Last Updated : 24 Feb, 2015 08:59 AM

 

Published : 24 Feb 2015 08:59 AM
Last Updated : 24 Feb 2015 08:59 AM

மம்தா பூமியில் மையம்கொள்ளும் அரசியல் புயல்!

பிஹாரில் சுழன்றடித்த அரசியல் அலை, ஒருவழியாக ஓய்ந்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், தனக்கே பெரும் சவாலாக உருவெடுத்து அலைக்கழித்த ஜிதன் ராம் மாஞ்சியிடமிருந்து ‘தனக்குரிய இடத்தை’ மீண்டும் பெற்றுவிட்டார். ஆனால், மேற்கு வங்கத்தில் அரசியல் புயல் மெல்ல மெல்ல உருக்கொள்வது தெரிகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான முகுல் ராய்க்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையில் நடக்கும் மவுன யுத்தம், விரைவில் பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோபத்துக்குக் காரணம்!

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ், “சாரதா நிதிநிறுவனத்தின் செயல்பாட்டில் மம்தா பானர்ஜியும் முகுல் ராயும் முக்கியப் பங்கு வகித்தார்கள்” என்று கூறியிருந்தார். இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்த முகுல் ராய், சாரதா நிதிநிறுவன அதிபர் சுதிப்தா சென்னை மலைவாசஸ்தலமான காலிம்போங்கில் மம்தா பானர்ஜி சந்தித்தபோது தானும் உடன் இருந்ததாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். இது மம்தாவின் கோபத்தை அதிகரித்தது. அப்படி எந்த ஒரு சந்திப்பும் நடக்கவில்லை என்று மறுத்தார்.

சாரதா நிதி நிறுவன ஊழல் விவகாரம் தொடர்பாக முகுல் ராயை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியபோது, “முகுல் ராயை சிபிஐ மிரட்டுகிறது. அவர் கடும் மன அழுத்தத்தில் இருப்பது அவரது முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. சிபிஐ-யைப் பயன்படுத்தி கட்சியைப் பிளவுபடுத்த பாஜக முயல்கிறது” என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். ஆனால், “பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்ட இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் செல்வேன்” என்று முகுல் ராய் கூறியது கட்சிக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அத்துடன், சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டத்துக்கு முகுல் ராய் வராமல் தவிர்த்துவிட்டார். இதைத் தொடர்ந்து கட்சிக்குள் அவரது அதிகாரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை மம்தா எடுக்கத் தொடங்கினார். தனது நம்பிக்கைக்குரிய சுப்ரதா பக்‌ஷியிடம் முகுல் ராயின் பொறுப்புகளை மம்தா வழங்கினார். அதேபோல், முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியும் அதிருப்தியில் இருக்கிறார். அவ்வப்போது மோடி புகழ்பாடும் அவரைச் சரிகட்ட அவருக்குக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பதவி வழங்கப்பட்ட பின்னரும் அவர் கட்சிக் கூட்டங்களுக்கு வராமல் புறக்கணித்துவருகிறார்.

நீண்ட கால நட்பு

1998-ல் காங்கிரஸிலிருந்து பிரிந்து திரிணமூல் கட்சியை மம்தா தொடங்கிய காலத்துக்கு முன்பிருந்தே அவரது நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் முகுல் ராய். கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து அதன் பொதுச் செயலாளராக இருந்துவருபவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தபோது ரயில்வே அமைச்சராக இருந்த, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தினேஷ் திரிவேதி அறிவித்த ரயில்வே பட்ஜெட் தொடர்பாக அதிருப்தியில் இருந்த மம்தா அவரை நீக்கிவிட்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், முகுல் ராயை ரயில்வே அமைச்சராக்கினார். ஆனால், காலம் இருவரையும் பிரித்துவிட்டது. அதேசமயம், பாஜகவில் இணைவது பற்றியோ தனிக்கட்சி தொடங்குவது பற்றியோ முகுல் ராய் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

முகுல் ராயின் மகனும் பீஜ்புர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான சுப்ராங்ஷூ ராய் மீதும் கட்சித் தலைமை அதிருப்தியில் இருக்கிறது. சமீபத்தில், நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், அக்கட்சியின் வாக்கு விகிதம் குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. (அதேசமயம், மார்க்சிஸ்ட் கட்சியின் வாக்குகள் பாஜகவுக்குச் சென்றிருப்பது குறிப்பிடத் தக்கது!) இதுகுறித்து விமர்சனம் செய்த சுப்ராங்ஷூ ராயைக் கண்டித் திருக்கும் கட்சித் தலைமை, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண் டிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகிவருகிறது. கட்சிக் குள் வீசும் புயலையும், பாஜக அடுத்தடுத்து வகுக்கும் வியூகங்களையும் சமாளிப்பதுதான் மம்தாவின் தற்போதைய இலக்கு எனலாம்!

- வெ. சந்திரமோகன் தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x