Published : 17 Apr 2014 11:01 AM
Last Updated : 17 Apr 2014 11:01 AM

தர்மபுரி - கலவரத்தின் நிழலில்...

தகிக்கும் கோடையை மேலும் வெம்மையாக்கிக் கொண்டிருக்கும் தேர்தல் பரபரப்புகள் இன்னமும் தீண்டாத இடமாகவே இருக்கிறது நத்தம் காலனி. வன்னியர் - தலித் காதல் காரணமாக நவம்பர் 2012-ல் வெடித்த கலவரங்களின் வெம்மையிலிருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை, நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் இருக்கும் நத்தம் காலனி, அண்ணாநகர் மற்றும் கொண்டம்பட்டி தலித் குடியிருப்புப் பகுதிகள்.

இன்னமும் இயல்பு நிலைக்கு முழுமையாகத் திரும்பாத நத்தம் காலனியின் தார்ச் சாலைகளில் வெயிலைப் போலவே பயம் கனன்றுகொண்டிருக்கிறது. காலனிக்குள் நுழைந்தவுடன் கண்ணில் படுவது காவல் துறையினர்தான். நவம்பர் 2012-ல் இங்கு வந்தவர்கள் இன்னமும் வெளியேற வில்லை என்கிறார் நத்தம் காலனியைச் சேர்ந்த ஜெயராமன். தேர்தல் என்கிற ஒன்று நடப்பதேகூட காலனியிலிருந்து வெளியேறி ஊருக்குள் சென்றால்தான் தெரியவருவதாக அவர் சொல்கிறார்.

நவம்பரில் நடந்த கலவரத்தில் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன, சூறையாடப்பட்டன. 2014 தேர்தலைக் குறிவைத்துதான் கலவரங்கள் தூண்டப் பட்டதாக இந்த மக்கள் நம்புகிறார்கள்.

இப்பவும் பயத்துலதான் இருக்கோம்

“இதுவரைக்கும் ஒரு கட்சியும் எங்களத் தேடி வாக்கு வேணும்னு இங்க வரல. அ.தி.மு.க-லேர்ந்து ஒரு முறை வந்தாங்க. அவ்வளவுதான். பா.ம.க-லேர்ந்து வர மாட்டாங்க. நாங்க அவரைத் (அன்புமணி) தோக்கடிக்கணும்னு நினைக்கிறது அவருக்குத் தெரியாதா என்ன? எங்க காலனிக்குள்ள மட்டுமில்ல, இந்தப் பகுதியில் எந்தக் காலனிக்குள்ளும் அவர் நுழைய முடியாது. அது அவருக்கும் தெரியும்” என்கிறார் சங்கர்.

ம.தி.மு.க-வில் தீவிரமாகப் பணியாற்றிவந்த சங்கர், பா.ம.க-வுடன் அந்தக் கட்சி கூட்டணி அமைத்துவிட்ட பிறகு, கட்சியிலிருந்து விலகிவிட்டதாகச் சொல்கிறார். “இன்னமும் இங்க நெலம சரியாகல. இப்பவும் நாங்க பயத்துலதான் இருக்கோம்” என்கிறார் அவர்.

பணக்காரர்களா வந்துடுவமோன்ற பயம்

கலவரத்தில் எரிக்கப்பட்ட பெரும்பாலான வீடுகளை அரசாங்கம் திரும்பக் கட்டிக்கொடுத்திருக்கிறது. ஆனால், முன்பிருந்ததுபோலப் பெரிய வீடுகளாக அவை இல்லை என்கிறார்கள் இந்த மக்கள். நத்தம் காலனியைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் அரசாங்கம் கட்டிக்கொடுப்பதாகச் சொன்ன வீடு, எரிந்த தனது வீட்டைவிடச் சிறிய வீடாக இருப்பதாகச் சொல்லி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்.

பெரும்பாலானவர்கள் சிறிய வீட்டுக்கு ஒத்துக்கொண்டுவிட்டதாகச் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள். “அனேகமா, நாங்க அவங்களவிடப் பணக்காரங்களா வந்துடுவமோன்ற பயத்துலகூட இந்தக் கலவரத்தச் செஞ்சிருக்கலாம். இப்போ எல்லாம் போச்சு” என்கிறார் ஜெயராமன்.

கண்ணீரில் தெரியும் வடுக்கள்

நத்தம் காலனியின் கண்ணீர்த் துளிபோல இருக்கிறது புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் இளவரசனின் வீடு. வீட்டுக்கு வெளியே எப்போதும் இரண்டு காவல்துறையினர் டியூட்டியில் இருக்கிறார்கள். வீட்டில் நுழைந்தவுடன் வரவேற்பது இளவரசனின் புகைப்படம்தான். “நாங்களும் 600 சதுர அடி வீட்லதான் இருந்தோம். இப்போ கவர்மெண்ட்ல 300 சதுர அடில வீடு கட்டிக் கொடுத்திருக்காங்க..

ஏற்கெனவே நிறையப் பிரச்சினைகளைப் பார்த்துட்டோம். இதுல இன்னொரு பிரச்சினையப் பார்க்கிற தைரியம் இல்ல. எப்படியும் வீட்ல முன்ன போல நிறையப் பேர் இல்லை” என்று விரக்திப் புன்னகையை உதிர்க்கிறார் இளவரசனின் தாய் கிருஷ்ணவேணி. இளவரசன் இறந்து பல மாதங்கள் ஆன போதும் இன்னமும் அந்த வடுக்கள் ஆறவில்லை என்பது இளவரசனைப் பற்றிப் பேசும்போது அவரிடம் பெருகும் கண்ணீரிலிருந்து தெரிகிறது. “இங்கேயே கூட, இதே நத்தம் காலனியிலேயேகூடப் பல கலப்புக் கல்யாணம் நடந்திருக்கு. இந்தப் பக்கம் இருக்கிற காலனிகள்ல ஒரு வன்னியர் வீட்டுப் பொண்ணாவது இருக்கும்.

எங்கூர்லயே பேரன், பேத்தி எடுத்தவங்க எல்லாம் இருக்காங்க. இவங்க அரசியலுக்கு எங்க பையனப் பலியாக்கிட்டாங்க. இதோ இப்போ இங்கேயே கதியா இருக்கிற இந்த போலீஸ்காரங்க, அப்பவும் சரியான நேரத்துக்கு வந்திருக்கலாம்” என்கிறார் அவர்.

வேலைக்குச் சென்ற பெண்கள் வீட்டில்

கொண்டம்பட்டியிலும் அண்ணாநகரிலும் நத்தம் காலனி அளவுக்குக்கூட மக்கள் வெளிப்படையாகப் பேச மறுக்கிறார்கள். “பேசறோம், எங்க பேரெல்லாம் போடாதீங்க. எப்போ வேணும்னாலும் எங்களை அவங்க திரும்ப அடிக்கலாம்” என்கிறார் ஒருவர். கலவரத்துக்கு முன்பு காட்டு வேலைக்குச் சென்ற பெண்கள் இப்போது வீட்டில் சும்மா இருக்கிறார்கள். “எங்கன பார்த்தாலும் வன்னியர் காடுதான். கலவரத்துக்கப்புறம் அவங்களும் கூப்புடல, நாங்களும் போகல. இப்போ எல்லாம் குழந்தைக்குப் பால்கூட அவங்க கொடுக்கிறதில்ல. கலவரம் முடிஞ்சிடுச்சு. ஆனா, அதை நாங்க இன்னமும் அனுபவிச்சிட்டிருக்கோம்” என்கிறார் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்.

அன்புமணி தோற்க வேண்டும்

ஆனால், நாயக்கன்கொட்டாயைப் பொறுத்தவரையில் கலவரத்துக்குப் பிறகு, சாதிரீதியாக வாக்குகள் பிரிந்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. நத்தம் காலனி, கொண்டம்பட்டி, அண்ணாநகர் ஆகிய பகுதியிலுள்ள மக்கள், அன்புமணி ராமதாஸ் தோற்க வேண்டும் என்று வாக்களிக்கப்போவதாகச் சொல்கிறார்கள். “முன்ன எல்லாம் கட்சி பார்த்து ஓட்டுப் போட்டோம். இந்த முறை அவரு தோக்கணும்னுதான் போடுவோம்” என்கிறார் சங்கர்.

திவ்யாவின் ஊரில்…

இதற்கு நேரெதிர் மனநிலையில் திவ்யாவின் ஊரான செல்லங்கொட்டாயில் வன்னியர் மக்கள் இருக்கிறார்கள். தங்களது ‘சாதி கௌரவ’த்தைக் காப்பாற்றக்கூடிய வேட்பாளராக அவர்கள் அன்புமணியைப் பார்க்கிறார்கள். அதனால், அவர் ஜெயிக்க வேண்டும் என்று தீவிரம் காட்டு கிறார்கள். திவ்யாவின் தாய் தேன்மொழி, அன்புமணிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றது இந்தத் தீவிரத்தின் குறியீடு.

சாதிரீதியான பிரிவினையைச் சாதகமாக்கிக்கொள்ளும் பா.ம.க-வின் உத்தியாகவும் இதைப் பார்க்கிறார்கள் நோக்கர்கள். “சாதி ரீதியாகப் பிளவுகளை ஏற்படுத்தி, அதில் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் பா.ம.க-வின் நோக்கம். ராமதாஸுக்கு அவரது மகனை அமைச்சராக்க வேண்டும் என்கிற அதிகார பசி இருக்கிறது. அதற்காக வன்னியர்களை பலியாக்குகிறார்” என்கிறார் மார்க்சிய லெனினிய மக்கள் அமைப்பைச் சேர்ந்த ரமணி.

ஆனால் சாதிரீதியான இந்தப் பிளவு, நாயக்கன் கொட்டாயைத் தாண்டி எதிரொலிக்குமா என்பது இந்தத் தேர்தல் எதிர்நோக்கியிருக்கும் மிகப் பெரிய கேள்விக்குறி. கலவரத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட வன்னியர்கள்கூட, அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் வேட்பு மனு தாக்கல் செய்தபோது உடன் சென்றார்கள் என்று சொல்லப்படுகிறது. தி.மு.க. இங்கு ஏற்கெனவே எம்.பி-யாக இருந்த தாமரைச் செல்வனை மீண்டும் நிறுத்தியிருக்கிறது.

பல விஷயங்களில் அவருக்குத் தொகுதியில் நல்ல பெயர். தொகுதியில் உழைக்கும் மக்கள் பெரும்பாலும் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. என்றுதான் யோசிப்பதாகச் சொல்கிறார் ரமணி.

கலவரங்களுக்குப் பிறகுகூட வன்னியர்-தலித் கலப்புத் திருமணங்கள் அதிகரித்து விட்டதாக ரமணி சொல்கிறார். “முற்போக்கு இயக்கங்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி அது” என்று சொல்கிறார் அவர்.

சுமார் 13 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தருமபுரியில் பிரதானமாக வன்னியர் வாக்காளர்களும் அடுத்த இடத்தில் தலித் வாக்காளர்களும் இருக்கிறார்கள். மிகவும் பின்தங்கிய தொகுதியான தருமபுரியில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே தொகுதி மக்களின் கோரிக்கை. நாயக்கன் கொட்டாயில் பெரும்பாலான இடங்களில் கழிவறை வசதிகூட இல்லாத நிலையில்தான் பெண்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், தொகுதி மக்கள் அனைவருமே சாதியின் அடிப்படையில் மட்டுமே வாக்களிப்பார்கள் என்று சொல்ல முடியாது என்றுதான் ஆர்வலர்கள் நம்புகிறார்கள். தேர்தல் பதில் சொல்லும்.

தொடர்புக்கு: kavitha.m@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x