Last Updated : 17 Jan, 2015 09:36 AM

 

Published : 17 Jan 2015 09:36 AM
Last Updated : 17 Jan 2015 09:36 AM

புத்தக வாசிப்பு புத்திசாலியாக்குமா?

எட்டு வயது வரை என்னால் வாசிக்கவே முடியாமல் இருந்தது. என்னுடைய வகுப்பாசிரியை பிரௌனிங் என்னுடைய இடத்துக்கே வந்து ‘டிக் அண்ட் ஜேன்’ புத்தகத்தைக் கொடுத்து, அதிலிருந்த சில வாக்கியங்களைப் படிக்கச் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒரு ஆங்கில வார்த்தையைக் காட்டி அதைப் படி என்றார். ‘டு-ஹி’ என்றது நினைவிருக்கிறது. ‘தி’ (The) என்று அதைத் திருத்தினார். அன்றிலிருந்து ‘தி’ என்ற வார்த்தையைப் படித்துவிடுவேன்.

1960-களில் நியூஜெர்சியின் டீநெக் பகுதியில் வளர்ந்தேன். பிரௌனிங் வகைப்படுத்தியபடி படிப்பதில் ‘மந்த’ மாணவனாகவே இருந்தேன். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நாளின்போது என்னுடைய அன்னையிடம் பேசிக் கொண்டிருந்த பிரௌன், உங்கள் மகன் டேனியல் படிப்பதில் ‘மிகவும் மந்தமாக இருக்கிறான்’ என்று மறக்காமல் குறிப்பிட்டார். மதியம் சாப்பாட்டு நேரத்தின்போது, என்னைப் போலவே படிப்பில் மந்தமாக இருந்த இதர மாணவர்களோடு நானும் அமர்த்தப்பட்டேன். அந்த இடம் உடற்பயிற்சிக்கூடம். பாடம் படிக்கும்போதும் கணித வகுப்பிலும், மந்தமான இதர மாணவர்களுடனேயே என்னை உட்காரவைப்பார்கள்.

ஸ்பைடர்மேன் மீட்டார்

ஓராண்டுக்குப் பிறகு, ஸ்பைடர்மேன்தான் என்னை அவர்கள் மத்தியிலிருந்து மீட்டார். என்னுடைய சிறந்த நண்பனான டேன், சித்திரக் கதைப் புத்தகங்களை அதிகம் வாசிப்பான். அவனும் அவனைப் போன்ற சிலரும் படிப்பதுடன் அதில் வரும் கதாபாத்திரங்களைத் தாங்களாகவே தாளில் வரைந்தும் காட்டுவார்கள். பிறகு, அவர்களே படமும் வரைந்து கதையும் எழுதத் தொடங்கினார்கள்.

என்னுடைய நண்பனை மற்றவர்கள் கடத்திக்கொண்டு போகாமல் இருக்க நானும் அவனுடன் சேர்ந்து ஸ்பைடர்மேன் கதைப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். பிறகு, நானும் படம் என்ற பெயரில் தாளில் எதையோ கிறுக்கவும் எழுதவும் தொடங்கினேன். படிப்படியாக, நானும் டேனும் சேர்ந்து படிப்பது, வரைவது என்று பிற்பகல்களை ஆனந்தமாகக் கழிக்கத் தொடங்கினோம்.

11 வயது முதல் எல்லா பாடங்களிலும் ஏ கிரேடு வாங்கத் தொடங்கினேன். பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்ந்தபோது, அறிவுத் திறன் தேர்வில் 136 மதிப்பெண்களைப் பெற்றேன். என்ன நடந்தது இடைக்காலத்தில்? பிரௌனிங் சொன்னதைப் போல நான் மந்த மாணவன்தானா, காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியவுடன் புத்திசாலி ஆனேனா?

மூன்று ஆண்டுகள் ஆய்வு

இந்தக் கேள்விக்குப் பதில் கண்டுபிடிக்க, நான் பெரியவன் ஆனவுடன் மூன்று ஆண்டுகளைச் செலவிட்டேன். உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த உளவியல் நிபுணர்களையும் நரம்பியல் அறிஞர்களையும் இந்தக் காலத்தில் சந்தித்தேன். படிப்பதால் அறிவுத்திறன் கூடும் என்று அவர்களில் யாரும் கூறவில்லை. ஆனால், சமீபத்திய ஆய்வுகளின்படி படிப்பதற்கும் அறிவுக் கூர்மைக்கும் பரஸ்பர உதவல் முறையில் தொடர்பு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அறிவுத்திறனையே மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள் உளவியலாளர்கள். முதல்வகை, நூல்களைப் படித்ததால் கிட்டிய கெட்டிதட்டிய அறிவு (கிரிஸ்டலைஸ்டு இன்டெலிஜென்ஸ்). சைக்கிளை ஓட்டக் கற்றுக்கொள்ளும்போதும், புதிய நண்பரின் பெயரைத் தெரிந்துகொள்ளும்போதும் அதையதை மட்டும் தெரிந்துகொள்வதில்லை. அதனுடன் சார்புள்ள இதர விஷயங்களையும் கற்றுக்கொள்கிறோம். பிற்கால உலகில் வாழ்க்கைப் பயணம் தொடர இது உதவுகிறது.

புத்தகம் வாசித்து அதன் மூலம் அறிவைப் பெறாமலும்கூடச் சிலர் அறிவுக் கூர்மை உள்ளவர்களாக இருப்பதையும் பார்க்கிறோம். புதிய சூழ்நிலையில்கூடப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் திறன், தீர்வு காணும் திறன் ஆகியவற்றை ‘நெகிழ் அறிவுத்திறன்’ (ஃப்ளூய்டு இன்டெலிஜென்ஸ்) என்கிறார்கள்.

இப்போதெல்லாம் பள்ளிகளில் எழுதவும் படிக்கவும் முன்பிருந்ததைவிட அறிவியல்பூர்வமான பல முறைகளைக் கையாள்கிறார்கள். எனவே, மாணவர்களின் அறிவுத்திறனும் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட அதிகமாகிவருகிறது.

ஃபிளின் விளைவு

அறிவுத்திறன் தொடர்பாக நியூசிலாந்து நாட்டுப் பேராசிரியர் ஜேம்ஸ் ஃபிளின் உருவாக்கிய கருதுகோள் அவருடைய பெயராலேயே ‘ஃபிளின் விளைவு’ என்று அழைக்கப்படுகிறது.

படிப்பதால் ‘நெகிழ் அறிவுத்திறன்’அதிகரிப்பதைப் போல, ‘நெகிழ் அறிவுத்திறன்’ மிகுதலால் படிப்பதும் அதிகரிக்கிறது என்று கண்டுபிடித்தார். இதையே பிலடெல்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேசன் செய்னும் வேறு வகையில் கண்டுபிடித்தார். ஒரு திரையில் சில கட்டங்களை வரைந்து, அதில் ஒரு புள்ளியைத் தொடர்ந்து நகர்த்திக்கொண்டே வந்து, இரண்டு நகர்த்தல்களுக்கு முன்னால் அது எங்கே இருந்தது என்று நினைவுபடுத்திக்கூறுமாறு சோதனைகளை நிகழ்த்தினார். இந்தத் திறன் பெற்ற முதியவர்களும் இளைஞர்களும் நன்கு படிக்க முடிவதை அவர் நிரூபித்தார்.

சமீப காலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துவரும் மூன்றாவது வகை அறிவுத்திறனானது உணர்ச்சி சார்ந்த அறிவுத்திறனாகும் (எமோஷனல் இன்டெலிஜென்ஸ்). தனது உணர்வுகளையும் அடுத்தவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு அதற்கேற்றார்போல் நடந்துகொள்வதுதான் உணர்ச்சி சார்ந்த அறிவுத்திறன். படிப்பதால் உணர்ச்சி சார்ந்த அறிவுத்திறன் வளர்கிறது என்றால், உங்களுக்கு வினோதமாக இருக்கும். நாவல்கள்,சிறுகதைகள், கவிதை போன்றவற்றைப் படிப்பதன் மூலம் அடுத்தவர்களுடைய மனவோட்டங்களை நன்கு புரிந்துகொள்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வில் நிரூபித்துள்ளனர்.

டேவிட் கோமர் கிட், எமானுவேல் காஸ்டனோ என்ற இருவர், இந்தச் சோதனைகளை நடத்தினர். கதை அல்லாத புத்தகம், மிகவும் பிரபலமான கதைப் புத்தகம், இலக்கியப் புனைவு நூல் ஆகிய மூன்றையும் படிக்குமாறு நூற்றுக் கணக்கானவர்களைக் கேட்டுக்கொண்டு, அவர்களுடைய மனவோட்டங்களை ஆய்வுசெய்து, அவர்கள் சில முடிவுக்கு வந்தார்கள். இலக்கியப் புனைவுகளைப் படித்தவர்கள் அடுத்தவர்களுடைய உணர்வுகளை நன்கு புரிந்துகொண்டுள்ளதை ஆய்வு முடிவுகள் காட்டின. இதைத்தான் ‘மனதைப் பற்றிய கோட்பாடு’ என்கிறார்கள்.

ஆன்டன் செகாவ் எழுதிய ‘பச்சோந்தி’, டான் டெலிலோ எழுதிய ‘ஓட்டக்காரன்’, டீ ஓப்ரெட் எழுதிய ‘புலியின் மனைவி’ ஆகிய கதைகளைப் படிப்பவர்களிடம் இந்தத் தன்மையை அதிகம் காணலாம். ஆனால், இந்த ஆய்வுகள் அனைத்தும் முக்கியமான ஒன்றை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டன - அது, ‘ஸ்பைடர்மேன்’ படித்தால் ஏற்படக்கூடிய அசாதாரணமான அறிவுத்திறன் வளர்ச்சியை!

- © ‘தி கார்டியன்’, தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x