Last Updated : 18 Dec, 2014 10:19 AM

 

Published : 18 Dec 2014 10:19 AM
Last Updated : 18 Dec 2014 10:19 AM

இன்னொரு இந்தியா 9 - ரத்தம் சிந்தும் நிலம்

இவையெல்லாம் குடியிருப்புகளே கிடையாது. எல்லாம் கொட்டகைகள். அதுவும் விஷ ஜந்துக்களும் கொசுக்களும் படையெடுக்கும் இடங்கள். தரமான குடிநீர் கிடையாது. குடிக்கும் தண்ணீரைத் தகர டப்பாக்களில் விநியோகிக்கிறார்கள். சாப்பிட நல்ல உணவு கிடையாது. நல்ல காய்கறிக்குக்கூட வழி இல்லை. சுகாதார வசதி சுத்த மோசம். 150 பேருக்கு 5 கழிப்பறைகள் மட்டுமே இருக்கின்றன. ஏராளமானோர் மலேரியா காய்ச்சலாலும், தோல் வியாதிகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடனடிச் சிகிச்சைக்கு நகரங்களுக்குத்தான் போக வேண்டும். ஏனென்றால், இங்கு மருத்துவர்களே கிடையாது.

மேலே சொன்னதெல்லாம் பஸ்தர் காடுகளில் வாழும் ஆதிவாசிகளின் குடியிருப்புகளைப் பற்றிய விவரணைகள் இல்லை. மாவோயிஸ்ட்டுகளுடனான போருக்காக நம்முடைய அரசாங்கம் காட்டுக்குள் அனுப்பியிருக்கும் ஆயுதப் படைகளின் குடியிருப்புகளைப் பற்றிய விவரணைகள். கடந்த டிசம்பர் 1 அன்று சுக்மாவில் மாவோயிஸ்ட்டுகளால் தாக்கப்பட்டு 14 வீரர்கள் உயிரிழந்தார்கள் அல்லவா, அந்தப் படையினரின் குடியிருப்புகளைப் பற்றிய விவரணைகள். காட்டுக்குள் இப்படிச் செத்துப்போனவர்களில் பலருடைய உயிரும் உடனடிச் சிகிச்சை கிடைக்காமல், ரத்தப்போக்கு தொடர்ந்ததாலேயே போயிருக்கிறது. உயிர் பிழைத்த வீரர்களில் ஒருவர் தொடையில் குண்டு பாய்ந்த சந்தன்குமார். கிட்டத்தட்ட 9 கி.மீ. ரத்தம் சிந்தச் சிந்த நடந்து வந்து, சிந்தகுபா மருத்துவமனையை அடைந்ததால், உயிர் பிழைத்தார். ஒரு நாட்டின் அரசாங்கம், போருக்கு ஆயுதங்களைக் கொடுத்தனுப்பும் வீரர்களுக்கு, இன்றைக்கே பஸ்தரில் இதுதான் நிலையென்றால், அங்கு வாழும் மக்களின் நிலை காலங்காலமாக எப்படியிருந்திருக்கும்?

அவர்கள் இந்தியர்களே இல்லை!

தண்டகாரண்யம் மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்து, ஏறத்தாழ 20 வருடங்கள் வரை அரசாங்கம் தண்டகாரண்யத்தின் வளர்ச்சியைப் பற்றிக் கொஞ்சமும் பொருட்படுத்தாமலேயே இருந்தது. சாலைகள் கிடையாது. பஸ்கள் கிடையாது. மருத்துவமனைகள் கிடையாது. ரேஷன் கடைகள் கிடையாது. அரிதாக, மிகப் பெரிய இடைவெளியில் இருக்கும் பள்ளிக்கூடங்கள்கூட யாருமற்ற கட்டிடங்களாக இருக்கும். ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே சம்பளம் வாங்குவார்கள். அங்குள்ளவர்களை இந்நாட்டின் குடிமக்களாகவே அரசு பொருட்படுத்தவில்லை என்பதற்கு அப்பட்டமான ஓர் உதாரணம், பல பகுதிகளில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பே கிடையாது என்பது (கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதுகூட இங்கு 108 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை). அரசிடம் இந்தப் பழங்குடி கிராமங்களைப் பற்றி எந்த ஆவணங்களும் புள்ளிவிவரங்களும் கிடையாது. அங்கு வாழும் மக்களைப் பற்றிய எந்த விவரங்களும் கிடையாது.

எப்போது அரசாங்கம் தண்டகாரண்யத்தைப் பற்றித் தீவிரமாகக் கவலைப்பட ஆரம்பித்தது என்றால், இப்போது தான், ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு. சரியாக, மன்மோகன் சிங் பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு. இந்தியாவை ஒரு ‘வல்லரசு’ஆக உருமாற்றியே தீர வேண்டும் என்று சிங் ‘சபதம்’ பூண்ட பின்பு. பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை இந்நாட்டின் வளர்ச்சியாக அவருடைய அரசு நம்பவைக்க ஆரம்பித்த பின்பு.

பணச் சுரங்கத்தின் மேல் அமர்ந்திருக்கும் கடவுளர்கள்

இந்தியாவில் சுரங்கத் தொழில் சார்ந்து அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட காலமும் அரசாங்கத்தின் படைகள் பெரிய அளவில் காட்டில் ஆவேசமாகப் புகுந்த காலமும் ஒன்று. பஸ்தரில் படைகள் சூறையாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் டாடா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டிருந்தார் ரமண் சிங். உண்மையில், மத்திய இந்தியாவின் ஒவ்வொரு மலைகளின் மீதும் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் மக்கள். டாடாக்கள், வேதாந்தாக்கள், மிட்டல்கள், ஜிண் டால்கள், எஸ்ஸார்கள், போஸ்கோக்களுக்காகவே இந்தப் போரை அரசு நடத்துகிறது என்று நம்புகிறார்கள் மக்கள்.

ஆதிவாசிகளைப் பொறுத்த அளவில், காட்டில் உள்ள மரங்கள், நதிகள், மலைகள் ஒவ்வொன்றுக்கும் பின் வலுவான நம்பிக்கைகள் உண்டு. உதாரணமாக, பஸ்தரில் வசிக்கும் அபுஜ்மரியாக்கள் கல்லுக்கும் மண்ணும் மரத்துக்கும்கூட ஆன்மா உண்டு என்று வலுவாக நம்புபவர்கள். மரியாக்களுக்குப் பரம்பொருள் நம்பிக்கை உண்டு. பூமியைத் தாய்க்குச் சமமாகக் கருது பவர்கள் அவர்கள். பெரும்பான்மை ஆதிவாசிகள் பச்சை குத்திக்கொள்ளும் குலக்குறிகளான புலி, எருது, கச்சிமரம் போன்றவையெல்லாம்கூட இயற்கையோடு அவர்களுக்கு இன்னமும் இருக்கும் நெருக்கமான பிணைப்பின் வெளிப்பாடே. எந்த மஹுவா மரத்தின் பூக்களை உணவாக்கிக்கொள்கிறார்களோ, அதே மஹுவா மரத்துக்கு வழிபாடு நடத்தி, அவர்கள் புது வாழ்க்கையைத் தொடங்குவது மரங்களோடு அவர்களுக்கு இருக்கும் பிணைப்புக்கு உதாரணம். பல இனங்களும் நிலத்தைப் பூமி மாதாவாகவே பார்ப்பவர்கள். அதனாலேயே உழுவதைத் தவிர்ப்பவர்கள். மலைகளும் தேவதைகளும் வசிக்கும் இடம் மலைகள். தந்தேஸ்வேரி கோயிலுக்கு என்ன சக்தி உண்டோ அதே சக்தி கொலாபா ஆற்றிலும் காங்கர் பள்ளத்தாக்கிலும் சித்ரகூட், திராத்கட், கேங்கர் தாரா, மாண்டவா, சித்ரதாரா, தமடா கூமர் அருவிகளில் உறைந்திருக்கும் தேவதைகளுக்கு உண்டென்று நம்புபவர்கள்.

பெருநிறுவனங்களுக்கோ, இந்த மலைகள், குன்றுகள், நதிப்படுகைகளெல்லாம் கனிம வளங்களாகத் தெரிகிறது. இரும்பாக, பாக்ஸைட்டாக, வெள்ளியமாக, தாமிரமாக, கிரானைட்டாக, கோரண்டமாக, சிலிக்காவாக, ப்ளூரைட்டாக, கார்னெட்டாக, மாங்கனீஸாக, டைட்டானியமாகத் தெரிகிறது. பல டிரில்லியன் டாலர்களாகத் தெரிகிறது. அரசாங்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் இதெல்லாம் வருவாயாகவும் வளர்ச்சியாகவும் தெரிகிறது.

கற்பனைக்கு அப்பாற்பட்ட பணம்

சுரங்கத் தொழிலில் கொட்டிக்கிடக்கும் பணம் உண்மையில், சராசரி இந்திய மனங்களால் கற்பனையால்கூட எட்டிப் பார்க்க முடியாதது. “இந்தியாவில் உள்ள கனிம வளங்களும் அதன் உண்மையான மதிப்பும் அந்தத் தொழில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் முதலாளிகளைத் தவிர, வேறு எவருக்கும் தெரியாது; அரசாங்கத்துக்கு உட்பட” என்கிறார்கள் இந்தியக் கனிம வளங்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருப் பவர்கள். இதில், கவனிக்க வேண்டிய விஷயம், இந்தியாவில் உள்ள கனிம வளத்தின் மொத்த இருப்பு இதுவரை நாம் வெட்டியெடுத்திருப்பதைவிடவும் பல மடங்கு மிச்சம் இருப்பது.

பாக்ஸைட்டை எடுத்துக்கொண்டால், நம்முடைய மொத்த இருப்பு 347,96,20,000 டன் என்று கணக்கிடுகிறார்கள். இதில் மிச்சமிருப்பதாக அவர்கள் கணக்கிடுவது, 288,66,82,000 டன். மாங்கனீஸ் மொத்த இருப்பு 42,99,80,000 டன். மிச்சமிருப்பது 28,80,03,000 டன். கிரானைட் மொத்த இருப்பு 4,623,03,00,000 டன். மிச்சமிருப்பது 4,596,66,08,000 டன். இப்படி கார்னெட், டைட்டானியம், டோலமைட் என்று வரிசையாகப் பட்டியலிட ஆரம்பித்தால், கிட்டத்தட்ட 30 வகையான கனிமங்கள் பல கோடிக் கோடி ரூபாய்கள் இந்திய மண்ணில், மலைகளில், காடுகளில் புதைந்திருக்கிறது. அந்தப் பண வேட்டையின் ஒரு பகுதிதான் இந்த ஆதிவாசிகள் வேட்டை.

தேசத்துக்கு வளர்ச்சியா?

ஆதிவாசிகள் வறுமையில்தானே இருக்கிறார்கள், இந்த மலைகளையெல்லாம் உடைத்து நொறுக்கிப் பணமாக்கு வதால், அவர்களுக்கும் வேலை கிடைக்கும்தானே, நாட்டுக்கும் வளர்ச்சி கிடைக்கும்தானே, ஏன் நாம் அரசாங்கத்தை ஆதரிக்கக் கூடாது? வெளியிலிருந்து இந்த விவகாரத்தைப் பார்ப்பவர்களுக்கு இப்படியொரு கேள்வி இந்தக் கட்டத்தில் எழுவது இயல்பானது. நியாய மானதும்கூட. உண்மைதான். நிச்சயமாக, இந்தக் காடுகளையும் மலைகளையும் பெயர்த்து, உடைத்து நொறுக்கி, கசக்கிப் பிழிந்து கனிமம் எடுத்து விற்றால் பணம் கிடைக்கும்தான். ஆனால், யாருக்குக் கிடைக்கும்? பெருநிறுவனங்களின் முதலாளிகளுக்குக் கிடைக்கும். அதன் பங்குதாரர்களுக்குக் கிடைக்கும். அரசுக்கு? கிடைக்கும். அரசுக்கும் கிடைக்கும், மொத்தமாக வெட்டி விற்கும் கனிமங்களில் 10%-க்கும் குறைவாகக் கிடைக்கும். அப்படிக் கிடைப்பதும்கூட அவர்கள் வெட்டியனுப்பும் கனிமங்களில், கணக்கில் வரும் நூறில் ஒரு பங்குக்குத்தான் கிடைக்கும். ஏனென்றால், இந்தியாவில் சுரங்கத் தொழில் அப்படித்தான் நடக்கிறது. நூறு லாரிகளுக்குக் கணக்கு காட்டப்படும் இடத்தில், ஆயிரம் லாரிகள் கனிமங்களை ஏற்றிக்கொண்டிருக்கும். 100 வருடங்களில் எடுக்கக்கூடிய கனிமங்கள் ஒரு வருடத்துக்குள் சுரண்டப்பட்டுவிடும்.

ரத்தம் சிந்தும் நிலம்

இந்திய நகரங்களிலிருந்து செல்லும் ஒரு சாமானிய இந்தியர், நம் நாட்டில் பெருநிறுவனங்கள் சுரங்கத் தொழில் நடத்தும் இடங்களைப் பார்க்க நேர்ந்தால், அவரை அறியாமலேயே அவர் கண்களில் ரத்தம் வடியும். தாயைக் கண்டந்துண்டமாக வெட்டிச் சுரண்டி, ரத்தம் சொட்டச் சொட்ட விட்டால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இருக்கின்றன சுரங்கங்களான நம்முடைய நிலங்கள். கொத்தடிமைகளைப் போல ஐம்பதுக்கும் நூறுக்கும் கை கால்கள், விலா எலும்புகள் முறிய நொறுங்கிக்கொண்டிருப்பார்கள் தொழி லாளர்கள். வேறு யார், காலங்காலமாக அந்த மண்ணைத் தாயாகப் பூஜிக்கும் அதன் புதல்வர்கள்தான்.

சரி, சுரங்கங்களிலிருந்து வரும் பணம்?

அது சரி, உலகில் வரிகளற்ற சொர்க்கங்களாகத் திகழும் கருப்புப் பணத் தீவுகளுக்கு எங்கிருந்து பணம் அனுப்புவதாம்?

(நாளை நிறைவுறும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x