Last Updated : 25 Feb, 2015 09:20 AM

 

Published : 25 Feb 2015 09:20 AM
Last Updated : 25 Feb 2015 09:20 AM

கருத்துச் சுதந்திரத்துக்கு 7 அச்சுறுத்தல்கள்

இந்தியா என்பது 50:50 ஜனநாயக நாடுதான் என்பது என்னுடைய நீண்ட நாள் கருத்து. சுதந்திரமான-நியாயமான தேர்தல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல முடிவது போன்ற அம்சங்களில் மட்டுமே உலகின் பல நாடுகளைப் போல நாமும் ஜனநாயக நாடு; மற்ற அம்சங்களில் குறிப்பிடத் தக்க வகையில் பின்தங்கியிருக்கிறோம். கருத்துச் சுதந்திரம் அதில் ஒன்று.

கருத்துச் சுதந்திரத்துக்கான முதல் அச்சுறுத்தல் நம்முடைய அரசியல் சட்டப் புத்தகத்தில் இன்னும் நீக்கப்படாமல் இருக்கும் காலனியாதிக்கக் காலத்துப் பழைய சட்டங்கள். வென்டி டோனிகரின் ‘தி ஹிந்துஸ்: ஆன் ஆல்டர்நேடிவ் ஹிஸ்டரி’ புத்தகத்தைத் தடை செய்யக் கோரிய தீனநாத் பாத்ரா, இந்திய பீனல் கோடின் குறிப்பிட்ட 6 பிரிவுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றின்படி அந்த நூல் தடை செய்யப்பட வேண்டியது என்று வாதாடினார்.

அந்தச் சட்டப் பிரிவுகள்: 153 (கலவரத்தை ஏற்படுத்து வதற்காக வேண்டுமென்றே சீண்டுவது), 153ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகிய காரணங்களுக்காக இரு வெவ்வேறு குழுக்களிடையே விரோதத்தை வளர்ப்பது, ஒற்றுமையைப் பராமரிப்பதற்கு ஊறு செய்வது), 295 (எந்த மதத்தையும் இழிவுபடுத்த வழிபாட்டிடத்தைச் சேதப் படுத்துவது அல்லது அசுத்தப்படுத்துவது), 295ஏ (வேண்டு மென்றே, தீய நோக்கத்துடன் ஒரு வகுப்பாரின் மத நம்பிக்கை களையும் உணர்வுகளையும் அவமதிக்க நினைப்பது), 298 (எந்த ஒருவரின் மத உணர்வையும் வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கில் பேசுவது), 505 (பொதுவாக விஷமத்தைத் தூண்டும் வகையில் பேசுவது அல்லது எழுதுவது) ஆகியவை.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கட்டோடு வெறுக்கும் தாமஸ் பாபிங்டன் மெக்காலேதான் இந்தப் பிரிவுகளை வகுத்தவர். இந்தியக் கலாச்சாரத்தை பிரிட்டிஷ் ஆட்சி எப்படிக் கெடுத்துவிட்டது என்று ஆர்.எஸ்.எஸ். அடிக்கடி பகையுணர்வுடன் பேசுகிறது அல்லது எழுதுகிறது. அதே சமயம் தங்களுக்குச் சாதகமாக இருக்கும்போது அதே காலனியாதிக்க அரசின் சட்டங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஜனநாயக நாட்டுக்குப் பொருந்தாத பழைய சட்டங்களை அழிக்காமல் அதை அப்படியே சட்டப் புத்தகத்தில் வைத்திருக்கும் அரசுகளும் இதற்கு முக்கியக் காரணம். மேலே கூறிய சட்டப் பிரிவுகள் அல்லாமல் வேறு சில பிரிவுகளும், புத்தகங்களையும் திரைப்படங்களையும் தடை செய்வதற்கு ஏதுவாக இந்திய பீனல் கோடிலும் கிரிமினல் புரொசிஜர் கோடிலும் இன்னமும் நீடிக்கின்றன.

முதல் சட்டத் திருத்தம்

இந்திய அரசியல் சட்டம் எல்லையற்ற பேச்சு (கருத்து) சுதந்திரத்தைத்தான் முதலில் அளித்தது. ஜவாஹர்லால் நேரு பிரதமராகவும், பி.ஆர். அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் இருந்தபோது 1951 மே மாதம் கொண்டுவரப்பட்ட முதல் சட்டத் திருத்தம்தான், ‘நாட்டின் பாதுகாப்புக்கும், வெளி நாடுகளுடனான நட்புறவுக்கும், பொது அமைதிக்கும்’ அச்சுறுத்தலாக விளங்கும் பருவ இதழ்கள், புத்தகங்கள் ஆகியவற்றையும், அதே காரணத்துக்காகப் புத்தகங்கள், செய்தித்தாள்கள், திரைப்படங்கள் போன்றவற்றையும் தடை செய்ய வழிவகுத்தது.

டி.எச். லாரன்ஸ் எழுதிய ‘லேடி சேட்டர்லியின் காதலன்’ என்ற நாவல், ‘ஆபாசமான வெளியீடுகளைத் தடை செய்யும் சட்டப்படி’ பிரிட்டனில் தடை செய்யப்பட்டது. அதே சட்டத்தின் மற்றொரு பிரிவு தரும் விலக்கைச் சுட்டிக்காட்டி, அந்தப் புத்தகத்தின் மீதான தடையை விலக்கக் கோரி வாதாடி வெற்றி பெறப்பட்டது. நாவலின் சில அத்தியாயங்கள் ஆபாசமாக இருந்தாலும் அறிவியல், இலக்கியம், கலை, கற்றல் அல்லது பொதுநலன் ஆகியவற்றுக்கு அந்த நூல் உதவுமென்றால் அதை அனுமதிக்கலாம் என்று அதே சட்டத்தின் பிற்பகுதி அனுமதிக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இந்தியச் சட்டத்தில் இப்படி அனுமதிக்கும் பிற்பகுதி எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் டோனிகரின் நூல் மீதான தடையையும் விலக்கியிருக்க முடியும். இலக்கியத் தரமுள்ள அந்த நூல் பொது அறிவை வளர்ப்பதற்கும் மிகவும் பயனுள்ளது.

நீதித்துறை

கருத்துச் சுதந்திரத்துக்கு அடுத்த அச்சுறுத்தல் நீதித் துறை மூலம் வருகிறது. திரைப்படங்கள், புத்தகங்கள், ஓவியங்கள் போன்றவற்றுக்குக் காலனியாதிக்கக் காலச் சட்டத்தின் கீழ் தடை கோரி யாராவது மனு செய்தால், கீழமை நீதிமன்றங்கள் துடிப்பாக மனுவை விசாரித்து, தடையை விதித்துவிடுகின்றன. எந்த நீதிமன்றத்தில், எந்த நீதிபதியிடம் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்காடுபவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. டெல்லியில் பிரசுரமாகும் ‘தி கேரவான்’ இதழுக்கு எதிராக அசாம் மாநிலத்தின் சில்சார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது. பாத்ராவும் பல வழக்குகளை தேரா பஸ்ஸி என்ற ஊரில் உள்ள நீதிமன்றத்தில்தான் தொடுப்பார்.

உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதில் கவனமாகச் செயல்படுபவை என்பது உண்மைதான் என்றாலும், தடை விதிக்கப்பட்ட பிறகு வழக்கு மேல் விசாரணைக்கு வந்து வாதப் பிரதிவாதங்கள் நடந்து இறுதித் தீர்ப்பு வர அல்லது தடை விலக்கப்பட பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. ஒருசில பதிப்பாளர்களும், தனிநபர்களும்தான் நல்ல தீர்ப்பைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் அளவுக்குப் பண வசதி, பொறுமை அல்லது துணிச்சல் படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஓவியர் எம்.எஃப். ஹுசைனின் ஓவியத்துக்கு எதிராக வழக்கு தொடுப்பதென்று தீர்மானித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் விஸ்வ ஹிந்து பரிஷத்தும் நாட்டின் வெவ்வேறு ஊர்களில் மனுக்களைத் தாக்கல் செய்தன. ஹுசைனின் வழக்கறிஞர்கள் மிகவும் முயன்று அனைத்து மனுக்களையும் ஒருசேர உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று மனுசெய்து வெற்றி பெற்றார்கள். அதற்குள் மாதங்கள் பல ஓடிவிட்டன. 90 வயதை எட்டிவிட்ட ஹுசைன் வருத்தத்தில் ஆழ்ந்து, விரக்தி காரணமாக அனைவரையும் விட்டு விலகி தனித்து வாழத் தொடங்கிவிட்டார்.

காவல் துறை

கருத்துச் சுதந்திரத்துக்கு மூன்றாவது அச்சுறுத்தலாகத் திகழ்வது காவல் துறையினரின் நடத்தை. எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் அணிவகுத்தாலும் குண்டர்கள், சகிப்புத்தன்மையற்ற முரடர்களுக்கு ஆதரவு காட்டுவதைப் போல காவல் துறையினரின் செயல்கள் அமைந்துவிடுகின்றன. மராட்டிய மன்னர் சிவாஜியைப் பற்றி ஜேம்ஸ் லெய்ன் எழுதிய அறிவார்த்தமான புத்தகத்தின் மீதான தடையை உயர் நீதிமன்றம் விலக்கினாலும்கூட, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களெல்லாம் பதிப்பாளரின் மும்பை அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தாக்குவார்கள் அதை போலீஸார் தடுக்காமல் வேடிக்கைதான் பார்ப்பார்கள் என்ற அச்சத்தில் புத்தகத்தை விற்பனைக்கு விடவே நிறுவனத்தார் அஞ்சினார்கள். அகமதாபாதில் ஹுசைன் தோஷியின் கூஃபா என்கிற (குகை) தரையடி ஓவியக் கண்காட்சிக் கூடத்தை பஜ்ரங்தளத் தொண்டர்கள் சேதப்படுத்தியபோது குஜராத் போலீஸார் அவர்களைத் தடுக்கவில்லை.

கருத்துச் சுதந்திரத்தை போலீஸார் வேறு வழிகளிலும் தடைசெய்கிறார்கள். 1988-ல் என்னுடைய சொந்த மாநிலமான உத்தராகண்டில் சாராய சாம்ராஜ்யம் குறித்துப் பத்திரிகை களில் எழுதிய இளம் பத்திரிகையாளர் உமேஷ் தோபால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய உயிருக்குப் பலமுறை அச்சுறுத்தல்கள் வந்தன. போலீஸார் அதை பொருட்படுத்தவேயில்லை. அவரது கொலைக்குப் பிறகுகூட கொலைகாரர்களைக் கைதுசெய்யவோ, வழக்கு போடவோ அக்கறை காட்டவேயில்லை. சமீப காலத்தில் அதே மாநிலத்தில் ஹேம் பாண்டே என்ற பத்திரிகையாளர் ‘போலி மோதலில்’ சுட்டுக்கொல்லப்பட்டார். பத்திரிகையாளர்களின் சுதந்திரச் செயல்பாட்டுக்குக் கடிவாளம் போடவே காவல் துறை விரும்புகிறது.

அஞ்சி நடுங்கும் அரசியல் தலைவர்கள்

கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாக எந்தப் பிரதமரும் எந்த முதலமைச்சரும் வலுவாகக் கருத்து தெரிவித்ததில்லை. பல முதல்வர்களும் சில பிரதமர்களும்கூட தடைகோரும் கும்பல்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளார்கள். சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானின் கவிதைகள்’ நூலைத் தடை செய்யக் காரணமாக இருந்தவர் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி. தஸ்லிமா நஸ்ரினின் படைப்புக்குத் தடை விதித்த மேற்கு வங்கத்தின் இடதுசாரி அரசு, அவர் அந்த மாநிலத்தில் வசிப்பதற்குக்கூட அனுமதிக்கவில்லை. குஜராத்தின் முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் அதிகாரபூர்வமாகவும் வேறு விதங்களிலும் புத்தகங்கள், திரைப்படக் காட்சிகள், ஓவியக் கண்காட்சிகளுக்குத் தடை விதித்திருக்கிறார் மோடி.

நாவலாசிரியர் பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நூல் விவகாரம் சமீபத்திய உதாரணம். தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சி எதுவும் அவருக்கு ஆதரவாகக் களத்தில் நிற்கவில்லை. பெருமாள்முருகனுக்குப் பாதுகாப்பு தருவதற்குப் பதிலாக அவரை மிரட்டி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வைத்தது உள்ளூர் நிர்வாகம்.

அரசை நம்பியிருக்கும் ஊடகங்கள்

மாநில ஊடகங்கள் தங்களுடைய வருவாய்க்கு அரசு தரும் விளம்பரங்களையே பெரிதும் நம்பியிருக்கின்றன. இதனால் ஆளும் கட்சியின் தவறுகளையும் அமைச்சர்களின் ஊழல்களையும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டத் தயங்குகின்றன. இது இன்னொரு அச்சுறுத்தல்.

அச்சு ஊடகமானாலும் காட்சி ஊடகமானாலும் தனியார் நிறுவனங்கள் தரும் விளம்பரங்கள் மூலம்தான் அதிக வருவாயைப் பெறுகின்றன. இது ஆங்கிலப் பத்திரிகை களுக்கும் ஊடகங்களுக்கும் மிகவும் பொருந்தும். உயர் மத்தியதர வகுப்பினர்தான் இவற்றின் புரவலர்கள். கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள், குளிர்சாதனங்கள், ஸ்மார்ட் போன்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் என்று பல்வேறு நுகர்வுப் பண்டங்களின் தயாரிப்பாளர்கள்தான் அதிக விளம்பரங்களை அளிக் கிறார்கள். அவர்களுடைய வியாபார நலனுக்கு ஏற்பத்தான் ஊடகங்கள் செயல்பட வேண்டியதாகிவிட்டது. இது மற்றொரு அச்சுறுத்தல். சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான விஷயங்களைப் பற்றிய செய்திகளைகூட வெளியிட அஞ்சி சுய தணிக்கை செய்துகொள்கின்றன ஊடகங்கள். சுரங்கத் தொழில், ரசாயனத் தொழில், எண்ணெய் நிறுவனங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகளைப் பற்றிய செய்திகளை வெளியிட்டால், விளம்பர வருவாய் போய்விடுமே என்று அஞ்சி வெளியிடுவதே இல்லை பல ஊடகங்கள்.

அடிமை எழுத்தாளர்கள்

“எழுத்தாளர் என்பவர் எந்த அரசியல் கட்சிக்கும் விசுவாசத் தொண்டராக இருக்கக் கூடாது” என்றார் ஜார்ஜ் ஆர்வெல். இந்தியாவில் ஏராளமான எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தனிநபர்கள் போன்றோரிடம் தங்களுக்குள்ள விசுவாசத்தை வெளிப்படையாகவே காட்டிக்கொள்கிறார்கள். இது அரசியல் தளத்திலும் பிரதிபலிக்கிறது. பாஜகவின் பிரச்சாரகர்கள், காங்கிரஸின் பத்திரிகைத் தொடர்பாளர்கள், மார்க்சிஸ்ட் கட்சிக்காகப் பரிந்து பேசுகிறவர்கள், நக்சலைட்களுக்காகக் குரல்கொடுப்பவர்கள் என்று எழுத்தாளர்கள், பத்திரிகையாளர் களில் பலர் தீவிர விசுவாசிகளாக இருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரத்துக்கு இவர்களும் அச்சுறுத்தல்களே.

இத்தகைய 7 விதமான அச்சுறுத்தல்கள்தான் இந்திய ஜனநாயகத்தின் தார்மிக, அமைப்புரீதியான அடித்தளங்களை வலுவிழக்கச் செய்கின்றன. சீனா, ரஷ்யாவைவிட நம் நாட்டு எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்படத் தயாரிப் பாளர்களுக்குச் சுதந்திரம் அதிகம்தான் என்றாலும் கனடா, சுவீடன் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது முழுச் சுதந்திரம் இல்லையென்று கூறிவிடலாம்.

- ராமச்சந்திர குஹா, ‘இந்தியா ஆஃப்டர் காந்தி’ உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர்;

| தமிழில்: சாரி |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x