Published : 06 Jan 2015 09:17 AM
Last Updated : 06 Jan 2015 09:17 AM

இசைக்கு எதிரானதா இஸ்லாம்?

இசை இசையாகவே பிறந்தது; நாம் நம்முடைய வகைமைக்குத் தக்காற்போல் அவற்றைப் பல வண்ணங்களாகப் பிரித்துக்கொண்டோம். இன்னமும் நாகரிகத்தின் ஒரு ஒளிக்கீற்றில்கூட நனையாத பழங்குடியினரிலிருந்து நாகரிகத்தின் உச்சத்தை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோடு இணைத்து அனுபவிக்கிறவர்கள் வரை எந்தப் பிரிவுமே இசையை ஒதுக்கித் தள்ளிய சரித்திரம் இல்லை. இசை ஓர் உடலியல் மருத்துவம்; உணர்வுகளின் மீட்டல்.

இசை மனித இனத்தின் பொது அவசியம். சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால், இசைக்கும் இஸ்லாத்துக்கும் இடையே எண்ணற்ற பகைமுடிச்சுகளை ஏராளமாகப் போட்டுவைத்திருக்கிறார்கள். இசைக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்புகளேதும் இல்லை என்று நிறுவுவதில் இஸ்லாமிய எதிர்ப்புச் சக்திகள் எவ்வளவு ஆர்வமாய் இருக்கின்றனவோ, அதே அளவுக்கு இஸ்லாத்தின் உள்ளும் அந்தச் சக்திகள் பலமாக வேரோடிப்போயுள்ளன. முகலாய மாமன்னர் ஒளரங்கசீப் இசைக் கருவிகளைப் போட்டு உடைத்ததாகப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் குறிப்புகள் இருக்கின்றன. ஒருவரை இசை, கலைகளுக்கு அப்பால் உள்ள மனிதராகக் காட்டினால், அவரை ஒரு தீயசக்தியாக நிறுவிவிடலாம் என்கிற நோக்கத்துக்கு இது பயன்படுகிறது.

ஆனால், இஸ்லாம் கலை, பண்பாட்டுக்கு எதிரானதாக இருக்க முடியாது என்பதை நபிகள்நாயகத்தின் வாழ்க்கையிலிருந்தும், அவர் இஸ்லாத்தை அரேபியப் பழங்குடிச் சமூகத்தின் கலாச்சார வேர்களிலிருந்து முழுவதும் துண்டித்துக்கொள்ளாமல், அதன் ஏற்புடைய அம்சங்களின் வழியாகவே வளர்த்தெடுத்தார் எனபதையும் அவருடைய வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்க்கும் ஒரு முஸ்லிம் அல்லாதவர்கூட உணர்ந்தறிய முடியும்.

கலை இலக்கியங்களுக்கு அப்பால் எந்தச் சமூகமும் தன்னை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள இயலாது. கலை இலக்கியங்கள் இஸ்லாத்தின் மாண்புகளைச் சீர்குலைத்துவிடும் என்று கருதுகிறவர்கள், தங்களின் பலவீனமான கருத்துகளைத் திணித்து எதிர்ப்புச் சக்தியற்ற உடலாக இந்தச் சமூகத்தை வார்க்கிறார்கள்.

சூஃபிகளின் சேவை

இஸ்லாத்தைத் தங்களின் ஞானப் பாடல்களாலும் சமூகச் சேவைகளாலும் பல்வேறு சமூகங்களுக்கும் நாடுகளுக்கும் அஹிம்சை முறையில் எடுத்துச்சென்ற சூஃபிகள் தொடர்ந்து திரைமறைவில்லாத வாழ்க்கையை வாழ்ந்துகாட்டியவர்கள்; இந்தச் சூழலையொட்டி அவர்களின் பணிகளுக்கு இசையும் கவிதைகளும் தானாக இணைந்துகொண்டன. பொதுவான மனித இயல்பின்படி ஒரு கருத்தை அல்லது தத்துவத்தை இறுக்கத்துடன் மூர்க்கமாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், அது அடிப்படைவாதமாக மாறிவிடும். சமூகப் புத்தெழுச்சியையும் விரிந்தளாவிய மனப்பாங்கையும் பெறுகின்ற வாய்ப்பு அறவே தடுக்கப்படும். நாளடைவில் அது தன்னையோ தனது இனத்தையோ சாராதவர்களின்மீதான வெறுப்பு மனநிலைக்கு இட்டுச் செல்லும். இஸ்லாம் இப்படியான துர்க்கதிக்கு ஆளாக விடாமல் தடுத்தவர்களில் சூஃபிகளின் பங்கு மகத்தானது. அவர்கள் இஸ்லாத்தை அதன் தன்மை குலைந்துவிடாமல், கடைப்பிடிக்க எளிய வழிகளில் அறிமுகம் செய்தார்கள். இதனை தத்துவப் போதனையாகச் செய்வதைவிட இசை, கவிதைகளை உப கருவிகளாகக் கொண்டு, சமூகச் சேவையுடன் இணைத்துச் செய்துள்ளார்கள்.

இசை, மயக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் அதன்மூலம் ஒருவனை வழிகெடுக்க முடியும் என்று சில மார்க்கவாதிகள் கூறுவது பெரிய நகைப்புக்குரிய விஷயமாகும். அவர்கள் தங்கள் தரப்புக்கு ஒரு நியாயம் கற்பிக்க இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புகிறார்கள். இஸ்லாமியச் சிந்தனைகளில் மிகவும் இறுக்கமுள்ள சிலர், இசை போன்ற கலை வடிவங்கள் உலகப் பேரழிவின் அடையாளங்கள் போலவும், இசையே ஒரு நரக வடிவம், அதில் ஈடுபடுவது நரகத்தின் பாதை எனவும் கூறி, மார்க்க அறிவை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

இறை நம்பிக்கையை இதுபோன்ற பூச்சாண்டித் தனங்களால் அடைய முடியாது. மனித நேயமும் மானுடச் சேவையும்தான் இஸ்லாத்தின் ஆதியும் அந்தமுமான இலக்குகள். நபிகள் நாயகம் தன் வாழ்க்கையனுபவங்களில் முன்பிருந்த பலவற்றை மாற்றி மானுட உறவுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். இசையும் கலைகளும் இல்லா வாழ்க்கை ஒரு பாலைவனத்துக்கு நிகரானது. ஆனால், இறையியலை இவ்வளவு பூஞ்சானாக இவர்கள் வடித்திருப்பதைப் பார்க்கும்போது, நாத்திகர்களுக்குச் சிரமங்கள் குறைவுதான்.

வேறு வழிகளா இல்லை?

வழிகெடுக்கும் ஆபத்துக்கு உலகில் வேறு வழிகளா இல்லை! சொல்லப்போனால் பொருளாதாரம், வணிகம் சார்ந்துதான் உலகமே தறிகெட்டு அலைகிறது. பணம் மற்றும் அதிகாரத்தின் மயக்கும் சக்தியை விடவும் இசையின் மயக்கும் சக்தி ஒரு கடுகளவும் தேறிவராது. இதனால் சமூகம் பிளவுபட்டதாகவோ, போர்கள் மூண்டு மனிதர்கள் அழிந்தொழிந்ததாகவோ, குண்டுகள் வெடித்ததாகவோ ஒரு ஆதாரத்தையும் கொடுத்துவிட முடியாது. ஒவ்வொன்றையும் நாம் பயன்படுத்தும் வழிமுறைகளை வைத்துத்தான் நன்மையும் தீமையும் உலகில் உருவாகின்றன. இசைப் பேரழிவுக்கு குர்-ஆனிலும் சுன்னாவிலும் (நபிகள் நாயகத் தின் நடைமுறைகள்) ஆதாரங்கள் இல்லை.

ஏற்கெனவே, சர்வதேசச் சூழலால் முஸ்லிம் சமுதாயத்தின் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள அவமானங்களும் கறைகளும் நீக்கப்பட வேண்டுமென்றால், இஸ்லாமியச் சமூகம் கலையின் அனைத்து வடிவங்களையும் உடனடியாகக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னைப் புனரமைத்துக்கொள்ளவும் இது அவசியம். கலை மற்றும் இசையிலிருந்தும் முஸ்லிம் சமூகத்தை அப்புறப்படுத்தி இஸ்லாத்தை வறட்டுத்தனமாகக் கற்றுக்கொடுத்ததினால்தான் இஸ்லாமிய உலகம் சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியவில்லை. இவர்களுக்கு இஸ்லாமிய விழுமியங்களையும், அதைச் சமூகத்தின் மத்தியில் சூஃபிகள் கொண்டுவந்து சேர்த்த விதங்களையும் மென்மையான முறையில் போதித்திருந்தால், இன்றைக்கு இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்காது. ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ என்பதன்பேரால் உலக சமுதாயத்தை அச்சுறுத்தி, மேலை நாடுகள் எதிர்வியூகம் அமைத்திருக்கவும் முடியாது.

தமிழ்நாட்டில் இஸ்லாமும் இசையும்

இசை, கலை வடிவங்கள் மங்கி மறைந்துகொண்டிருக்கிற இஸ்லாமியத் தமிழ்ச் சமூகத்தில், இப்போது அதைப்பற்றிய விழிப்புணர்வு அரும்பாடுபட்டு மீண்டும் உருவாகிவருகிறது. குறிப்பிட்ட சில வரவுகளை இங்கே கவனப்படுத்துவது சிறப்பாக இருக்கும். கடந்த ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் எட்டாவது சர்வதேச மாநாடு முழுக்கவும் சூஃபித்துவ இசையின் மீதான புரிந்துணர்வை வளர்த்தது. அந்த இசையின் நவீன வடிவங்களை அதன் பாரம்பரிய இசை மரபாளர்களான ஃபக்கீர்களோடு இணைத்து, மேடையில் அரங்கேற்றம் செய்து ஒரு புதிய பாணி வகுத்தார் இசையமைப்பாளர் தாஜ்நூர். ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரிகள் உள்ளிட்ட தமிழ்த் திரையின் பாடகர்கள் பலரும் பங்கேற்றார்கள். மேலும் கோம்பை அன்வர், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரின் ஆவணப்படங்கள், குமரி அபூபக்கர், தக்கலை ஹலிமா, ராஜா முகம்மது உள்ளிட்டோர் செய்யும் பங்களிப்புகள் புண்பட்ட சமூகத்துக்கு மருந்திடுகின்றன. ரொம்பவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இன்றைய தமிழகத்தின் சிறந்த இசைப் பேரறிஞராக அனைவராலும் மதிக்கத்தக்கவராய் இருப்பவர் நா. மம்மது.

இசை புவிப் பரப்பின் மீது இழைஇழையாக அதன் இயல்பிலேயே பரவிப் படர்ந்தபடி இருக்கிறது. இவ்வகையில் அது இறைவனின் ஏற்பாடு. இதை எப்படி நிராகரிக்க இயலும்? இசையை நிராகரித்து இஸ்லாத்தை முன்னெடுத்துவந்தது சரி என்று எவரேனும் கருதினால், அதை இன்றைய இஸ்லாமியச் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, தங்களின் கருத்தை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு இருக்கிறது. ஹராம் என்பதை ஒருவரின் நெருக்கடி மிக்க சமயத்தில் கருதிப்பார்த்து, அதை ஏற்க இஸ்லாம் ஒரு நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளது. அதாவது, அன்றாட நடப்பியலை ஒதுக்கிவிட்டு இஸ்லாம் உருவாகவில்லை.

இசையின் வரலாற்றையும் அது மானுடத்துக்கு வழங்கிய கொடையையும் அதன் பரிமாணங்களையும் சோதித்தறிய வேண்டிய அவசியம் இனியுமா தேவை?

- களந்தை பீர்முகம்மது, ‘பிறைக் கூத்து’ முதலிய நூல்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: kalanthaipeermohamed@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x