Published : 05 Jan 2015 09:34 AM
Last Updated : 05 Jan 2015 09:34 AM

பாலஸ்தீனர்களுக்கு 2015 என்ன தரும்?

கடந்து சென்ற 2014-ம் ஆண்டு, பாலஸ்தீனர்களைப் பொறுத்தவரை, நாடு எனும் அங்கீகாரம் இன்றி, அமைதிக்கான முன்னெடுப்புகள் இன்றி, நீதி கிடைக்காமல் கடந்து சென்ற ஆண்டு! கரைந்துபோன கனவுகளும் உடைந்துபோன உறுதிமொழிகளும் வாய்ப் பேச்சுகளும்தான் அவர்களுக்கு மிஞ்சின. 1993-ல் வாஷிங்டன் நகரில் ஓஸ்லோ ஒப்பந்தத்தில் பாலஸ்தீனர்களின் பிரதிநிதியாக, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) தலைவர் யாசர் அராபத் கையெழுத்திட்டபோது, எதிர்காலம்குறித்து பாலஸ்தீனர்களிடையே ஏற்பட்ட நம்பிக்கை மிகுந்த கனவுகளை, சென்ற ஆண்டில் பலர் நினைவு கூர்ந்தனர்.

ஓஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஓராண்டுக்குப் பிறகு, ஒரு வெற்றி வீரராக காஸா பகுதிக்கு வந்த யாசர் அராபத்துக்கு, ஆயிரக் கணக்கான பாலஸ்தீனர்கள் மகிழ்ச்சி நிறைந்த வரவேற்பை அளித்தனர். இஸ்ரேலியர்களின் ஆக்கி ரமிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என்று அவர்கள் நம்பினார்கள்.

ஓஸ்லோ ஒப்பந்தத்தை வெளிப்படையாக எதிர்த்த ஹைதர் அப்துல் ஷஃபி போன்றவர்களும், யாசர் அராபத்தின் தலைமையை ஏற்காதவர்களும்கூட காஸா பகுதிக்கு அவர் வந்ததை ஒருமனதாக வரவேற்றனர். ஏனெனில், அவரது வரவு ஒரு நல்ல தொடக்கமாகவே கருதப்பட்டது.

அவரது வரவை எதிர்த்தவர்கள் ஹமாஸ் இயக்கத்தினர் மட்டுமே. “ஆக்கிரமிப்பு நடந்துகொண் டிருக்கும்போது யாசர் அராபத் வருகை தருவது வெட்ககரமானது மட்டுமல்ல, புண்படுத்தக் கூடியதும் ஆகும்” என்று ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர் பாளர் விமர்சித்தார்.

அந்தச் சமயத்தில் காஸா பகுதியில், 7 லட்சத் துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வசித்துவந்தார்கள். 7 ஆண்டுகளாக அவர்கள் முன்னெடுத்த இன்டிஃபடா எழுச்சிப் போராட்டத்தின் காரணமாக பாலஸ்தீனர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை இஸ்ரேல் அங்கீகரித்தது. இதன் தொடர்ச்சியாக யாசர் அராபத்தால் காஸா பகுதிக்குத் திரும்பவும் முடிந்தது. ஓஸ்லோ ஒப்பந்தத்தைத் ‘துணிச்சலின் அமைதி’ என்று வர்ணித்த யாசர் அராபத், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இறையாண்மை பெற்ற ஒரு நாட்டை உருவாக்குவதுடன் ஜெருசலேம் நகரை அதன் தலைநகராக்க முடியும் என்றும் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் அல்லது ஹாங்காங்குக்கு இணையாகப் பொருளாதார வளம்மிக்க நாடாக அதை முன்னேற்ற முடியும் என்றும் அவர் நம்பினார். அவரது வார்த்தைகள் நிஜமாகும் என்று பாலஸ்தீனர்கள் பலர் நம்பிப் பரவசமடைந்தார்கள். ஆனால், அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள் அமலுக்கு வரப்பெற்று, பாலஸ்தீன அரசு நிர்வாகம் ஏற்படுத்தப்பட்ட பின்னர்தான், அந்த ஒப்பந்தம் ஒரு கண்துடைப்பு என்று தெரியவந்தது. அந்த ஒப்பந்தம் பாலஸ்தீனர்களுடைய சுதந்திர வாழ்வின் கழுத்தை நெரிப்பதை யாசர் அராபத்தும் அவரது அமைப்பினரும் உணரும் முன்னரே, இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்பும் அவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும் பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

யாசர் அராபத் சந்தேகத்துக்குரிய வகையில் மரணமடைந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர், பாலஸ் தீனர்களுக்கான நாடு என்று ஒன்று மிச்சம் இருக்க வில்லை. இடிபாடுகள் நிறைந்த காஸா பகுதியோ முற்றுகைக்குட்பட்டிருக்கிறது. அகதிகள் மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்புகள் அருகிவிட்டன. ஆக்கிர மிப்புப் பகுதிகளைத் திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகள் இல்லை. ஜெருசலேம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தங்களுடன் இணைத்துக் கொள்ளும் முடிவை மாற்றிக்கொள்ள இஸ்ரேல் தயாராக இல்லை.

பாலஸ்தீன நிலப் பகுதிகளை ஆக்கிரமிப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு ஐ.நா. தீர்மானங்கள் பலவற்றில் வலியுறுத்தப்பட்டிருந்தும் அவற்றை ஏற்க இஸ்ரேல் முன்வரவில்லை. மாறாக, அரபுப் பகுதி ஜெருசலேத்தைத் தங்கள் நாட்டுடன் இணைத் துக்கொண்ட இஸ்ரேல் அரசு, யூதர்கள் மட்டும் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை அந்தப் பகுதியில் நிறுவியிருக்கிறது. கையகப்படுத்தப்பட்ட அரபு நிலப் பகுதி களில், பல மைல்கள் தூரத்துக்குச் சாலைகளையும் அமைத்திருக்கிறது.

சர்வதேசச் சமூகம் தொடர்ந்து மவுனம் சாதிக்கும் சூழலில், பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை நிகழ்த்திவருகிறது. காஸா பகுதி தகர்க்கப்படுவதுடன் இனப்படுகொலைகள் நடத்தப்படு கின்றன. ஐ.நா. தீர்மானங்களையும் சர்வதேசச் சட்டங்களையும் மீறிவரும் இஸ்ரேல், தொடர்ந்து அடாவடியாகச் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவு கிடைக்கும் வரை, பாலஸ்தீனர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் திட்டம் எதுவும் தற்சமயம் இஸ்ரேலிடம் இல்லை.

பிரிட்டனின் காலனி நாடாக இருந்த அனுபவம் கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் அரசியல் தலை வர்கள், பாலஸ்தீனர்களின் உரிமையை நசுக்கும் இஸ்ரேலின் நிலைப்பாட்டை ஆதரிக்கக் கூடாது. “எல்லா மனிதர்களும் சமமாகவே உருவாக்கப் பட்டவர்கள். மனிதர்களை ‘உருவாக்கியவர்’அளித்த அந்நியப்படுத்த முடியாத உரிமைகளை, வாழ்வை, சுதந்திரத்தை, மகிழ்ச்சியின் நோக்கம் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்” என்று பிரிட்டனிட மிருந்து விடுதலை பெற்றபோது அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டது. அந்தக் கொள்கைகளை அமெரிக்கர்கள் மனசாட்சியுடன் நிறைவேற்ற வேண்டிய நேரம் இது.

- பாலஸ்தீன் குரோனிக்கிள் | பாலஸ்தீன இணைய இதழின் தலையங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x