Published : 15 Jan 2015 09:18 am

Updated : 15 Jan 2015 09:20 am

 

Published : 15 Jan 2015 09:18 AM
Last Updated : 15 Jan 2015 09:20 AM

புத்தகம் படிக்க நேரம் இல்லையா?

பிரெஞ்சு நாட்டின் கலாச்சார அமைச்சர் ஃப்லெர் பில்லர கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புத்தகங்களை அதிகம் படிப்பதில்லை. கடந்த ஆண்டு இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோதியானோவின் நாவல்கள் எதையும் படித்ததில்லை என்ற எதிர்பாராத பதிலைக் கேட்டு அந்நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

பிரெஞ்சுக்காரர்கள் எப்போதுமே தங்களைப் பெரிய அறிவுஜீவிகளாகக் கருதிக்கொள்வதால், தங்கள் நாட்டு அமைச்சரின் பதில் அவர்களுக்கு வியப்பாகவும் வேதனையாகவும் மாறியிருக்கிறது. புத்தகங்களைப் படிப்பதும் பெரிய பெரிய எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுவதும் சிறிய வயதிலேயே வழக்கமாகிவிட்ட பிரிட்டிஷ்காரியான எனக்கு பிரான்ஸில் வசிப்பதே பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. பிரெஞ்சுக்காரர்களுக்குப் படிப்பதும் அதுகுறித்து விவாதிப்பதும்தான் கலாச்சாரத்தின் முக்கியமான அங்கம்.

மதுபான விடுதியிலும் சாப்பாட்டு மேஜையிலும்கூட இலக்கியம், வரலாறு குறித்து விவாதிப்பதைப் பெருமையாகவே கருது கிறவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். அப்பேர்ப்பட்ட நாட்டில் படிப்பதையே நிறுத்திவிட்டேன் என்று கூசாமல் சொல்லும் கலாச்சார அமைச்சரைத் தேசப் பற்றில்லாதவர் என்றுகூட அவர்கள் நினைக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இப்போதெல்லாம் உண்மையாகவே எத்தனை பேருக்குப் படிக்க நேரம் இருக்கிறது?

வாழ்க்கைச் சூழலும் வாசிப்பும்

கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் பிரிட்டனைச் சேர்ந்த வயதுவந்த 40 லட்சம் பேர் ஃப்லெர் பில்லரைப் போலவே நேரம் கிடைக்காததால், மகிழ்ச்சிக்காகப் படிப்பதையே நிறுத்திவிட்டார்கள் என்று தெரிகிறது. பிரிட்டனில் சுமார் 40 லட்சம் பேர் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்கிறார்கள். 25 பேரில் ஒருவர், வாரத்துக்கு 60 மணி நேரம்கூட வேலை பார்க்கிறார்.

பொதுவாகவே, பெண்களைவிட ஆண்கள் குறைவாகவே படிக்கின்றார்கள். என்னுடைய வாழ்க்கைத் துணைவரும் வேலைமுடிந்து வரும்போது மிகவும் களைத்துவிடுகிறார். மாலை நேரத்தில் ஓரிரு பக்கங்கள் படிப்பதே பெரிய செயலாகிவிடுகிறது. ஆனாலும், படிக்க விரும்பும் புத்தகங்களை வாங்கிவந்து வீட்டில் அடுக்கிவிடுகிறார். படிக்காமல்விட்ட புத்தகங் களை விடுமுறை நாட்களிலாவது சற்றே கூடுதல் நேரம் ஒதுக்கிப் படித்தால் நன்றாக இருக்காதா? படிக்க, கற்றுக்கொள்ள, புதிய உலகைத் தேட அது உதவிகரமாக இருக்காதா?

வாசிப்பைக் கொல்லும் இணையம்

நாள் முழுக்க வேலைக்கே சரியாக இருக்கிறது, படிக்க நேரமே இல்லை என்கிறோம். ஆனால், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதற்கும், ட்விட்டரில் சண்டை போடவும், யாரைப் பற்றியோ வம்பு பேசுவதற்கும் நேரத்தை ஒதுக்குகிறோம். நாவல் படிப்பதை ஒழித்ததில் முக்கியப் பங்கு இணையதளத்துக்கு இருக்கிறது என்று எல்லோரும் குற்றம்சாட்டுகிறார்கள்.

இணையதளம் நாம் படிக்கும் முறையையே மாற்றிவிட்டது. மலைபோன்ற கூழாங்கல் குவியலை அளைந்து, உயிருள்ள ஓரிரு வைரக்கற்களை மட்டுமே இணையதளங்களில் அடை யாளம் காண்கிறோம். ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்குச் சோம்பேறியாகத் திருப்பிக்கொண்டே போகிறோம். அதற்குள் படிப்பதில் உள்ள ஆர்வம் எரிந்து சாம்பலாகிவிடுகிறது.

பல லட்சம் ஆண்டுகளாக நமக்குள் மேம்பட்டு வந்த ஆழ்ந்து வாசிக்கும் திறன் இப்போது டிஜிட்டல் மயமாகிவிட்டது என்கிறார்கள். நாமே படித்து, யூகித்து, கற்பனை செய்து, ரசித்தது போய் - இதுதான் களம், இதுதான் காட்சி என்று எல்லாவற்றையும் நேரடியாகப் பார்த்து கடந்துகொண்டே செல்கிறோம். இணையதளம் நம்மை முட்டாள்களாக்கிவிடவில்லை. ஆனால், கற்பனையை, புத்துணர்ச்சி பெறுவதை, பிரச்சினைகளி லிருந்து விடுபட்டுக் கற்பனை உலகில் மிதப்பதைத் தடுத்துவிட்டது.

சுய மேம்பாடு

படிப்பதை எப்போதுமே சுய மேம்பாட்டுச் செயலாகவே பார்த்துவருகிறேன். பயணங்களைப் போலவே படிப்பதும் புதிய உலகையும் புதிய எண்ணங்களையும் அறிமுகப்படுத்துகிறது. மனிதாபிமானம் பெருகுகிறது. அறிவுத்திறன் மேம்படுகிறது. நாம் இப்போது அனை வரும் சமூகமாகவே படிப்பதை நிறுத்திவிட்டோம் அல்லது கைவிட்டுவிட்டோம் என்றால் என்னவென்பது? நம்மை நாமே மேம்படுத்திக்கொள்வது எப்படி என்ற உலகில்தான் வாழ்கிறோம்; மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு ஓய்வறையில் ஒரு சில நிமிஷங்கள் கண்ணை மூடித் தியானத்தில் ஆழ்வதற்குப் பதிலாக சில பக்கங்கள் படித்துத்தான் பார்க்கலாமே? தியானம் என்ன, மகா நிர்வாணமே சாத்தியப்பட்டுவிடுமே!

இன்னும் சில நாட்கள் கழித்து, உங்களுடைய மன அழுத்தத்தைப் போக்க உங்களுடைய கைபேசியிலோ கணினியிலோ புதிய உத்திகளும் வழிமுறைகளும் பயிற்சிகளும் வந்தாலும் நான் வியப்படைய மாட்டேன். நாம்தான் எப்போதுமே ஒயரைக் காதில் சொருகிக் கொண்டே அலைகிறோமே? இரண்டு ஆலோசனைக் கூட்டங்களுக்கு நடுவே, சிறிது தொலைவு நடக்கலாம் என்று நினைக்காமல், உடனே கணினியைத் திறந்து அதையே உற்றுப் பார்க்கிறோம்.

ஃபேஸ்புக்கை அடிக்கடி ‘திறந்து’ பார்த்து யாருக்காவது ‘லைக்’ போடுவதுதான் கடமை என்றாகிவிட்டதால், சிறிது நேரம் எடுத்துக்கொண்டு எதையாவது சாவகாசமாகச் செய்பவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. நான்கு நிமிஷம் போதும், உடல்ரீதியாக நீங்கள் தயாராக இந்தப் பயிற்சிகளைச் செய்யுங்கள் என்று இப்போது கூற ஆரம்பித்துவிட்டார்கள் - அதுவும் கணினியிலேயே!

உணர்வுபூர்வமாக்கும் வாசிப்பு

ஒருவகையில், பிரெஞ்சுக் கலாச்சார அமைச்சர் சொன்னதும் சரிதான்! நம்மில் பெரும்பாலோராலேயே படிப்பதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்னும் போது, கலாச்சாரத் துறை அமைச்சருக்கு நேரம் கிடைக்காமல் போவதில் வியப்பேதும் இல்லை. பிரான்ஸைவிட பிரிட்டனில் நிலைமை இன்னும் மோசம். பிரிட்டனில் சிறைக் கைதிகள் படிப்பதற்குப் புத்தகங்கள் இல்லாமல் குறைந்துவருகிறது. பள்ளிக் கூடத்தில் எனக்கு அளிக்கப்பட்ட ‘டூ கில் த மாக்கிங் பேர்டு’ போன்ற புத்தகங்களைப் படித்துக் கண்ணீர் விட்டு அழுது, என்னுடைய மனிதத்துவத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.

இனம், மொழி, ஊனம் ஆகிய காரணங்களுக்காக மக்களைக் கொடுமைப்படுத்துவதைப் படித்துக் கோபம் கொண்டு, இந்த உலகையே புரட்டிப் போட வேண்டும் என்று ஆவேசப்பட்டேன். இப்போது அத்தகைய புத்தகங்களைப் பாடத்திட்டத்திலிருந்தே நீக்கி விட்டார்கள் என்று கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

தன்னைச் சுற்றி நடப்பது எதுவுமே தெரியாது என்ற போக்கை பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் பிரதிநிதித்து வப்படுத்துகிறார். அவர் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகள் அனைத்திலும் பலர் இப்போது அவரைப் போலத்தான் மாறிவருகிறார்கள். இதுகுறித்துத்தான் நான் கவலைப்படுகிறேன். என்னுடைய சொந்த நூலகத்திலேயே பல புத்தகங்கள் பாதியும் முக்கால்வாசியுமாகத்தான் படிக்கப்பட்டிருக்கின்றன.

எல்லாவற்றையும் படித்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டாலும் மெதுவாகத்தான் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிறேன். நம்மைப் பொருளாதாரரீதியாக முன்னேற்றிக்கொள்ள வேண்டுமென்றால், ஈடாக எதையாவது தியாகம் செய்ய நேர்கிறது. நம்மில் பலர் மெதுவாகக்கூட பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பது கிடையாது. எழுத்துகளையும் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் படித்து ஜீரணிக் காமல், கிடைக்கும் மற்ற எல்லாவற்றையும் விழுங்கத் தயாராகிக்கொண்டிருக்கிறோம்.

- © ‘தி கார்டியன்’, தமிழில்: சாரி

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

புத்தக வாசிப்புபுத்தக அறிமுகம்நூல் வாசிப்புபிரான்ஸ்கலாச்சார அமைச்சர்ஃப்லெர் பில்லரஇலக்கிய நோபல் பரிசுபேட்ரிக் மோதியானோ

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

barack-obama

ஒபாமா ஓய்வதில்லை

கருத்துப் பேழை

More From this Author