Published : 21 Feb 2015 09:04 AM
Last Updated : 21 Feb 2015 09:04 AM

மதச்சார்பின்மை என்பது விருப்பத் தேர்வல்ல, அடிப்படை!

ஒருவழியாக நமது பிரதமர் மவுனம் கலைத்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, தனது அரசாங்கம் அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் சமமாக மதிக்கிறது என்றும், எந்த மதத்தினரும் அடுத்தவர் மீது வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெறுப்பை உமிழ்வதைத் தன்னுடைய அரசு அனுமதிக்காது என்றும் பேசியிருக்கிறார்.

சிறுபான்மையினர் மீது இந்துத்துவ அமைப்புகள் ஏவிவிடும் வெறுப்புப் பிரச்சாரத்துக்கும் வன்முறைக்கும் எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற தொடர் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, மோடி அந்தப் பிம்பத்தைச் சரிசெய்துகொள்ளும் வகையில் இப்படிப் பேசியிருக்கிறார். சிறுபான்மையினரிடம் இந்துத்துவா அமைப்புகள் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சு சற்றே ஆசுவாசப்படுத்தும் என்பதில் சந்தேகமிருக்க முடியாது. மோடி அப்படிப் பேசிய இடமும் நிகழ்ச்சியும் அவரது பேச்சுக்குக் களம் அமைத்துக்கொடுத்திருக்கிறது எனலாம். சமீப சில வாரங்களாக கிறிஸ்தவத் தேவாலயங்கள் தாக்கப்படும் புதுடெல்லியில், கத்தோலிக்க சைரோ-மலபார் திருச்சபையின் நிகழ்ச்சியில்தான் அப்படிப் பேசியிருக்கிறார்.

அதே நேரத்தில், மதச் சிறுபான்மையினருக்கு எதிராகத் தனது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெறுப்பை உமிழ்ந்தபோதெல்லாம் கண்டிக்காமல் வாய் மூடிக்கொண்டு இருந்தவர் நம் பிரதமர் என்பதை நாம் மறந்துவிட முடியாது. பிரதமர் பேசியது மட்டும் போதாது; அவருடைய வார்த்தைகள் செயலில் பிரதிபலிக்க வேண்டும். பாஜகவினரும் மற்ற இந்துத்துவ அமைப்புகளும் சிறுபான்மையினரிடம் இனிமேல் நடந்துகொள்ளும் விதம் மட்டுமே பிரதமரின் பேச்சை அர்த்தமுள்ளதாக மாற்றும்.

சிறுபான்மையினர் விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக மோடி அரசாங்கம் குழப்பமான சமிக்ஞைகளையே அனுப்புகிறது. அரசின் உயர்நிலையில் உள்ளவர்கள் கவனத்துடன் பேசும் அதே நேரத்தில், இடைநிலையிலும் கீழ்நிலையிலும் உள்ளவர்கள் தங்கள் பேச்சுகளாலும் செயல்களாலும் எல்லையைத் தாண்டுகிறார்கள். ஆளும் கட்சி என்ற அளவில் தனது அரசியல் கடமையை நிறைவேற்றுவதா, இல்லை தனது அடித்தளமான இந்துத்துவத்துக்கு உண்மையாக நடந்துகொள்வதா என்ற குழப்பத்தில் பாஜக இருதலைக்கொள்ளியாகத் தவிப்பது துலக்கமாகவே தெரிகிறது.

மதச்சார்பின்மை என்பது ஓர் அரசாங்கம் விரும்பினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளக் கூடிய கொள்கைகளுள் ஒன்று என்பதுபோல், பாஜகவில் உள்ள பலரும் கருதுவதாகவே தோன்றுகிறது. அப்படியல்ல, அரசமைப்புச் சட்டத்துக்கு உயிர்கொடுக்கும் அடிப்படைகளுள் ஒன்றுதான் மதச்சார்பின்மை. இந்தியக் குடியரசைப் பற்றி விளக்குவதற்கு ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் 1976-ல் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால், தான் விரும்பிய மதத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவருக்கு உள்ள சுதந்திரம், மதத்தைப் பரப்புவதில் உள்ள சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படை உரிமைகளுள் சிலவாக அரசியல் சட்டப் பிரிவு-25 நமக்கு வழங்குகிறது. ஆகவே, அந்த அடிப்படை உரிமைகளைக் காப்பதே இன்றைய சூழலில் இந்திய அரசின் தலையாய கடமை.

மதச் சுதந்திரம் என்பது எந்த ஒரு ஜனநாயகத்தோடும் பிரிக்க முடியாத அம்சம். இந்தியாவும் தனது குடிமக்களின் மதச் சுதந்திரத்தைக் காப்பாற்றாமல் ஒரு ஜனநாயக நாடாக இருந்துவிட முடியாது. தனது குடிமக்களின் ஜனநாயக உரிமைகளுள் ஒன்று நசுக்கப்படுவதை ஒரு அரசு தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருக்குமென்றால், தார்மிகரீதியில் அது தனது தகுதியை இழந்துவிடும். அந்தப் பாதையை நோக்கித் தனது அரசு செலுத்தப்படுவதை நிச்சயம் மோடி விரும்ப மாட்டார் என்றே நம்புவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x