வாலுக்காக மணிக் கணக்கில் காத்து நின்றாலும் உற்சாகம் இழக்காமல் கோஷமிட்டுக்கொண் டிருந்தார்கள்.

“நான் நக்சல்பாரியா?” - கேஜ்ரிவால்.

“இல்லை” - மக்கள்.

“நான் சும்மா தர்ணா செய்கிறேனா, உங்களுடைய பிரச்சினைகளை அரசின் கவனத் துக்குக் கொண்டுசெல்லத்தானே செய்கிறேன், இது ஒரு குற்றமா?” - கேஜ்ரிவால்.

“இல்லவே இல்லை” - மக்கள். இவ்வாறு அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் மக்கள் உற்சாகமாகப் பதில் அளிக்கிறார்கள்.

எதிர்ப்படும் மக்கள் குடிநீர், மின்சாரம், பள்ளிகள், சாலைகள், வேலைவாய்ப்புகள், தொலைபேசி இணைப்புகள் என்றெல்லாம் கேட்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ தருகிறேன் என்று பதில் அளிக்கிறார்.

“போட்டி எங்களுக்கும் பாஜகவுக்கும் இடையில்தான், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வீணடிக்காதீர்கள்” என்று வேண்டுகோளும் விடுக்கிறார்.

2013 டெல்லி சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அதே பிரதானக் கட்சிகள்தான் இப்போதும். ஆனால், இப்போது காட்சியில் சில பாத்திரங்களின் பங்கு மாறிவிட்டது. காங்கிரஸை வீழ்த்திவிடுமா என்ற சந்தேகத்துடன் பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி, இந்த முறை பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கிறது.

அதிர்ச்சி தந்த ஆம் ஆத்மி

2014 மே மாதம் கேஜ்ரிவாலின் அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான் என்று முடிவுரை எழுதியவர்கள் எல்லாம் இப்போது அவருக்குப் பெருகிவரும் ஆதரவு கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மிதான் ஆட்சிக்கு வெகு அருகில் உள்ள கட்சி என்கின்றன.

ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய் வோம் என்பதை மக்களிடம் கூறுவதுடன், என்னென்ன செய்ய வேண்டும் என்று தங்களுக்குள் ஆலோசித்து உத்திகளை வகுத்துள்ளார்கள் மூத்த நிர்வாகிகள். மணீஷ் சிசோடியா, ஆஷிஷ் தல்வார், பத்திரிகை யாளர்கள் ஆஷிஷ் கேடான், நாகேந்தர் சர்மா போன்றோர் கேஜ்ரிவாலுக்குப் பக்கபலமாகச் செயல்படுகிறார்கள்.

டெல்லி சட்டப் பேரவையின் 70 தொகுதிகளிலும் ஒரு சுற்றுப் பிரச்சாரத்தை முடித்துவிட்டார் கேஜ்ரிவால். தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்துகொள்கிறார். யோகாசனம், காலை நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றுக்குப் பிறகு 7.30 மணிக்கு வேலையைத் தொடங்கு கிறார். மதியத்துக்குப் பிறகு தொகுதிகளுக்குச் செல்கிறார், பிரச்சாரம் செய்கிறார். அவர் எங்கிருந்தாலும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒரு குழு, தொலைக்காட்சி செய்தி சேனல்களையும் செய்தி நிறுவனங் களின் நறுக்குகளையும் தொடர்ந்து பார்த்து அவ்வப்போது முக்கிய தகவல்களை அவருக்குக் குறுஞ்செய்திகளாக அனுப்பிக்கொண்டிருக் கிறது.

பிரச்சாரமும் சர்ச்சையும்

49 நாள் ஆட்சியின்போது தான் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுத் தன்னைத் தானே பாராட்டிக்கொள்கிறார் கேஜ்ரிவால். ஊழலை ஒழிப்பதில் பாஜகவுக்கு ஆர்வமில்லை என்று சாடுகிறார். சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல், மக்களவைப் பொதுத்தேர்தல் என்று 2 தேர்தல் களைச் சந்தித்துவிட்டதால் பதற்றமில்லாமல் இருக்கிறார். ஆனால், கூட்டத்தை ஈர்க்கும்படி பேசுவதில்தான் இன்னும் முழுதாகத் தேறவில்லை.

பாஜக, காங்கிரஸ் இரண்டும் வாக்களிக்கப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு, ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்பதை ஒரு முறையல்ல 3 முறை வெவ்வேறு தினங்களில் சொன்னார். தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரித்ததால் நிறுத்திக்கொண்டார். இதனால், செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி செய்தி களிலும் அவர் அதிகம் பேசப்பட்டார் என்பதில் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சி!

வெவ்வேறு துருவங்களான பிரசாந்த் பூஷண் முதல் குமார் விஸ்வாஸ் வரை பலரை அவர் இணைத்துக்கொண்டுள்ளார். சில வேளைகளில், பொது இடங்களில் நிதானமிழந்துவிடுகிறார்.

மோடிக்குப் பெரும் சவாலாக உருவெடுத்து விட்ட கேஜ்ரிவால், டெல்லி முதல்வராவாரா என்பது இந்த மாதம் 10-ம் தேதி தெரிந்துவிடும். (பிப்ரவரி 7 வாக்குப்பதிவு நாள்).

*

சாதிப்பாரா இரும்புப் பெண்?

- சௌமியா அசோக், வர்கீஸ் கே. ஜார்ஜ்

பாஜகவில் சேர்ந்த 24 மணி நேரத்துக்கெல்லாம் முதல் முறையாகத் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேச கிரண் பேடி எழுந்தபோது அவர் என்ன பேசுவார், எப்படிப் பேசுவார் என்று ஏதும் புரியாமல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அடுத்த முதல்வர் யார் என்பதில் தங்களுக்குள் சண்டையைத் தொடங்கிய டெல்லி பாஜக தலைவர்களால்தான், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான கிரண் பேடியைக் கட்சித் தலைமை முதல்வர் பதவிக்கான வேட்பாளராகக் களமிறக்க நேர்ந்தது. பேடியின் அறிமுகக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு, ஒருவரையொருவர் தோளோடு தோள் இடித்துக்கொண்டு, அசுவாரசியமாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். மோடியின் விறுவிறுப்பான பிரச்சார முறை களால் கடந்த ஓராண்டாக உற்சாகத்துடன் துள்ளிக்கொண்டிருந்த தொண்டர்கள், அமைதிக் கடலாக அடங்கிக் கிடந்தார்கள். தொடக்கமே சோபிக்கவில்லை.

எழுந்து போங்கள்!

“தீவிர அரசியலுக்கு வர நான் ஏன் முடிவு செய்தேன்? மோடிஜியின் பேச்சை அடுத்தடுத்துக் கேட்டதால்தான்! எப்பேர்ப்பட்ட தலைமைப் பண்புகள் அவரிடம் இருக்கின்றன” என்று பீடிகையோடு ஆரம்பித்த கிரண் பேடி, டெல்லி மாநகரப் பெண்களின் பாதுகாப்புக்காகத் தான் வகுத்த 6-பி உத்தியை விவரிக்க ஆரம்பித்தார். டெல்லி மாநில பாஜக பொறுப்பாளரான பிரபாத் ஜா புன்சிரிப்பை அடக்க முடியாமல் சிரமப்பட்டார். அனைவரும் ஒருவரையொருவர் வியப்புடன் பார்த்துக்கொண்டனர்.

“ஏதாவது தமாஷாகப் பேசுவேன் என்று எதிர்பார்த்தீர்களா, சொல்லுங்கள், சொல்லுங்கள்?” என்று கேட்ட பேடி, “அப்படிப் பட்ட எதிர்பார்ப்பிருந்தால் எழுந்து போங்கள்” என்று கறாராகச் சொல்லிவிட்டார். அந்தக் காட்சிகள் காணொலியாக எடுக்கப்பட்டு உடனே மக்களிடையே பரவியது.

அடுத்த 10 நாட்களுக்குக் கூட்டங்களில் பேசிப் பேசியே அவருக்குத் தொண்டை கட்டிக்கொண்டது. “அவருடைய பேச்சு தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த வில்லை. மேற்கொண்டு தர்மசங்கடம் வேண்டாம் என்று கட்சித் தலைமை அவரைப் பேச விடாமல் செய்துவிட்டது” என்று பலர் கேலி செய்தார்கள்.

“நேர்மையான, உறுதிமிக்க அதிகாரி என்று அவர் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால், அவர் பேசத் தொடங்கினால் கேட்கவே முடியவில்லை” என்று ஓர் இளம் பெண் ஏமாற்றம் தெரிவித்தார். “46 வயது அர்விந்த் கேஜ்ரிவாலை எதிர்த்துக் களத்தில் முதல்வர் வேட்பாளராக இறக்க டெல்லியில் பாஜகவிடம் யாருமில்லை. எனவே, தலைமைக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. கிரண் பேடியால் அதிசயத்தை நிகழ்த்திவிட முடியாது என்று தெரியும். அவரும் இல்லாவிட்டால் எங்கள் நிலைமை இன்னமும் மோசமாகியிருக்கும்” என்றார் பாஜக பிரமுகர் ஒருவர்.

தொண்டர்ஜியே சரணம்

இருந்தாலும், பேடி தனது முயற்சியைக் கைவிடவில்லை. தான் போட்டியிடும் கிருஷ்ணா நகர் பேரவைத் தொகுதிக்குத் தினமும் ஒரு சுற்று செல்கிறார். நடந்தோ, சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறியோ, திறந்த ஜீப்பில் நின்றுகொண்டோ வாக்கு சேகரிக்கிறார். அவருடன் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனும் செல்கிறார்.

‘இரும்புப் பெண் ’ என்று வர்ணிக்கப்பட்ட கிரண் பேடியால் வாக்குகளை அள்ளிவிட முடியாது என்பதைக் கட்சித் தலைமை ஊகித்துவிட்டது. தேர்தல் கூட்டங்களில் கட்சித் தொண்டர்களை அவர் கடிந்துகொள்வது, சுதந்திரப் போராட்டத் தியாகிக்கு காவி வஸ்திரத்தைப் போர்த்தியது, தொலைக்காட்சிகளுக்குத் தொடர்ந்து பேட்டி அளித்ததெல்லாம் கட்சித் தலைமைக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.

தாங்கள் நினைத்தபடி பேடியின் வருகை உதவவில்லை என்பதால், கட்சிக்கு ஆதரவைத் திரட்ட மாற்று வழிகளில் கட்சி இறங்கிவிட்டது. மத்திய அமைச்சர்கள் பலர் இப்போது சூறாவளியாகச் சுழன்று வாக்கு சேகரிக்கிறார்கள்.

“மோடிஜி வருவார், கிரண் பேடிஜி வருவார்; ராஜ்நாத் சிங்ஜி, சுஷ்மாஜி, அருண் ஜேட்லிஜி என்று பலர் வந்தாலும் வாக்குச் சாவடியில் இருக்கப்போகும் தொண்டர்ஜிதான் வெற்றிக்குக் காரணமாக இருக்கப்போகிறார்” என்று கட்சித் தலைவர் அமித் ஷா வெளிப்படையாகவே பேசி விட்டார்.

களமிறங்கும் ஆர்.எஸ்.எஸ்.

கிரண் பேடிதான் முதல்வர் பதவி வேட்பாளர் என்று அறிவிக் கப்பட்ட உடனேயே டெல்லி பாஜக தலைவரான சதீஷ் உபாத்யாய கட்சித் தொண்டர்களுக்குத் திறந்த மடல் எழுதினார். “உங்களுக்கு எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, டெல்லியைக் கைப் பற்றக் கடுமையாக உழையுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆர்.எஸ்.எஸ்ஸும் பக்கத்தில் உள்ள மாநிலங்களிலிருந்து தொண்டர்களை வரவழைத்துக் களத்தில் இறக்கியிருக்கிறது. மத்திய அரசின் பலமும் இருப்பதால் கிரண் பேடியை எளிதில் தோற்கடித்துவிட முடியாது என்பதும் புரிகிறது. ஆக, டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

©'தி இந்து' ஆங்கிலம் | தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x