Published : 26 Jan 2015 11:37 AM
Last Updated : 26 Jan 2015 11:37 AM

அடேயப்பா, பாதுகாப்பு!

வந்தாலும் வந்தார் ஒபாமா. டெல்லி ஆடாத ஆட்டம் ஆடுகிறது. பந்தோபஸ்து என்றால் பந்தோபஸ்து, உண்மையாகவே வரலாறு காணாத பந்தோபஸ்து.

ராஜபாட்டையின் மாறுவேஷக்காரர்கள்

டெல்லி ராஜபாட்டையைச் சுற்றியுள்ள வீதிகளில் யாரெல்லாம் மக்கள், யாரெல்லாம் மாறுவேஷப் பாதுகாவலர்கள் என்று தெரியாத அளவுக்கு ஆட்களை இறக்கிவிட்டிருக்கின்றன பாதுகாப்பு அமைப்புகள். டெல்லியைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல், மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் என்று பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சிறப்பு நிபுணர்கள் கேட்டு வாங்கப்பட்டிருக்கிறார்கள். ஆளுக்கொரு வேஷத்தில் ஒரு பெருங்கூட்டமே வீதிவீதியாகத் திரிந்துகொண்டிருக்கிறது.

அந்த 200 பேர்

பாதுகாப்புத் துறையின் தூக்கத்தை அதிகம் கெடுத்திருப்பது புலனாய்வு அமைப்புகள் கொடுத்திருக்கும் 200 பேர் பட்டியல். லஷ்கர், ஜெய்ஷ்-இ-முஹம்மது, ஹிஜ்புல், ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லமி, ஜமாஅத்-உல்-முஜாஹிதீன், சிமி, மாவோயிஸ்ட்டுகள், வட-கிழக்கு; பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த பயங்கரவாதிகள், மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா சிறையிலிருந்து கடந்த ஆண்டு தப்பியோடிய 5 சிமி உறுப்பினர்கள் இப்படிப் பல்வேறு அமைப்புகளின் சந்தேக முகங்களையும் கொண்டது இந்தப் பட்டியல். இவர்களெல்லாம் மாறுவேஷத்தில் வந்தால் எப்படியிருப்பார்கள் எனும் யூகப் படங்களும் அதில் உண்டு. ‘அவனா நீயி?’ சந்தேகத்தோடு, கண்ணில் படுபவர்களையெல்லாம் துருதுருவெனத் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

வானம் பார்த்திருக்கும் பீரங்கி

தரையில் மட்டுமல்ல; வானிலிருந்தும் கண்காணிக்கிறார்கள். எல்லாம் தகவல் தொழில்நுட்பம் உபயம். தவிர, ஒபாமா போகும் இடங்களிலெல்லாம் உயரமான கட்டடங்களில் தொலைவிலிருந்து சுடும் நவீன ரகத் துப்பாக்கிகளோடு பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும், விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஏவுகணை மறிப்பு தற்காப்புச் சாதனங்கள் சகிதமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் வானம் நோக்கிப் பார்த்திருக்கின்றனர்.

அசராத அமெரிக்கப் படை

ஆனாலும், அமெரிக்கப் பாதுகாப்புப் படை அசரவில்லை. அவர்களுக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை. அது ஒரு தனிப் படைப் பிரிவையே அனுப்பியிருக்கிறது. எஃப்.பி.ஐ., சி.ஐ.ஏ., என்.எஸ்.ஏ. அமைப்புகளின் கூட்டு அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொண்டது. இந்தப் படையின் ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு விசேஷம்.

வணக்கம் ‘நாய் அதிகாரிகள்’ படை

இந்த பந்தோபஸ்தில் முக்கியமான ஒரு பிரிவு ‘நாய் அதிகாரிகள்’ படை. அமெரிக்க ரகசியக் காவல் போலீஸ் படையின் ‘கே-9’ பிரிவைச் சேர்ந்தவர்கள் இவர்கள். 1977-ல் அமெரிக்க அரசு இந்தப் படையை உருவாக்கியது. ஒபாமா தங்கும் இடம், செல்லும் இடம், பேசும் இடம் என அவர் செல்லும் திசையெல்லாம் முன்னரே சென்று பிரச்சினை இல்லை என்று உறுதிசெய்வது இந்த ‘நாய் அதிகாரிகள்’ படையின் பணி. அதிபர் இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர் விஸ்தீரணத்தில் எது எப்படி இருக்கிறது என்று இந்த அதிகாரிகள் மோப்பம் பிடித்துவிடுவார்கள்.

ஒவ்வொரு அதிகாரியின் விலையும் சுமார் 9,000 டாலர்கள் என்கிறார்கள். இவர்களில், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ‘மேலினாய்ஸ்’ இனத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்குக் கூடுதல் மதிப்பு. சற்றேறக்குறைய ஒரு அடி உயரம் இருக்கும் இவர்கள் தேடுதல் வேட்டையில் படு கில்லியாம். ஜோர்டான், ஹரிகேன் என்ற இரு அதிகாரிகள் ஒபாமாவின் உற்ற நண்பர்களாம். எல்லோருக்கும் டெல்லியின் 5 நட்சத்திர விடுதிகளில்தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கூடவே, இவர்களைக் கையாளும் காவலர்களுக்கும்!

கார் இல்லை; எந்திரன்

ஒபாமாவின் ‘காடிலாக் ஒன்’ காருக்கு ‘தி பீஸ்ட்’ என்பது செல்லப் பெயர். ‘பயங்கரவாதிகள் எப்படித் தாக்கினாலும் சேதம் இல்லாமல் இந்த காரால் தப்பிக்க முடியும்; துப்பாக்கிக் குண்டுகளோ வெடிகுண்டுகளோ துளைக்க முடியாதபடி சக்திவாய்ந்த உலோகத் தகட்டால் செய்யப்பட்டிருக்கிறது; இதன் டயர்கள்கூடக் கிழியாது; கண்ணாடிகள்கூட சேதம் அடையாது’ என்கிற தகவல்களெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த காரிலிருந்தே தாக்குதல் நடத்தவும் முடியும். தேவைக்கேற்ப சுடும் துப்பாக்கிகள், கண்ணீர்புகைக் குண்டை வெடிக்கும் சிறு பீரங்கிகள் இந்த காரில் உண்டு. ஓட்டுநர் ரகசியப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து பயிற்சிபெற்ற வீரர் என்பதால், அவரால் எதிர்த் தாக்குதல் நடத்தவும் முடியும்.

தயார் விமானம்

இப்படி அமெரிக்க அதிபர் செல்லும் பயண நாடுகளில், எல்லாவற்றைத் தாண்டியும் ஏதேனும், திடீர் குழப்பம் ஏற்பட்டால் என்ன செய்வது? அதிபர் பயணத்துக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக விமானமான ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ எந்த நேரமும் தயார் நிலையில் காத்திருக்கும். இதுவும் ஒரு குட்டி பாதுகாப்புக் கவச வாகனம்தான். ஏராளமான நவீன தகவல் தொடர்பு சாதனங்களும், நவீன ஆயுதங்களும் நிரம்பியுள்ள கவச ஆயுதம். அணுகுண்டு வீச்சைக்கூட எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.

‘போயிங் 747-200 பி’ வகையைச் சேர்ந்த இரு விமானங்கள் + ஒரு ஜெட் விமானம் இந்தப் பயணத்துக்காகக் காத்திருக்கும். ஜெட் விமானத்தில் அதிபர் அலுவலக அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் இருப்பார்கள். எஞ்சிய 2 விமானங்களில் எதில் அதிபர் இருக்கிறார் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இந்த விமானத்தில் அறுவைச்சிகிச்சை அரங்குடன் கூடிய குட்டி மருத்துவமனைகூட உண்டு. எல்லாவித நோய்களுக்குமான மருந்து, மாத்திரை, கருவிகளுடனான மருந்தகமும் இருக்கிறது.

நெருக்கடி ஏற்பட்டால் விமானத்திலிருந்தபடியே அமெரிக்க நாட்டு மக்களுக்கு வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் அதிபரால் உரையாற்ற முடியும். இந்த விமானத்தை நோக்கி ஏவுகணை செலுத்தப்பட்டால் அதை உடனே கண்டுபிடித்து, திசைமாற்றும் எதிர் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விமானம் பறக்க ஆரம்பித்தால், எல்லா நாடுகளின் விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரத்திலும் அலறியடித்துக்கொண்டு மற்ற விமானங்களை அதன் பாதையில் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x