Last Updated : 18 Jan, 2015 04:00 PM

 

Published : 18 Jan 2015 04:00 PM
Last Updated : 18 Jan 2015 04:00 PM

சமூகத்துக்கு ஊதியம் கொடுப்பவர்கள் கவிஞர்களே

மொழியின் ஆதி வெளிப்பாடு கவிதைதான். ஆதியிலே வார்த்தை இருந்தது என்று வேதாகமத்தில் ஒரு வாக்கியம் உண்டு. ஆதியிலே கவிதை இருந்தது என்றும் சற்றே மாற்றிச் சொல்ல முடியும்.

மொழியின் ஆதி வடிவம் என்பதாலேயே தேர்ந்த அறிஞர்களும், பாமரரும் தங்களை வெளிப்படுத்தும் வடிவமாகக் கவிதைகள் இருக்கின்றன. இந்த உலகம் எத்தனை கோடி ஆண்டுகள் பழைமை கொண்டதாக இருந்தாலும் ஒரு குழந்தையின் பார்வையில் இந்த உலகம் புதியதாகிவிடுகிறதல்லவா. அதேபோல ஒரு கவிஞர் தனது பார்வையின் வழியாக இந்த உலகத்தைப் புதியதாக மாற்றிவிடுகிறார்.

மனிதர்களை வளப்படுத்துவது

சிறுகதை, நாவல், கட்டுரை என மொழி எத்தனையோ வடிவங்களைக் காலப்போக்கில் எடுத்தாலும் புலன்கள் வழியாகத் தனிமனித நினைவுகளையும் வரலாற்று உணர்வுகளையும் அந்தந்த காலத்து வாழ்க்கை நெருக்கடிகளையும் பேசுவதற்கு உகந்த ஊடகமாக கவிதைகளே இருக்கின்றன. வெறும் புலன்களை ஈர்ப்பது மட்டும் கவிதையின் வேலை அல்ல; ஆன்மிகரீதியாக பெரும் வறுமை உள்ள சமூகங்களில் மனிதர்களை வளப்படுத்துவது கவிதைகள்தான்.

20-ம் நூற்றாண்டு, இயற்கையிலிருந்து மனிதர்களை முற்றாகப் பிரித்து அவர்களை அலுவலக ஜீவிகளாகக் குறுக்கிவிட்டது. அவர்களைப் பொருளாதார உற்பத்தி இயந்திரங்களாக மாற்றிவிட்டது. 20-ம் நூற்றாண்டு மனிதர்களின் அவஸ்தைகளையும் நெருக்கடிகளையும், குறைபட்ட மனிதர்களாகிப் போன அவர்களது வேதனைகளையும் வெளிப்படுத்துவதற்கு நவீனக் கவிதைகளும் நவீன ஓவியங்களும் இடம் கொடுத்தன.

அவர்களது அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோஷங்களையும், சின்ன அபத்தங்களையும், சிறிய இளைப்பாறுதல்களையும், சிறிய காதல்களையும், உலராமல் இருக்கும் மனிதாபிமானத் தருணங்களையும், அழகுகளையும் பேசுவதற்கு புதுக்கவிதை எனும் குறுகிய வடிவம் அவர்களுக்கு உதவியாக இருந்தது. காவியங்களை எழுதுவதற்கான, மகத்துவங்களை எழுதுவதற்கான காலம் முடிந்துவிட்டது. சின்னச் சின்ன உணர்வுகளை வெளிப்படுத்த சாதாரண மனிதர்களின் மொழியில் சாதாரண தொனியில் புதுக்கவிதைகள் உலகம் முழுவதும் எழுதப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழ்க் கவிதைகளையும் பார்க்க வேண்டும்.

விக்ரமாதித்யன்

தமிழ் புதுக்கவிதையின் வடிவமும் வெளிப்பாடுகளும் பாடுபொருளும் பல மாறுதல்களைச் சந்தித்துவந்திருக்கின்றன. ஆனாலும், புதுக்கவிதையும் நவீனக் கவிதையும் குணத்திலும் மனநிலைகளிலும் உணர்வு அளவிலும் சங்கக் கவிதைகளின் தொடர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கின்றன.

தமிழ் கவிதை மரபின் தொடர்ச்சியாகத் தமிழில் புதுக்கவிதை எழுதியவர்கள் என்று நகுலன், சி.மணி, ஞானக்கூத்தன் ஆகியோரைச் சொல்லலாம். சங்க காலக் கவிதைகள் கையாண்ட பொருள்வயின் பிரிவு, காதலை வெளிப்படுத்த இயலாத உணர்வுகள், வறுமையும் கவிதையும் சேர்ந்தே தொடரும் நிலைமைகளைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் கவிதைகளை எழுதியிருப்பவர் விக்ரமாதித்யன். துணுக்கைப் போன்ற எளிமையான மன உணர்வுகள், மக்கள் வழக்காறுகளை மொழியில் பிடிக்கும் நேர்த்தி, சாமானிய மனிதனின் அல்லல்கள், நவீன வாழ்க்கைக் கோலத்தில் மனிதன் கொள்ளும் தனிமை மற்றும் விரக்தியை சாதாரண மொழியில் பேசுபவை விக்ரமாதித்யனின் கவிதைகள். தமிழின் அழகான காதல் கவிதைகளையும் இவர் எழுதியிருக்கிறார்.

கவிதையையே வாழ்வாய், கவிதை ரசனையையே வாழ்க்கையின் முதன்மையான அறிதலாய்க் கொண்ட விக்ரமாதித்யனின் கவிதைகள், கவிதை ரசனை குறித்த அவரது கட்டுரைகள் என்று ஒருசேர அவரது 7 புத்தகங்கள் நக்கீரன் பதிப்பகத்தினரால் தற்போது வெளியிடப்பட்டிருப்பது உண்மையிலேயே கொண்டாடத் தக்க நிகழ்வு.

வெவ்வேறு குரல்கள்

1990-கள் வரை அழகியலும் அரசியலும் தனித்தனித் தளங்களில் கவிதைகளில் வெளிப்பட்டன. எழுத்து மரபும் வானம்பாடி மரபும் வேறு வேறாக எதிர்நிலையில் இருந்தன. 90-களுக்குப் பிறகு இந்தப் பிரிவினைச் சுவர் உடைந்து அழகியலோடு அரசியலைப் பேச முடியும் என்று நிரூபணம் செய்வதாகப் புதுக்கவிதைகள் உருவாக்கப்பட்டன. பெண் கவிஞர்கள் வெவ்வேறு சமூகப் பின்னணிகளிலிருந்து தமிழ்க் கவிதை மொழியைப் புதுப்பித்தனர். குட்டி ரேவதி, சல்மா, மாலதி மைத்ரி, பெருந்தேவி, சுதந்திரவல்லி போன்றோர் முக்கியமானவர்கள். ஈழக் கவிதையில் புதிய குரல்கள் கேட்கத் தொடங்கின. நட்சத்திரன் செவ்விந்தியன், பா.அகிலன், ரஷ்மி, நிலாந்தன், அனார் முதலிய புதிய படைப்பாளிகள் வெளிப்பட்டனர்.

ப்ரெவர் ஏற்படுத்திய சலனம்

1990-களில் வெளிவந்த ழாக் ப்ரெவரின் சொற்கள் கவிதைத் தொகுப்பு தமிழ்ப் புதுக்கவிதையில் பெரிய சலனங்களை நிகழ்த்தியது. துக்கத்தையும் ஆத்ம விசாரத்தையும் எழுதுவது மட்டுமே கவிதை அல்ல என்ற அறிதல் அப்போது ஏற்பட்டது. பிற வாழ்க்கை நிலைகள், பிற மனிதர்கள் என புதுக்கவிதை கவனம் செலுத்தத் தொடங்கியது. சின்னச் சின்னக் கதைகள், சிறு குதூகலங்களை தமிழ்ப் புதுக்கவிதை ஏற்றது. பி.ஆர். மகாதேவன், யவனிகா ராம், முகுந்த் நாகராஜன், நேசன், ராணிதிலக், லக்ஷ்மி மணிவண்ணன், ஷங்கர்ராமசுப்ரமணியன், மதிவண்ணன், என்.டி.ராஜ்குமார் என ஒரு புதிய தலைமுறை வண்டலை அடித்துவரும் ஆறென உக்கிரம் கொண்டது.

இந்த வண்டலின் விளைச்சல் அபாரமானது என்பதன் அடையாளமாகச் சமீபத்தில் வெளிவந்திருக்கும் முக்கியமான தொகுப்புகளுள் சிலவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும்:

1. இசையின் ‘அந்தக் காலம் மலையேறிப் போனது’ (காலச்சுவடு வெளியீடு), 2. எம்.டி.முத்துக்குமாரசுவாமியின்

‘நீர் அளைதல்’ (நற்றிணை வெளியீடு), 3. ஷங்கர்ராம சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த கவிதைத் தொகுப்பான ‘ஆயிரம் சந்தோஷ இலைகள்’ (பரிதி பதிப்பகம்), 4. யவனிகா ராமின் ‘தலைமறைவுக் காலம்’ (நற்றிணை வெளியீடு)

5. ஜி.எஸ்.தயாளன் எழுதிய ‘வேளிமலை பாணன்’ (காலச்சுவடு வெளியீடு)

பாரதியின் பிரம்மாண்டமான கனவு

புனைகதை, வரலாறு மற்றும் இன்ன பிற துறைகளில் எழுதுபவர்கள் தங்கள் படைப்புகளுக்காக ஊதியம் பெறுபவர்கள் என்றால் கவிஞர்கள் சமூகத்துக்கு ஊதியம் தருபவர்களாக இருக்கிறார்கள். இதற்கு பாரதி ஒரு நல்ல உதாரணம். தனது புத்தக விற்பனை குறித்துப் பிரம்மாண்டமான கனவு அவருக்கு இருந்தது. தீப்பெட்டிகளைப் போல தனது கவிதை நூல்கள் விற்கும் என்று நினைத்தார்.

அவர் காலத்தில் அது நடக்கவில்லை. ஆனால், அவருடைய காலத்துக்குப் பிறகு அவர் நினைத்ததுதான் நடந்தது. இன்றுவரை பாரதி உயிரோடு இருந்து, தனது புத்தக விற்பனைக்குக் காப்புரிமை பெற்றுக்கொண்டிருந்தால் இந்தியாவின் பணக்கார எழுத்தாளராக ஆகியிருந்திருப்பார். ஆனால், அவரால் தமிழும் தமிழர்களும் பெற்ற வளம்தான் அவருடைய மிகச் சிறந்த காப்புரிமை. அதுதான் கவிதையின் மகத்தான சாதனை. அதைப் போலவே தற்காலத்தின் விளைச்சலின் மதிப்பை எதிர்காலம்தான் சொல்ல வேண்டும்.

அருளானந்தசாமி,
கட்டுரையாளர்
தொடர்புக்கு: arulaanandaswamy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x