Published : 09 Jan 2015 10:14 AM
Last Updated : 09 Jan 2015 10:14 AM

காந்தியின் தீபத்தை யார் ஏந்திச்செல்வது?

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு காந்தி நிரந்தரமாகத் திரும்பி இன்றோடு நூறு ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. இந்தியர்களுக்கு காந்தி பிறந்த நாளும் சுதந்திர தினமும் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு இந்த நாளும் முக்கியமானது.

காந்தி இல்லாமல் இருந்திருந்தாலும் சரி, காந்தி இந்தியாவுக்குத் திரும்பாமல் இருந்திருந்தாலும் சரி இந்தியாவுக்கு எப்படியும் சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று காந்தியின் விமர்சகர்கள் ஒரு கருத்தை வழக்கமாகச் சொல்வார்கள். அது உண்மைதான். காந்தி இல்லாமலும் சுதந்திரம் கிடைத்திருக்கும். ஆனால், இந்த அளவு மாண்புடனும் உலக மக்களின் நன்மதிப்புடனும் அந்தச் சுதந்திரம் ஈட்டப்பட்டிருக்குமா? ஆங்கிலேயர் மீதான வெறுப்பைப் பெரும் நெருப்பாக வளர்த்து சுதந்திரத்தை வென்றெடுக்காமல் அவர்களை நண்பர்களாகவே வழியனுப்பியது இந்தியச் சுதந்திரம். முன்னுதாரணமற்ற நிகழ்வு அது. மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு போராட்டங்களுக்கும் அதுவே முன்மாதிரி.

‘காந்தி தேவையில்லாதவராக ஆகிவிடுவார். அவரை யாரும் நினைவு வைத்திருக்க மாட்டார்கள்’ என்று சொல்லப்பட்ட ஆருடங்களையெல்லாம் மீறி உலகுக்கே ஒளி கொடுக்கும் மாபெரும் சக்தியாக காந்தி மாறியிருக்கிறார். இந்திய அளவிலும் உலக அளவிலும் காந்தி ஏற்படுத்திய தாக்கமும் மாறுதலும் மறுக்கவே முடியாதவை. இதைத் தான் இந்தியாவின் வினோபா பாவே, பாபா ஆம்தேயிலிருந்து உலக அளவில் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, டெஸ்மாண்ட் டூடூ, ஆங் சான் சூச்சி வரை நிரூபித்தார்கள், நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேயரிடம் அடிமைப் பட்டு, ஒடுக்கப்பட்டிருந்த ஒரு தேசம் வெடித்தெழும் தருணத்தில் இருந்தது. அவ்வப்போது இந்தியர்களின் கோபம் சிறிய அளவில் வெடித்துக்

கொண்டும்தான் இருந்தது. அந்தத் தருணத்தில்தான் காந்தி இந்தியாவுக்குத் திரும்புகிறார். இந்தியாவுக்குத் திரும்பிய உடனேயே அவர் சுதந்திரப் போராட்டத்தில் குதித்துவிடவில்லை. முதலில் இந்தியாவை ஆழமாக உள்வாங்கிக்கொள்கிறார். அதற்குப் பிறகு தனது பரிசோதனையை அவர் தொடங்குகிறார். அந்தப் பரிசோதனையின் துணைவிளைவுகள்தான் சுதந்திரப் போராட்டமும் சுதந்திரமும், தவிர அவரது பிரதான இலக்கு என்பது இந்தியாவின் ஆத்ம சுதந்திரம் தான். உண்மையில் காந்தி போராடியது இந்தியாவின் ஆத்ம சுதந்திரத்துக்குத்தான். அதுதான் மற்ற நாட்டின் சுதந்திரப் போராட்டங்களைவிட மாறுபட்டதாக இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆக்குகிறது. அதுதான் மற்ற நாட்டின் தலைவர்களைவிட மாறுபட்டவராக காந்தியை ஆக்குகிறது.

இந்தியர்கள் பௌதிக அடிப்படையிலும் புவியியல் அடிப்படையிலும் மட்டுமே ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். ஆன்ம அளவில் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். ஏழ்மை, தீண்டாமை, சாதியம், இனப் பிரிவினை, கல்வியறிவில் பின் தங்கிய நிலை, இந்தியாவைக் குறித்தும் இந்தியராக இருப்பதைக் குறித்தும் தாழ்வுணர்ச்சி, பெண்ணடிமைத்தனம் இதெல்லாம்தான் இந்தியர்களின் ஆன்மாவை அடிமைப்படுத்துபவை. இவற்றிலிருந்து இந்தியர்களை விடுதலை பெறவைப்பதுதான் மிகவும் முக்கியம் என்று காந்தி கருதினார். அதனால்தான் இந்தியச் சுதந்திர வெற்றியைக்கூட அவர் புறக்கணித்தார். இந்தியாவின் உண்மையான சுதந்திரம் இதுவல்ல என்று அவர் கருதினார்.

ஆன்ம சுதந்திரத்துக்கான காந்தியின் போராட்டம் முழு வெற்றியைப் பெறவில்லை. ஏனெனில் அது ஒரு தொடர் போராட்டம். அந்தப் போராட்டத்துக்கான பெரும் உந்துதலை காந்தி தந்துவிட்டுப் போயிருக்கிறார். அந்த உந்துதலைத் தொடர் ஓட்ட தீபம்போல் ஏந்திக்கொண்டு செல்லும் கடமை நம்மிடம் இருக்கிறது. இந்தியச் சுதந்திரத்தையும் காந்தியையும் போதாமையாகப் பார்ப்பவர்கள் இந்தத் தொடர் ஓட்டத்தில் முன் வரிசையில் நிற்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x