Published : 02 Dec 2014 09:46 AM
Last Updated : 02 Dec 2014 09:46 AM

காஷ்மீரில் கரைசேருமா பாஜக?

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கிறது. முதல் கட்டத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 71.28% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று பிரிவினைவாதத் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை மக்கள் புறக்கணித்திருப்பது இதில் தெளிவாகிறது. 2008-ல் அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் 60% வாக்குகள்தான் பதிவாகின. முதல் கட்டத் தேர்தலில் வாக்குகள் அதிகரித்திருப்பதால், பாஜக தரப்பு மகிழ்ச்சியடைந்திருக்கிறது. “புல்லட்டுகளுக்குப் பதிலடியாக பேலட்டுகளைத் (வாக்குகளை) தந்திருக்கிறார்கள் காஷ்மீர் மக்கள்” என்று அம்மாநிலத்தில் பிரச்சாரம் செய்த மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

அனைத்து மாநிலங்களிலும் கால்பதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் பாஜக-வுக்கு ஜம்மு-காஷ்மீரில் முன்பு பெரிய அளவில் வரவேற்பு இருந்ததில்லை. 2002-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக ஒரே ஒரு இடத்தை மட்டுமே வென்றது. 2008-ல் நடந்த தேர்தலில் 24 முஸ்லிம் வேட்பாளர்கள், 7 காஷ்மீரி பண்டிட் வேட்பாளர்களுடன் களமிறங்கிய பாஜக, 11 இடங்களில் வென்றது. ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் 3 தொகுதிகளைக் கைப்பற்றியது பாஜக-வுக்கு உற்சாகம் அளித்தது. ஜம்மு-காஷ்மீரில் பாஜக, காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, ஜனநாயக மக்கள் கட்சி மற்றும் மக்கள் மாநாட்டுக் கட்சி ஆகியவை களத்தில் நிற்கின்றன.

அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 87 தொகுதிகளில், 44-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம் என்று மாநில பாஜக தலைவர் அவினாஷ் ராய் கன்னா நம்பிக்கையுடன் கூறுகிறார். அந்தக் கட்சியின் வேட்பாளர்களில் 40% பேர் முஸ்லிம்கள் என்பதால் வெற்றி சாத்தியம் என்று அந்தக் கட்சித் தலை வர்கள் கருதுகிறார்கள். காஷ்மீரி பண்டிட்டுகளின் முழு ஆதரவு தங்களுக்குக் கண்டிப் பாகக் கிடைக்கும் என்று நம்புகிறது பாஜக. முஸ்லிம்களில் பலர் தேர்தல் புறக் கணிப்பில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிக வாக்குகள் பதிவாகி யிருப்பது, அரசியல் நோக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதே சமயம், அதிக வாக்குகள் பதிவானதால், பாஜக மகிழ்ச்சியடையத் தேவையில்லை என்றும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். “ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பாஜக நுழைவதை மக்கள் விரும்பவில்லை. பாஜக வெற்றிபெறக் கூடாது என்ற முனைப்பில்தான் அதிக அளவு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்” என்று அரசியல் விமர்சகரும் ஆய்வாளருமான குல் முகமது வானி குறிப்பிடுகிறார். காஷ்மீரில் இந்து ராஜ்ஜியத்தை அமைக்க பாஜக விரும்புவது ஆபத்தானது என்பது வாக்காளர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

செப்டம்பர் மாதம் அந்த மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின்போது ஒமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. தேர்தலில் இது எதிரொலிக்கும் என்பதைத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்தது. முஃப்தி முகமது சயீதின் மக்கள் மாநாட்டுக் கட்சிக்கு வெற்றிவாய்ப்புகள் அதிகம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஜம்மு-காஷ்மீரிலும், ஜார்க்கண்டிலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.

மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்குவது தொடர்பாக பாஜக பேசத் தொடங்கியது. எனினும், இந்தத் தேர்தலில் அந்தப் பிரச்சினையைப் பிரதானப் படுத்துவது தங்களுக்குப் பாதகமாக முடியலாம் என்று அந்தக் கட்சி கருதுகிறது. இந்தச் சட்டப் பிரிவை நீக்கினால் விளைவு விபரீதமாகலாம் என்று பாஜகவின் வேட்பாளரான ஹினா பட் பேசியது சர்ச்சையானது. அவரைக் கண்டிக்க வேண்டும் என்று சங் பரிவார் கேட்டுக்கொண்டபோது, பாஜக மவுனம் காத்தது. ‘மக்கள் விரும்பினால் மட்டுமே’ இதுபற்றி யோசிப்போம் என்று பாஜக பேசத் தொடங்கிவிட்டது.

மக்களவைத் தேர்தலைப் போலவே இங்கும் ‘வளர்ச்சி’யை முன்வைத்து தேர்தலைச் சந்திக்கிறது பாஜக. டிசம்பர் 23-ல் தெரிந்துவிடும், அதிக அளவு வாக்குகள் பாஜகவுக்கு சாதகமானவையா, பாதகமானவையா என்று!

- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x