Published : 27 Feb 2015 09:07 AM
Last Updated : 27 Feb 2015 09:07 AM

நம்பிக்கையை வலுப்படுத்துமா புதிய கூட்டணி?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி அரசு அமைப்பதென்ற ஆபத் தான, அதே சமயம் துணிச்சலான முடிவை மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பி.டி.பி.), பாரதிய ஜனதாவும் சேர்ந்து எடுத்துள்ளன. இது அரசியல் கூட்டணி அல்ல, மாநிலத்தை நிர்வகிப்பதற்கான கூட்டணி என்று அதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

இரு கட்சிகளும் சேர்ந்து செயல்பட முன்வந்திருப்பதும், தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய பேச்சுகளைத் தள்ளிவைத்துவிட்டு, மாநில மக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் உழைப்பது என்று முடிவெடுத்திருப்பதும், அதற்கு எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக மத்திய அரசு முன்வந்திருப்பதும் ஆக்கபூர்வமான சமிக்ஞைகள். இவ்விரு கட்சிகளும் சேர்ந்து அமைக்கும் அரசால், மாநிலத்தின் இரண்டு சமூக மக்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் இருக்கும் என்பதும் தனிச் சிறப்பு.

இருபெரும் கட்சிகள் சேர்ந்து அரசை அமைப்பதாலேயே இனி எல்லாம் சுலபமாகிவிடும் என்று கருதிவிட முடியாது. மாநிலம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைப் பட்டியலிடுமாறு இரு கட்சிகளின் சார்பில் பேச்சு நடத்தியவர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து தரும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும் என்ற தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை இப்போதைக்குத் தள்ளிவைத்துவிட பாஜக ஒப்புக்கொண்டுள்ளது. பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் பள்ளத்தாக்குக்குத் திரும்பி முன்புபோல வாழ வேண்டும், பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளின் மறுவாழ்வுக்கு உதவ வேண்டும் என்று இரு கட்சிகளும் மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டிருப்பதை வரவேற்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இந்துக்களுக்குத் தனிப் பிரதேசம் வேண்டும் என்று கோரி 1990 டிசம்பரில் தொடங்கப்பட்ட ‘பனூன் காஷ்மீர்’ என்ற பண்டிட்டுகளின் அமைப்பு, பி.டி.பி.-பாஜக கூட்டணி அமைவதைக் கடுமையாக எதிர்த்துள்ளது, சற்றே சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காஷ்மீரில் அமலில் இருக்கும் ‘ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை’ படிப்படியாக விலக்கிக்கொண்டுவிட வேண்டும் என்பது பி.டி.பி-யின் முக்கியமான கோரிக்கை. இந்நிலையில், முதலமைச்சராகப் பதவி ஏற்கப்போகும் முஃப்தி முகம்மது சய்யீதின் முன் ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. தன்னுடைய அரசியல் அனுபவம், ராஜதந்திரம், மக்களிடம் உள்ள செல்வாக்கு ஆகிய அனைத்தையும் பயன்படுத்தி, அவர் இந்தச் சவால்களில் வெற்றிபெற வேண்டும். இதற்கு முன்னால் ஆட்சி யில் இருந்தவர்களைப் போலல்லாமல், மத்திய அரசுடனான உறவில் நட்புரீதியிலான அணுகுமுறையை மேற்கொள்வது காஷ்மீருக்கு நல்லது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் முழு அமைதி திரும்புவதை நோக்கமாகக் கொண்ட அணுகுமுறைகளைப் பிரதமர் மோடியும் கையாள வேண்டும். காஷ்மீர் பிரச்சினையில் தொடர்புள்ள அனைவரையும் அழைத்துப் பேச வேண்டும். பாகிஸ்தான், ஹுரியத் அமைப்பு ஆகியவற்றுடன் தனித்தனியாகப் பேச வேண்டும். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தி அமைதியை நிலைநாட்டுவது, சுதந்திர வர்த்தகத்தையும், பயணத்தையும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு வழியாக அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.

எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் நம்பிக்கையை மட்டும் காஷ்மீர் மக்கள் இழக்கவில்லை என்பதையே தேர்தலும் தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன. அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவதே புதிய அரசின் கடமையாக இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x