Last Updated : 23 Dec, 2014 09:20 AM

 

Published : 23 Dec 2014 09:20 AM
Last Updated : 23 Dec 2014 09:20 AM

மனிதம் மரித்துப்போன ஒரு நாளில்...

தலிபான் பயங்கரவாதிகளின் கொலைவெறித் தாண்டவத்துக்குப் பிறகு, பெஷாவர் நகர ராணுவப் பள்ளிக்கூடமே ரத்தத்தை உறையவைக்கும்படி காட்சி தருகிறது. பள்ளிக் கட்டிடங்களின் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் துப்பாக்கிகளிலிருந்து சீறிப் பாய்ந்த குண்டுகள் ஏற்படுத்திய வடுக்களும், மாணவர்களின் உடல்களிலிருந்து பீறிட்டு அடித்த ரத்தமும், உடலிலிருந்து பிய்ந்த தசைகளின் துணுக்குகளும், சிதறிய பைகளும், புத்தகங்களும், கருவிகளுமாகக் காட்சிதருகின்றன.

பள்ளிக்கூடத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த தலிபான்கள் எல்லாக் கட்டிடங்களுக்கும் சென்று கண்ணில் பட்ட மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டுக்கொன்றிருக் கிறார்கள். பின் வாசல் வழியாகத் தப்பி ஓடிய பலரும், இறந்தவர் களுக்கு நடுவில் உயிரற்ற சடலம் போலப் படுத்துக்கொண்டு நடித்த சிலரும்தான் உயிர் தப்பியிருக்கிறார்கள்.

இனி, அடுத்தது என்ன?

“நீங்கள் சொல்லி அனுப்பியபடி பள்ளிக்கூடத்தில் இருந்த எல்லா மாணவர்களையும் சுட்டுக்கொன்றுவிட்டோம். இனி, அடுத்து என்ன செய்ய வேண்டும்?” என்று பயங்கரவாதிகளின் தலைவன் அபுசார், இந்தப் படுகொலைகளுக்குப் பிறகு பள்ளிக்கூடத்திலிருந்து எங்கோ இருந்த யாரிடமோ கேட்டிருக்கிறார்.

“இப்போது ராணுவம் உள்ளே வரும், அவர்களையும் கொன்றுவிட்டு அதன் பிறகு உங்களை மாய்த்துக் கொள்ளுங்கள்” என்று அங்கிருந்து பதில் வந்திருக்கிறது. பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகள் இந்தத் தொலைபேசி உரையாடலை இடைமறித்துக் கேட்டுள்ளார்கள். ராணுவப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு அதற்குண்டான ஆயுதங்களுடன் திட்டமிட்டு வந்திருக்கிறார்கள். பெரிய வாகனத்தில் வந்தவர்கள், ‘இனி திரும்பிப் போகக் கூடாது’ என்ற முடிவோடு பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் உள்ள மயானம் வழியாக நுழையும்போதே, வாகனத் திலிருந்து இறங்கியதும் அதை வெடிகுண்டால் தகர்த்து எரித்திருக்கிறார்கள். பல மணி நேரம் சுழன்று சுழன்று அந்த பள்ளிக்கூடத்துக்குள்ளேயே சுற்றிச்சுற்றி கட்டிடம் கட்டிடமாகப் போய்ச் சுட்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானே செயலிழந்தது

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்தப் படுகொலையை அடுத்து புதன்கிழமை பாகிஸ்தான் முழுவதும் செய லிழந்து பரிதவித்தது. தலிபான்களின் பயங்கரவாதத் தாக்குதல் அந்த நாட்டவருக்குப் புதியதல்ல என்றாலும், பச்சிளங் குழந்தைகளை இப்படி ஈவிரக்கமின்றிக் கும்பல் கும்பலாகச் சுட்டுக்கொல்வார்கள் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை. அரசுக் கட்டிடங்கள் உட்பட எல்லா இடங்களிலும் தேசியக் கொடிகள் பாதிக் கம்பத்தில் பறந்தன. கடை, வர்த்தக நிறுவனங்கள் மூடியிருந்தன. தொலைக் காட்சிகளில் அவ்வப்போது வரும் தகவல்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தனர். கோபம், துயரம், ஆற்றாமை, விரக்தி என்று வெவ்வேறு உணர்ச்சிகளுக்கு மாறிமாறி ஆட்பட்டார்கள்.

சவப்பெட்டிகளின் ஊர்வலம்

பெஷாவர் நகரமே சிறிய சவப்பெட்டிகளால் நிறைந்து விட்டதோ என்று அஞ்சும்படியாக இருந்தது. ஆளரவமே இல்லாத வீதிகளில் திடீர் திடீரெனச் சிலர் கும்பலாக ஒரு சவப்பெட்டியைச் சுமந்துகொண்டு கல்லறையை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். மக்கள் கண்ணீருடன் மசூதி களுக்கும் கல்லறைகளுக்கும் சென்றார்கள்.

அதிகாரிகள் ஆய்வு

ராணுவப் பள்ளியில் நடந்தவற்றை மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தடயவியல் துறையினரும் ஆங்காங்கே தடயங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தனர். பள்ளிக்கூட முதல்வரின் அறையே பெரிய வதைக்கூடமாகக் காட்சி தந்தது. அங்கே ஒருவர் தன்னுடைய உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இறந்திருக்கிறார். அவருடன் சேர்ந்து அந்த அறையில் இருந்தவர்களும் உடல் சிதறி இறந்திருக்கிறார்கள். சுவரெங்கும் ரத்தமும் சதைத் துண்டுகளும் அப்பிக்கிடக்கின்றன. குண்டு பாய்ந்த அடையாளங்களும் வெடிகுண்டுச் சிதறல் ஊடுருவியதால் ஏற்பட்ட பாதிப்புகளுமாக அந்த அறையும் பலமாகச் சேதப் பட்டிருக்கிறது. தாஹிரா காஜி என்ற அந்தப் பெண் முதல்வர் இரண்டு மாணவர்களை அணைத்துக் காப்பாற்ற முயற்சி செய்து, அந்த மூர்க்கர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்.

மையமான நிர்வாகக் கட்டிடத்தைச் சுற்றியிருந்த நான்கு பெரிய கட்டிடங்களிலும் மாணவர்கள் சடலங்களாக விழுந்துள்ளார்கள். புத்தகப் பைகளும் சாப்பாட்டுப் பொட்டலங்களும் காலணிகளும் பெல்ட்டுகளும் தொப்பி களும் நாலாபுறங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. ரத்தம் சுவர்களில் தெறித்திருக்கிறது. ஆங்காங்கே சிறிய குளம் போலத் தேங்கி, காய்ந்தும் உறைந்தும் கிடக்கிறது. துர்நாற்றம் மூக்கைத் துளைக்கிறது. நிற்க முடியாத அளவுக்கு வேதனையும் சேர்ந்துகொள்கிறது.

மாணவர்களின் கலை நிகழ்ச்சி, பேச்சுப்போட்டி, விருந்தினர் களின் உரை நிகழ்ச்சி ஆகியவற்றையே பார்த்துப் பழகிய அந்தப் பள்ளிக்கூட அரங்கம், கொலைக்களமாக மாறி யிருக்கிறது. அந்த அரங்கிலிருந்து மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் கிடைத்ததாகத் தெரிவிக்கின்றனர். ஒருவர்மீது ஒருவராகச் சுட்டுத்தள்ளப்பட்டதால் சடலங்கள் அடுக்கியபடி இருந்திருக்கின்றன.

கொலையாளிகளிடமிருந்து தப்பிக்க மேஜைக்கு அடியில் ஒளியப் பார்த்திருக்கிறார்கள். எவரையும் விட்டுவிடக் கூடாது என்று அந்தக் கயவர்கள் முடிவுசெய்து, மாணவர்களை சட்டையைப் பிடித்து இழுத்து வந்து, துப்பாக்கிக்கு முன்னால் நிறுத்தித் தலையிலேயே சுட்டு ஒவ்வொருவராகக் கொன்றிருக்கிறார்கள்.

பயங்கரவாதிகள் அரங்கில் நுழைந்தபோதுதான், முதலுதவி செய்வது எப்படி என்று ஒரு ராணுவ அதிகாரி மாணவர்களுக்குச் செயல்விளக்கமாகச் செய்துகாட்டியிருந் திருக்கிறார். அவரும் தப்பவில்லை.

7 மனித வெடிகுண்டுகள்

ராணுவம் உள்ளே வந்ததும் 5 மனித வெடிகுண்டுகள் தங்களுடைய உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, மாணவர்களில் பலரைத் தங்களுடன் சேர்த்து பலிவாங்கிக்கொண்டார்கள். 2 பேர் உள்ளே வந்த ராணுவக் கமாண்டோக்கள் மீதே பாய்ந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்கள். அதில் கமாண்டோக்களில் 7 பேர் காயம் அடைந்தார்கள். ஒருவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

பள்ளிக் கட்டிடத்தை ராணுவம் தன்வசம் கொண்டு வந்து விட்டது என்று தெரிந்ததும் ஏராளமானோர் உள்ளே ஓடிவந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியடைய வைத்தது. “அடுக்கடுக்காக மாணவர் களின் சடலங்கள், எங்கும் ரத்தம், சிலர் மட்டுமே உயிரோடு முனகிக்கொண்டிருந்தார்கள். இதை நான் பார்க் காமலேயே இருந்திருக்கலாம்” என்று கண்ணீரைக் கட்டுப் படுத்திக்கொண்டு சொன்னார் ஒரு ராணுவ அதிகாரி.

ராணுவத்தின் மீது கோபம்

இந்தப் பள்ளிக்கூடத்தில் ராணுவத்தினரின் பிள்ளைகளுடன் சிவிலியன்களின் பிள்ளைகளும் படிக்கிறார்கள். தரமான கல்வி கிடைக்கும் என்று அந்தப் பள்ளியில் சேர்த்த அவர்கள், இப்போது ராணுவத்தின் மீதே கோபமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பயங்கரவாதிகளை அடக்க முடியாமல் எதற்காக ராணுவம் இருக்கிறது, அணுகுண்டும் போர் விமானங்களும் எங்கே போய்விட்டன என்று கோபமாகக் கேட்கிறார்கள். எங்களுடைய உயிரைக் காப்பாற்ற முடியாவிட்டால் ராணுவம் இருந்து என்ன பயன் என்கிறார்கள்.

தலிபான்கள் இப்படிக் கொடூரத் தாக்குதல் நடத்தியதால் அவர்களுக்கு அஞ்சவும் மாட்டோம், அவர்களுடன் சேரவும் மாட்டோம் என்று முகம்மது தாஹிர் என்ற கட்டிடக் கலை மாணவர் கூறினார். அதுவே பலருடைய கருத்தாகவும் இருக்கிறது.

பள்ளி முதல்வருக்கு அஞ்சலி

ராணுவப் பள்ளிக்கூடத்தின் முதல்வராக இருந்த தாஹிரா காஜி எல்லோருடைய அன்பையும் பெற்றவர். கனிவாகவும் நகைச்சுவையாகவும் பேசுவார். அவருடைய படிப்பு, நாகரிகம், அடக்கம் ஆகியவை எல்லோரையும் கவர்ந்திருக்கிறது. தங்களுடைய குழந்தைகளின் இழப்பைப் போலவே அந்த முதல்வரின் இழப்பையும் பெரிய சோகமாகக் கருதுகிறார்கள். மாணவர்களைக் காப்பாற்ற முயன்று இறந்த அவருக்கு நினைவஞ்சலி செலுத்துகின்றார்கள். அவருடைய சொந்தக் கிராமமான லாண்டி அர்பாபுக்கு அவருடைய சவப்பெட்டி வந்தபோது, ஊரே திரண்டு கண்ணீர் வடித்தது. அவருடைய சவப்பெட்டி குழியில் இறக்கப்பட்டபோது அந்த ஊர் ஆண்கள் அனைவரும் வாய்விட்டுக் கதறினார்கள். “எங்கள் ஊருக்கே பெருமை தேடித்தந்த படிப்பாளி அவர். மிகப் பெரிய பொறுப்பில் இருந்த அவரை நாங்கள் எங்கள் ஊர்க்காரராகப் பெற மிகவும் கொடுத்து வைத்திருந்திருக்கிறோம், இப்போது இழந்துவிட்டோம்” என்று ஆற்றாமையுடன் கூறினார்கள்.

நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x