Last Updated : 21 Jan, 2015 08:29 AM

 

Published : 21 Jan 2015 08:29 AM
Last Updated : 21 Jan 2015 08:29 AM

குல்லுக் உணர்த்தும் பாடம்

சுற்றுச்சூழல்குறித்து அக்கறை இல்லாமல், துரப்பணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆர்க்டிக் கடல் பரப்பில் சுக்சி, பியூஃபோர்ட் கடல் பகுதியில் புதிய எண்ணெய்க் கிணறு அமைக்கும் துரப்பணப் பணியை ராயல் டச்சு ஷெல் நிறுவனம், 2012 டிசம்பரில் மேற்கொண்டது. கடுமையான குளிர்ப் பிரதேசமான ஆர்க்டிக்கில், சவாலான பருவநிலைகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சியானது, தொழில்நுட்பச் சிக்கலால் நெருக்கடிக்கு உள்ளானது. துரப்பணக் கருவிகளையும் கப்பலையும் கப்பல் குழுவினரையும் மீட்பதே பெரிய சாகசமாகிவிட்டது. எண்ணெய்த் துரப்பண முயற்சி வெற்றியைத் தரவில்லை என்றாலும், அந்த சாகசத்தைப் படிப்போர் சிலிர்க்கும் வகையில் மெக்கென்சி ஃபங்க் என்பவர் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.

வட துருவத்தில் உள்ள ஆர்க்டிக் கடல் பரப்பில் சுக்சி, பியூஃபோர்ட் கடல் பகுதிகளுக்கு இடையில் ரத்தத்தை உறையவைக்கும் கடுங்குளிரில், துரப்பணப் பணியின்போது கப்பலொன்று தரைதட்டிச் செயலிழந்தது. அந்த இடத்துக்கு அருகில் இருந்த ஆழ்கடல் துறை முகமான அலாஸ்காவே 1,000 மைல் தொலைவில் இருந்தது என்றால், எப்படிப்பட்ட தீவாந்தரமான இடத்தில் துரப்பணப் பணியை மேற்கொண்டிருந்தனர் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.

துண்டிக்கப்பட்ட குல்லுக்

குல்லுக் என்கிற துரப்பணக் கருவியானது கப்பலுடன் கட்டி, கடலில் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கே தரை இறக்கப்பட்டது. கடலடித் தரையைத் துரப்பணக் கருவி தொட்ட அதே வேளையில், கடல் பரப்பில் தண்ணீர் உறைந்து பாறையாவது சடசடவெனத் தொடங்கிவிட்டது. இனியும் இங்கு தாமதித்தால் துரப்பணக் கருவியுடன் கப்பலும் உறைந்து நகர முடியாமல் போய்விடும் என்ற நிலையில், அவசர அவசரமாகத் துரப்பணக் கருவி மேலே தூக்கப்பட்டு, கப்பலும் மெதுவாக நகர்த்திக் கொண்டுவரப்பட்டது. குல்லுக்கும் அதற்குத் துணையாகச் சென்ற கப்பலும் அடுத்தடுத்து ஏராளமான பனிப் புயல்களைச் சந்திக்க நேர்ந்தது. இந்தச் சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், எந்த நேரம் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற நிலையிலேயே குழுவினர் திரும்பத் தொடங்கினர்.

துரப்பணக் கருவியைக் கட்டி இழுத்துச் சென்ற கப்பலின் கேப்டன், பனிப் புயல்களால் சேதத்தைத் தவிர்க்க, அந்தத் துரப்பணக் கருவியுடனான கம்பிவடக் கயிற்றையே கப்பலின் இணைப்பிலிருந்து துண்டிக்க நேர்ந்தது. துரப்பணக் கருவியின் மேடையில் இருந்த தொழிலாளர்களும் தொழில்நுட்ப நிபுணர்களும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.

ஷெல் நிறுவனத் தவறுகள்

ஷெல் நிறுவனம் இந்தப் பணியில் செய்த தவறு களையெல்லாம் ஒன்றுவிடாமல் பட்டியலிட்டிருக் கிறார் ஃபங்க். உலகிலேயே மிகவும் ஒதுக்கப்பட்ட, ஆள் அரவமற்ற இடமான ஆர்க்டிக் கடல் பரப்பில் கடலடியில் இருக்கும் பெட்ரோலிய எண்ணெயைத் தோண்டி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்த ஷெல் நிறுவனம், 600 கோடி டாலர்களை அதற்காகச் செலவிடுவது என்று தீர்மானித்தது. இதர விஷயங்களைத் துல்லியமாகக் கணக்கிடவில்லை. கடலோரக் காவல்படை, குல்லுக்குக்கு ஏற்பட்ட சோதனைகளைத் தீர விசாரித்தது. இயற்கையின் சீற்றம் எப்படி இருக்கும் என்று சரியாகக் கணிக்கவும் அதற்கேற்பப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் மட்டும் ஷெல் நிறுவனம் தவறவில்லை. எந்தெந்தப் பகுதியில் எண்ணெய்த் துரப்பணப் பணிகளை மேற்கொள்ளலாம், மேற்கொள்ளக் கூடாது என்று சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட விதி முறைகளையும் சட்டங்களையும்கூட அது மீறியிருந்தது.

சாகசம் தேவையா?

அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, எனக்குள் இன்னொரு சிந்தனை ஏற்பட்டது. சர்வதேசச் சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றினால்கூட, ஆர்க்டிக் போன்ற துருவப் பகுதியில் துரப்பணப் பணிகளை மேற்கொள்வது குழுவினருக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தாகவே முடியும். உலகின் எல்லாப் பகுதியிலும் பெட்ரோலிய எண்ணெய்க் கிணறுகள் வற்றிவிட்டாலும், ஆர்க்டிக் பகுதியில் கடலுக்கு அடியில் சுமார் 2,300 கோடி பீப்பாய் அளவுக்கு எண்ணெய் இருப்பு இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த எண்ணெயை எடுக்க இந்த அளவுக்குச் சாகசம் தேவையா என்ற கேள்வியே எழுகிறது.

முதலாவது அம்சம் பருவநிலை. “கடுங்குளிர் குறைந்த வறண்ட பருவநிலையாகச் சில மாதங்களுக்கு மாறிவருவதால்தான் எண்ணெய்த் துரப்பண நிறுவனங்களால் இந்த இடத்தை அணுகவே முடிகிறது. பனிப்படர்வு அடர்த்தி குறைந்துவிட்டது. கடற்கரையோரம் பனி வடிந்துவருகிறது” என்கிறார் மைக்கேல் லெவைன். உலகப் பெருங்கடல்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஓஷியானா என்ற அமைப்பின் பசிபிக் பிராந்திய மூத்த உறுப்பினர்தான் மைக்கேல் லெவைன். பருவநிலை மாறுதலால் பனிப்பொழிவு மட்டும் குறையவில்லை, காற்றின் வேகம், தன்மை, தண்ணீர், கடல் நீரோட்டம் என்று அனைத்துமே பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். எவராலும் அணுக முடியாமல் கடுங்குளிராகவும் கும்மிருட்டாகவும் இருக்கும் துருவப் பகுதிக்கு இன்னொரு குணாதிசயமும் சேர்ந்துள்ளது. அது - எப்படியிருக்கும் என்று ஊகிக்க முடியாத நிலைமை. இங்கே எண்ணெய் வளம் தேடி துரப்பணப் பணிகளை மேற்கொள்ள வரும் நிறுவனங்கள், இங்கு தரை எப்படியிருக்கும், எப்போது மாறும், காற்று எப்படி வீசும், அது எப்போது சூறாவளியாக மாறும் என்றெல்லாம் தெரியாமல் வருகின்றன.

ஆற்றல் இல்லாத அரசு

இவ்வாறு சவால் மிகுந்த பருவநிலை நிலவும் இடத்தில் தொழில் செய்ய நினைக்கும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அரசுக்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. விடை: இல்லை. மெக்ஸிகோ வளைகுடாவில் நேரிட்ட விபத்துக்குப் பிறகு, பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருக் கிறது. ஆனாலும், எண்ணெய்த் துரப்பணத் தொழில் நிறுவனங்களுக்குக் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்தும் ஆற்றல் எந்த நாட்டு அரசுக்கும் இல்லை.

தொழில்நுட்பம் மேம்பட்டு வருவதாலும், ஏராளமான இடங்களில் துரப்பணப் பணிகளை மேற்கொண்டு எண்ணெய் வளத்தை அதிகப்படுத்தும் ஆர்வம் நிறுவனங்களுக்கு அதிகரித்து வருவதாலும், அவற்றைக் கட்டுப்படுத்தும் வல்லமை அரசுகளுக்கு இல்லாமல் போய்விட்டது என்கிறார் லெவைன்.

கடல் வளம் பாதிப்பு

இந்தத் தொழில்தொடர்பாகப் பல சுற்றுச்சூழல் பிரச்சினைகள் இருக்கின்றன. 25 ஆண்டுகளுக்கு முன்னால் எக்ஸான் வால்டெஸ் நிறுவனம் மேற்கொண்ட எண்ணெய்த் துரப்பணப் பணியின்போது ஏராளமான எண்ணெய் வெளிப்பட்டுக் கடலில் கலந்தது. அதனால், சுற்றுச்சூழல்ரீதியாகக் கடல் வளத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அப்படி நேராமல் தடுக்கவும் நேர்ந்தால் பாதிப்புகளைத் தவிர்க்கவும் எந்தவிதத் தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது பருவநிலைகளிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்த மாற்றமும் தீமையைப் பெருக்குவதாகவே ஆகிவிட்டது.

எல்லாவற்றையும்விட முக்கியம், இந்த எண்ணெயைப் பாதுகாப்பாகத் தோண்டியெடுக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்கிறார் லெவைன். குல்லுக் விவகாரத்தில் இதுதான் நாம் உணர வேண்டிய முக்கிய பாடம்.

ஆர்க்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் கச்சா பெட்ரோலிய எண்ணெய், வேறு எங்கும் இடம் மாறி ஓடிவிடப்போவதில்லை. இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகுகூட எண்ணெய் நிறுவனங்களோ, அரசோ நினைத் தால் அதைத் தோண்டி எடுத்துவிட முடியும். ஒரு வேளை, எதிர்காலத்தில் நமக்கு அது தேவைப்படாமல் மாற்று எரிபொருட்கள்கூட நம்முடைய தேவையைப் பூர்த்திசெய்துவிட முடியும். எனவே, நாம் அதைத் தோண்டியெடுத்து சூழலைக் கெடுக்கப்போகிறோமா அல்லது முயற்சியைக் கைவிட்டு சூழலைக் காப் பாற்றப்போகிறோமா? நாம் யோசிக்க வேண்டும்.

‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x