Last Updated : 08 Dec, 2014 08:53 AM

 

Published : 08 Dec 2014 08:53 AM
Last Updated : 08 Dec 2014 08:53 AM

ஹிக்ஸ் போஸான்: சிறு விளக்கம்

பிரம்மாண்டமான திறந்தவெளி அரங்கமொன்றில் நடிகர்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர விழாவொன்று நடக்கவிருக்கிறது. திறந்தவெளி மைதானத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களும் ரசிகர்களும் கூடியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு நடிகராக விழாவுக்கு வர ஆரம்பிக்கிறார் கள். நட்சத்திர நடிகர்களும் வருகிறார்கள். பிரபலமற்ற உபநடிகர்கள் வரும்போது, ரசிகர்கள் அவர்களைப் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாததால், மிகச் சுலபமாகவும் வேகமாகவும் மேடை நோக்கி நடந்து, மேடையில் அமர்ந்துகொள்கிறார்கள்.

இப்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் உள்ளே வருகிறார்கள். நிலைமை மோசமாகிவிடுகிறது. அந்த உச்ச நட்சத்திரத்தைக் கூட்டம் சூழ்ந்து, அவரை ஆமைபோல நகரச் செய்கிறது. வழக்கமாக ஸ்டைலாக, வேகமாக நடக்கக் கூடியவர் இப்போது, ஆயிரம் மடங்கு எடை கூடியதுபோல மெல்ல மெல்ல மேடையை நோக்கி நகர்கிறார்.

அறிவியலின் ஒரு முக்கிய நிகழ்வொன்றைப் புரிய வைக்கவே இந்த உதாரணம். நடிகர்களை வைத்துச் சொன்னால் அறிவியல்கூட நமக்கு உடனே புரிந்துவிடுமல்லவா? இனி விஷயத்துக்கு வருவோம்.

கடவுள் துகள்

‘கடவுள் துகள்’ என்று பலராலும் அறியப்பட்ட ‘ஹிக்ஸ் போஸான்’ பற்றி விளக்குவதற்காகத்தான் மேற்கண்ட உதாரணம். லியோன் லேடர்மான் என்பவர்தான் ஹிக்ஸ் போஸானுக்கு ‘கடவுள் துகள்’ என்று பெயர்வைத்தார். இவர் எழுதிய ‘கடவுள் துகள்' (தி காட் பார்ட்டிக்கிள்) என்னும் புத்தகத்திலிருந்தே இந்தப் பெயர் பிரபலமானது. லியோன் லேடர்மான், நோபல் பரிசு வென்ற இயற்பியலாளர்.

ஹிக்ஸ் போஸான் என்பது, விண்வெளியில் இருக்கும் அடிப்படைத் துகள்களில் ஒன்று. விண்வெளியெங்கும் ஹிக்ஸ் போஸான்கள் அடர்த்தியாகப் பரவியிருக்கின்றன. அப்படி அவை பரவியிருப்பதை ‘ஹிக்ஸ் வெளி’ (ஹிக்ஸ் ஃபீல்டு) என்கிறார்கள். மிகமிகச் சிறியதான அடிப்படைத் துகள்கள், இந்த ஹிக்ஸ் வெளியினூடாக நகர்ந்து செல்லும்போது, அந்தத் துகள்களின் தன்மையைப் பொறுத்து, அவற்றுடன் ஹிக்ஸ் போஸான்கள் சேர்ந்துகொள்கின்றன.

அப்படி அவை சேர்வதால், அந்தப் பொருளுக்கு எடை கிடைக்கிறது. சில துகள்களை ஹிக்ஸ் போஸான்கள் கண்டுகொள்வதில்லையாதலால், அவை எடையற்று இலகுவாகப் பயணம் செல்கின்றன. இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நான் மேலே சொன்ன உதாரணம் உங்களுக்கு உதவிசெய்யலாம்.

அடிப்படைத் துகள்கள்

திறந்தவெளி அரங்குதான் பேரண்டவெளி. அதில் நிரம்பியிருக்கும் ரசிகர்கள் கூட்டம்தான், ஹிக்ஸ் வெளி. ஒவ்வொரு ரசிகரும் தனித்தனியே ஒரு ஹிக்ஸ் போஸான். அங்கே நுழையும் நடிகர்கள்தான் ‘அடிப்படைத் துகள்கள்'. புகழில்லாத சாதாரண உபநடிகர்கள்தான், எடையில்லாத அடிப்படைத் துகள்கள். அதன் பின்னர் வரும் நடிகர்களின் பிரபலத்துக்கேற்ப அதாவது, அடிப்படைத் துகள்களின் தன்மைக்கேற்ப அவற்றுக்கு எடை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த வகையில்தான் ஹிக்ஸ் வெளியில் இருக்கும் ஹிக்ஸ் போஸான்கள் அடிப்படைத் துகள்களுக்கு எடையை அளிக்கின்றன.

அழிவா, ஆக்கமா?

இப்போது ஹிக்ஸ் போஸான் என்றால் என்னவென்றும், அதன் செயல்பாடு என்னவென்பதையும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஸ்டீவன் ஹாக்கிங் சொன்ன கருத்தொன்றை மையப்படுத்தி ஹிக்ஸ் போஸான்கள் பற்றி இப்போது மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அவர் சொன்ன கருத்தின் அடிப்படை என்னவென்றால், “சுவிஸ் நாட்டின் செர்ன் நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘மிகப் பெரிய துகள் தாக்குவிப்பான்’ (லார்ஜ் ஹாட்ரான் பார்ட்டிக்கிள் கொலைடர்) என்னும் நிலத்தடிப் பரிசோதனை வட்டப்பாதையில், ஹிக்ஸ் போசான் என்னும் அடிப்படைத் துகளைக் கண்டுபிடிக்கச் செய்யப்படும் பரிசோதனைகளின் மூலம், பேரண்டமே கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அழிந்துவிடும் பேராபத்து நேர்ந்துவிடலாம்” என்பதுதான்.

அழிவு என்றதும் நமக்கு எப்போதும் ஒரு பதற்றம் தொற்றிவிடுவது சாதாரணமானதுதான். 2012-ம் ஆண்டில்கூட உலகமே அழிந்துவிடும் என்னும் பயமும் பதற்றமும் உலகமெங்கும் பரவியிருந்தன. ஆனால், இங்கு சொல்லப்பட்டது பேரண்டத்தின் அழிவென்பதால் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போலும். அறிவியலில் நாட்டமுள்ள வெகுசிலர் ஆங்காங்கே பதற்றப்படுகிறார்கள்.

எஞ்சியவர்களுக்குப் பதற்றப்படுவதற்கு வேறு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஹிக்ஸ் போஸான் தொடர்பான ஆராய்ச்சி ஹாக்கிங் சொன்னதுபோல ஆபத்தானதா, இல்லையா என்ற முடிவு இன்னும் சரியாகத் தீர்மானிக்கப்படவில்லை. ஆனாலும், செர்ன் நிலத்தடி வட்டப்பாதை பரிசோதனையை எதிர்ப்பவர்களுக்கு இது அவலாகிப்போனது. இந்த வட்டப்பாதை பரிசோதனையே தவறானது என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே இது போன்ற எதிர்ப்புகள் கிளம்பின. பெருவெடிப்பின் (பிக் பேங்) ‘மாதிரி' வெடிப்பை இந்தப் பரிசோதனைகளில் செய்துபார்க்கப்போகிறார்களென்றும், அப்படியொரு பரிசோதனை நடைபெற்றால் ஒட்டுமொத்த பூமியோ பேரண்டமோ வெடித்துச் சிதறும் என்றும், இல்லையென்றால் பரிசோதனையில் உருவாகும் கருந்துளை (பிளாக் ஹோல்) அனைத்தையும் உள்வாங்கி அழித்துவிடும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு, எதிர்ப்புகள் கிளம்பின.

செர்ன் மட்டுமல்ல

செர்ன் வட்டப்பாதை கொஞ்சம் பெரியதுதான். கிட்டத் தட்ட 27 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள வட்டப்பாதை அது. சுமார் 175 மீட்டர் ஆழத்தில் அது அமைக்கப் பட்டிருக்கிறது. ‘இப்படி நிலத்தடி வட்டப்பாதை அமைத்து, உப அணுத்துகள்களை மோத விடும் பரி சோதனைச் சாலை செர்னில் மட்டும்தான் இருக்கிறதா?' என்று கேட்டால், அதற்கு ‘இல்லை' என்றே பதில் சொல்ல வேண்டும்.

இதுபோலப் பெரிய நிலத்தடி வட்டப் பாதையொன்று அமைக்கப்பட்டு, முறையாகப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட இன்னுமொரு பரிசோ தனைச் சாலையொன்று அமெரிக்காவிலும் இருக்கிறது. அதை ‘ஃபெர்மி லாப்' என்பார்கள். இது சிகாகோ மாகாணத்தில் உள்ள இல்லிநாய்ஸில் இருக்கிறது. இந்த ஃபெர்மி லாப் மூலம் பல அடிப்படைத் துகள்களை ஏற்கெனவே கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஃபெர்மி லாபின் நிர்வாகத் தலைவராக இருந்தவர்தான், ஹிக்ஸ் போஸானுக்கு ‘கடவுள் துகள்' என்னும் பெயரைச் சூட்டிய லியோன் லேடர்மான்.

பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றிய ஆய்வுகள் மிகவும் அவசியம்தான். ஆனாலும், பிரபஞ்சத்தின் முடிவுக்கு அவையே காரணமாக ஆகிவிடுமோ என்று பொதுமக்களைப் போலவே விஞ்ஞானிகளும் அஞ்சும்போது அந்த அச்சத்தை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது!

- ராஜ்சிவா, ஜெர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழர்,
‘எப்போது அழியும் இந்த உலகம்?’ உள்ளிட்ட அறிவியல் நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: rajsivalingam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x