Published : 29 Jan 2015 08:58 AM
Last Updated : 29 Jan 2015 08:58 AM

அமெரிக்க-இந்திய உறவில் புதிய அத்தியாயம்

இந்தியாவும் அமெரிக்காவும் பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட ஜனநாயக நாடுகளாக இருப்பதாலும், மனித உரிமைகளைப் போற்றி மதிப்பதாலும் இரு நாடுகளுக்கும் இடையில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள இந்த உறவானது நிலைத்து வளரும் என்று நம்புவதாக விடைபெறும் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இந்திய, அமெரிக்க உறவுகளின் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் தனது 3 நாள் நிகழ்ச்சிகளின்போது விவரித்திருக்கிறார். நட்புறவு, ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான பாதுகாப்புக் கண்ணோட்டம் தொடர்பாக இதுவரை அமெரிக்கா, இந்தியா இடையிலான எந்த உச்சி மாநாட்டிலும் தெரிவித்திராத வகையில், மிகவும் வெளிப்படையாகப் பல தகவல்கள் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பொறுத்த வரையில் இரு நாடுகளின் ராணுவங்களும் இனி நெருங்கிச் செயல்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ராணுவரீதியிலான பரிமாற்றங்களுக்கும், 4 பெரிய திட்டங்களின் கூட்டுத் தயாரிப்புக்கும், இரு நாடுகளின் தேசிய ராணுவப் பல்கலைக் கழகங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் வழி செய்யப் பட்டிருக்கிறது.

இருதரப்பு உறவில் வெளிப்படைத்தன்மை என்பது வேறு துறைகளிலும் பிரதிபலிக்கிறது. பொருளாதாரப் பிரச்சினைகள், பருவநிலை மாறுதலைத் தடுக்கும் நடவடிக்கைகளை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். ஒபாமாவுடன் தான் கொண்டுள்ள நெருக்கம் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மையைத் தந்துள்ளது என்றே மோடி பேசியிருக்கிறார். இந்த உற்சாகமும் நம்பிக்கையும் வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமே இல்லை. அதே வேளையில், பிற நாடுகளுடனான நல்லுறவைக் குலைப்பதாக இது அமைந்துவிடக் கூடாது. இந்தியாவில் இருந்துகொண்டு ரஷ்யாவை ‘முரடன்’ என்று ஒபாமா வர்ணித்திருப்பது ரஷ்யாவுடனான நம்முடைய உறவுக்குத் தீங்கையே ஏற்படுத்தும். ஆசிய - பசிபிக் பிராந்தியம், இந்திய - அமெரிக்க உறவானது அயலுறவு விவகாரம், பொருளாதாரம், ராணுவத் துறைகளில் இந்தப் பிராந்தியத்தில் தங்களுக்குப் புதிய சவால்களை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவே சீனா கருதும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு எந்த வகையில் சாதனை என்பதை நாட்டுக்கு விளக்கும் கடமையும் பொறுப்பும் பிரதமர் மோடிக்கு இருக்கிறது. அணுமின் நிலையத்தில் விபத்து நடந்தால் அதற்கு யார் பொறுப்பு, நஷ்டஈட்டை யார் தருவார்கள், அதற்கான சட்டம் எப்படித் திருத்தப்படும் அல்லது என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதை அரசு விளக்கியாக வேண்டும். புதிய உடன்படிகையால், இந்திய அரசு ஏற்கப்போகும் கூடுதல் செலவு என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது, இந்திய மக்களின் வரிப்பணத்தை எடுத்து நஷ்டஈடு தரக் கூடாது என்று அப்போதைய எதிர்க் கட்சியான பாரதிய ஜனதா பேசியதை நாம் மறந்துவிட முடியாது.

அணு மின்நிலையங்களில் விபத்து நேர்ந்தால் நேரடியாக அதன் பாதிப்பை அனுபவிக்கப்போகிறவர்களும், அப்படி நேரும்பட்சத்தில் நஷ்டஈடு பெற உரிமை உள்ளவர்களும், அந்த நஷ்டஈட்டுத் தொகையைத் தங்களுடைய வரிப் பணத்தில் செலுத்தியாக வேண்டியவர்களும், அணு மின்சாரத்தை நுகரப்போகிறவர்களும் இந்தியர்கள்தான். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களிலேயே மிகவும் முக்கிய மானது அணுசக்திக்கான ஒத்துழைப்புதான் என்பதால், அதன் முழு விவரங்களும் நாட்டுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

வர்த்தகத் துறை பேச்சுகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சாதனைகள் இல்லை. இந்தியாவுக்கு உதவித்தொகையாகவும் கடனாகவும் 400 கோடி அமெரிக்க டாலர்களை வழங்குவோம் என்று ஒபாமா கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு டோக்கியோவுக்குச் சென்ற மோடிக்கு 3,500 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உதவிகளைச் செய்ய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே முன்வந்ததை இங்கே நினைவுகூர வேண்டும்.

ஒபாமா அறிவித்துள்ள நிதியுதவியில் சரிபாதி, புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் தயாரிப்புக்கானவை. அது தொடர்பாகத்தான் அமெரிக்காவும் இந்தியாவும் பிணக்கு கொண்டு, உலக வர்த்தக அமைப்பிடம் (டபிள்யு.டி.ஓ.) தீர்வுக்காகச் சென்றுள்ளன. சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்புக் கான தகடுகளில் இந்தியாவில் தயாராகும் பாகங்களைத்தான் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிபந்தனை காரணமாகத் தான் பிணக்கு ஏற்பட்டது. மோடியின் இன்னொரு முக்கியமான திட்டமான ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதும் அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. எல்லாவற்றையும் இந்தியாவிலேயே தயாரித்தால் தங்கள் நிறுவனங்களுக்கு என்ன லாபம் என்பதே அவர்களுடைய கேள்வி.

‘எச்1பி’ விசா வைத்துள்ள இந்தியர்களுக்குச் சாதகமாக அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமெரிக்கா நேரடியாகப் பதில் சொல்லவும் இல்லை, செய்வோம் என்று உத்தரவாதமும் அளிக்கவில்லை. அதே சமயம், குடியேற்றச் சட்ட சீர்திருத்தத்தின்போது இதையும் கவனத்தில் கொள்வோம் என்றுதான் கூறியிருக்கிறது. எனவே, இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு உற்சாகம் ஏற்படவில்லை.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சியினர்தான் பெரும்பான்மை வலுப் பெற்றிருக்கின்றனர். குடியேற்றச் சட்டங்களைத் திருத்துவதற்குக் குடியரசுக் கட்சியினரின் ஆதரவைப் பெறுவது எளிதல்ல. அறிவுசார் சொத்துரிமைச் சட்டப்படி இந்தியாவில் தங்களுடைய நலனுக்குப் பாதுகாப்பில்லை என்று அமெரிக்க நிறுவனங்கள் வருத்தப்படுவதை ஒபாமா சுட்டிக்காட்டியிருக்கிறார். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற கொள்கைக்குக்கூட விளக்கம் தர வேண்டிய நிலை ஏற்பட்டது மோடிக்கு. அதே சமயம், வரி விதிப்பில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிச்சலூட்டும் நடைமுறைகள் களையப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.

அமெரிக்க - இந்திய உறவில் இது ஒரு புது அத்தியாயம். இன்னும் பல விஷயங்களில் இரு நாடுகளும் தங்களுடைய நலனுக்கு ஏற்ப சிந்தித்து, பேசிச் செயல்பட வேண்டியிருக்கிறது. இரு தலைவர் களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு காரணமாகத் தீர்வு காண்பது எளிதாக இருக்கும் என்று நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x