Published : 15 Jan 2015 11:00 AM
Last Updated : 15 Jan 2015 11:00 AM

நான் என்னென்ன வாங்கினேன்? - எழுத்தாளர் சாரு நிவேதிதா

தமிழர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட எட்டுக் கோடி. ஆனால், ஒரு எழுத்தாளரின் நாவல் ஆயிரம் பிரதிகளே விற்கிறது. சமீபத்தில் கொஞ்சம் முன்னேறி இன்னும் ஒரு ஆயிரம் கூடியிருக்கிறது. பக்கத்தில் உள்ள கர்நாடகத்தில்கூட லட்சம் பிரதி விற்கிறது. எனவே, என் சக எழுத்தாளர்

களைப் போல் புத்தகக் காட்சியை நான் அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், இந்த ஆண்டு என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்னுடைய சமீபத்திய நாவலான ‘புதிய எக்ஸை’லில் ஏதோ ‘இம்போஸிஷன்’ எழுதுவது போல் என் கையெழுத்தைப் போட்டுக்கொண்டே இருக்கிறேன். நான் கொஞ்சம் சர்ச்சைக்குரிய விஷயங்களையும் தொடுவதால், என் நூல்களைப் பெண்கள் வெளிப்படையாகப் படிப்பதில்லை. ஆனால், இந்தப் புத்தக விழாவில் என்னிடம் கையெழுத்து வாங்கியவர்களில் பெரும்பாலும் பெண்களே.

வாசிப்பு மட்டுமே ஒரு சமூகத்தைப் பண்படுத்தக் கூடியது. அதில் நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். அதிலும் தமிழ் வாசிப்பு மிகவும் குறைந்திருக்கிறது. சினிமாவும் தொலைக்காட்சியும் முக்கியக் காரணங்கள். இருந்தாலும், வாசகர்கள் என்ற ஒரு சிறிய வட்டம் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை இந்தப் புத்தக விழா எனக்கு உணர்த்தியது. ஆனாலும், ஒரு சிரமம் என்ன

வென்றால், 800 அரங்குகளில் சுமார் 80 அரங்கு களில்தான் வாசிப்பை மேம்படுத்தக் கூடிய நூல்கள் உள்ளன. அந்த அரங்குகளைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. இருந்தும் அரங்குகளின் வரிசை எண்களை வைத்துக்கொண்டு போனேன்.

காலச்சுவடு, க்ரியா அரங்குகளில் நிறைய நூல்கள் வாங்கினேன். முக்கியமாக மொழி பெயர்ப்புகள். ஓரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’, ‘பனி’, ‘இஸ்தான்புல்’ எல்லாவற்றையும் ஜி. குப்புசாமி நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார். பாரதிமணியின் ‘புள்ளிகள், கோடுகள், கோலங்கள்’ வாங்கினேன். குளச்சல் மு. யூசுப் மலையாளத் திலிருந்து மொழிபெயர்த்த எல்லா நூல்களையும் வாங்கினேன். குறிப்பாக, ‘திருடன் மணியன் பிள்ளை’. ஏற்கெனவே கடன் வாங்கிப் படித்து விட்டதால் இது எனக்கான பிரதி.

என் வாழ்நாளில் இப்படி ஒரு புத்தகத்தைப் படித்ததில்லை. திருடனாக வாழ்ந்தாலும் மணியன் பிள்ளை ஒரு ஞானி. அப்புறம், பி.ஏ. கிருஷ்ணனின் ‘மேற்கத்திய ஓவியங்கள்’. ஐரோப்பாவில் பிரபலமான ‘டின்டின் சாகசக் கதைகள்’வாங்க நினைத்தேன். அதன் விலை ரூ. 8,000 என்பதால் விலகிவிட்டேன். ராஜ் சிவாவின் அறிவியல் புத்தகங்களான ‘நிலவில் ஒருவன்’, ‘இறந்த பின்னும் இருக்கிறோமா?’, ராமச்சந்திர குஹா எழுதிய ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’. இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டியிருக்கின்றன. தினமும் போய்க்கொண்டிருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x