Published : 25 Apr 2014 07:56 AM
Last Updated : 25 Apr 2014 07:56 AM

அந்தக் காலத்தில் சுயேச்சைகள்தான் நோட்டா

இந்தியாவில் தொடங்கப்பட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏதோ ஒரு விதத்தில் தங்களது முந்தைய அரசியல் கட்சிகளின் மேல் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே தோன்றின. கொள்கையில் இருந்து வழுவுதல், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் சரிவர செயல்படுத்தாதது போன்றவை முந்தைய அரசியல் கட்சிகள் மீது புதிதாகத் தொடங்கப்படும் அரசியல் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள். மேலும், ஒவ்வொரு தனிப்பட்ட பிரதேச மக்கள் குழுவின் சார்பினராகவும் அந்தக் கட்சிகள் தங்களை அடையாளம் செய்துகொள்கின்றன. ஆனால், புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சிகளும் முந்தைய அரசியல் கட்சிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஏதோ ஒரு விதத்தில் சிக்கிக்கொள்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்னும் குழப்பம் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

நோட்டா

இந்தக் குழப்பமான சூழலில், கள்ள ஓட்டுகளைக் கட்டுப்படுத்தவும் வாக்குப்பதிவின் சதவீதத்தை உயர்த்திக் காட்டவும் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் நோட்டா முறை செயல்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களுக்கு வாக்களிக்க விருப்பம் ஏன் இல்லை என்பதைப் பற்றிய கவலை கடுகளவும் இதில் மறைந்திருப்பதாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு வட மாநிலங்களில் ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் 16 லட்சமும் தமிழகத்தில் ஏற்காடு இடைத்தேர்தலில் மூவாயிரத்துச் சொச்சமும் நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தொகுதிகளில் நோட்டா வாக்குகள் இவ்வளவு பதிவானது ஏன் என்பதுகுறித்து எந்த அரசியல் கட்சிகளும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்களின் இலக்கு, பதவி மற்றும் அதிகாரம் மட்டுமே என்பது தெளிவாகத் தெரிகிறது. அதிருப்தியில் உள்ள மக்களின் கோரிக்கைகள்பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. இதற்கு முன்னர் 49ஓ நடைமுறையில் இருந்தபோது, அதைப் பயன்படுத்தியோர் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். அந்த வாக்காளர்களின் பட்டியலும் க்யூ பிரிவு காவலர்களிடம் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்தது. அவர்கள் பின்னணியும் கண்டறியப்பட்டது. நோட்டாவின் அறிமுகம், இத்தகைய அச்சுறுத்தலைச் சாதாரண மக்கள் எதிர்கொள்ள வேண்டாத சூழலை உருவாக்கியிருக்கிறது. ஆனாலும், நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவானாலும் அதைக் கணக்கில் கொள்ளாது அதற்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். இதன்மூலம் நோட்டாவை முழுவதுமாக மதிப்பிழக்கச் செய்கிறது நடைமுறைச் சட்டம். நோட்டா அதிகம் பதிவாகும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட தொகுதியைத் தகுதியற்ற வேட்பாளர் தொகுதி என்று கருதி ஆளுநரின் நேரடி ஆட்சியை நடைமுறைப்படுத்தலாம். மேலும், தொகுதியில் உள்ள மக்களிடம் கலந்துரையாடி, பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொண்டுவரலாம். தேர்தல் நேரங்களில் வீடுவீடாக இராப்பகலாக வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள், தேர்தலுக்குப் பின்பும் பதவியில் அமர்ந்த பின்பும் மக்களைச் சந்திக்கலாம். பள்ளிகளில் வகுப்பறை ஆசிரியர்களிடம் நிர்வாகம் சொல்லும் முதல் அறிவுரை, “உங்கள் வகுப்பு மாணவர் ஒவ்வொருவரின் பெற்றோர், முகவரி, தொடர்பு எண்கள், அம்மாணவனின் நோய் பற்றிய தகவல்கள், அவன் பள்ளிக்கு வந்துசெல்லும் முறை போன்ற அனைத்தையும் தெரிந்து வைத்திருங்கள்” என்பதுதான். பாடம் நடத்துவது மட்டுமே ஒரு வகுப்பாசிரியருக்கு வேலை அல்ல என்பது இதன் மூலம் அறிகிறோம். இந்நிலையில், ஒரு தொகுதியின் வேட்பாளர் என்பவர் தொகுதியில் உள்ள செல்வந்தர்களை மட்டும் நினைவில் வைத்திருந்து பயனேதும் இல்லை என்பதை, ‘யாருக்கும் ஓட்டு இல்லை' என்ற விருப்பத் தேர்வே காட்டிவிடுகிறது.

சுயேச்சை வேட்பாளர்கள்

சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றுக்கான ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் சாராத சுயேச்சைகள் ஒருவரோ பலரோ போட்டியிடுகின்றனர். காப்புத்தொகையைச் சில்லறையாகச் செலுத்தி மனுசெய்வது, ஆட்டுக் கிடாயுடன் வந்து மனு தாக்கல் செய்வது போன்ற செயல்களைச் செய்து அனைவரின் கவனத்தையும் சுயேச்சை வேட்பாளர்கள் ஈர்க்க முயல்கின்றனர். இவை, மக்களை அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்யுமா? நோட்டாவை விரும்பும் மக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த மக்களுள் ஒருவரான சுயேச்சையை ஏன் ஆதரிப்பதில்லை? சுயேச்சைகளில் ஒருசாரார் தங்கள் கட்சி தங்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை என்ற கோபத்தில் தனித்துப் போட்டியிடுகின்றனர் அல்லது பொழுதுபோக்குக்காகப் போட்டியிடுகின்றனர் அல்லது தங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாகக் கருதிக்கொண்டு குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பிப் போட்டியிடுகின்றனர். இவர்களில் எத்தனை பேர் மக்களின் நலனுக்காகப் போட்டியிட வந்தவர்கள் என்று பார்த்தால் பெரும் கேள்விக்குறிதான் மிஞ்சும். சுயேச்சைகளின் முதிர்ச்சியற்ற போக்குகளைப் பார்க்கும்போது, அரசியல் கட்சிகளுக்குத் தற்போது நோட்டா அளிக்கும் மக்கள் அதற்கு முன்பாகவே சுயேச்சைகளுக்கு நோட்டாவைப் பதிவுசெய்துவிட்டார்கள் என்று கருதத் தோன்றுகிறது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு, அரசியல் கட்சிகளும் அரசு நிறுவனங்களும் இடையூறு ஏற்படுத்துவதும் நிகழ்கிறது. இது பதவியில் அங்கம் வகிக்கும் சுயேச்சை வேட்பாளரின் ஆதரவற்ற நிலையை மட்டுமல்ல, நாளை தங்கள் உரிமைக்காகக் குரல் எழுப்பும் ஒவ்வொரு குடிமகனின் ஆதரவற்ற நிலையையும் குறிக்கிறது.

- ஜே.எஸ்.அனார்கலி, முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவி, தொடர்புக்கு: bharathiannar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x