Last Updated : 02 Dec, 2014 09:19 AM

 

Published : 02 Dec 2014 09:19 AM
Last Updated : 02 Dec 2014 09:19 AM

கொலையாளிகள் ஆகும் குழந்தைகள்

வன்முறையில் ஊறிய சமூகத்தின் பிரதிபலிப்புதான் குழந்தைகளின் வன்முறைகள்!

ஆறு வயதுச் சிறுவன் தன் வகுப்பில் படிக்கும் ஆறு வயதுச் சிறுமியிடம் என்னென்ன பேசுவான்? தான் அணிந்து வந்திருக்கும் புத்தம் புதிய உடை பற்றி? அப்பா வாங்கித்தந்த புதிய பொம்மை குறித்து? இப்படித்தான் ஏதாவது பேசுவான் என்று நீங்கள் நினைத்தீர்களானால் மன்னிக்கவும், உங்கள் கணிப்பு தவறு.

அமெரிக்காவில் மவுன்ட் மாரீஸ் டவுன் ஷிப்பில் ஓர் ஆறு வயதுச் சிறுவன் தன் வகுப்பில் படிக்கும் தன் வயதுச் சிறுமியிடம் துப்பாக்கியால் பேசியிருக்கிறான்.

ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போலப் பாடித் திரிந்த காய்லா ரோலண்ட் எனும் அந்தச் சிறுமி சக மாணவனின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி வகுப்பறையிலேயே துடிதுடித்து இறந்துபோனாள். உயிரைப் பறித்தவனும் உயிரை இழந்தவளும் மழலைகள்.

உன்னை எனக்குப் பிடிக்கவில்லை!

மற்றவர்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஒரு குழந்தை, கொலையாளியாக மாறிப்போனது எப்படி?

அந்தச் சிறுவன் அன்றைக்குப் பள்ளிக்கூடம் வரும் போதே ஒரு செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கியையும் ஒரு கத்தியையும் கூடவே கொண்டுவந்திருந்தான். கத்தியைப் பார்த்துவிட்ட இன்னொரு குழந்தை ஆசிரியரிடம் முறையிட, ஆசிரியர் கத்தியைப் பிடுங்கி வைத்துக்கொண்டார். ஆனால், துப்பாக்கி யாருடைய கண்ணிலும் படவில்லை. கணினிப் பயிற்சிக்காக குழந்தைகள் வகுப்பு மாறிச் செல்லும் நேரம். காய்லா அந்தச் சிறுவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தாள்.

அப்போது அந்தப் பொடியன் சொன்னான்: “உன்னை எனக்குப் பிடிக்கவில்லை.”

“அதற்காக..?” என்று அவள் கேட்டு முடிப்பதற்குள் அவன் துப்பாக்கியை எடுத்து அவளை நோக்கிச் சரமாரி யாகச் சுட்டான். காய்லாவின் வயிற்றைத் துளைத்தபடி குண்டுகள் பாய்ந்தன.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காய்லா சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனாள்.

துப்பாக்கிக் குண்டுகள் வெடித்த உடனேயே பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் வகுப்பறைக் கதவு களை மூடும்படி உத்தரவிட்டார். அந்தச் சிறுவன் தப்பி ஓடுவதற்கோ ஒளிந்துகொள்ளவோ முயற்சி செய்ய வில்லை. அவனைத் தலைமை ஆசிரியரிடம் அழைத்து வந்தார்கள். பிறகு, போலீஸாரிடம் ஒப்படைத்தார்கள். இது நடந்தது 2000-ல்.

அந்தச் சிறுவனின் தந்தை டெட்ரிக் ஓவன்ஸ் பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர். போதை மருந்து களை வைத்திருந்ததாக போலீஸார் அவனைக் கைது செய்திருந்தார்கள். சிறுவனும் எட்டு வயதான அவனுடைய மூத்த சகோதரனும் தாய் டாமர்லாவுடன் தங்கியிருந்தார்கள். அவன் வைத்திருந்த துப்பாக்கி அவனுடைய தாய்மாமனுக்குச் சொந்தமானதாம். தாய் மாமனின் வயது என்ன தெரியுமா? 19.

போதைப் பழக்கத்துக்கு அடிமையான தந்தை. சோடா பாட்டில்களும் வயர்களும் சிதறிக்கிடக்கும் வீடு. உடைந்த கண்ணாடி ஜன்னல்கள். அவற்றின் மேல் ஒட்டப்பட்ட நீலத்தாள்கள். ஏறத்தாழ வெளிச்சமே இல்லாத அறை. இரண்டு சிறுவர்களும் படுத்துக் கொள்வதற்கு ஒரு சோபா. அந்தச் சிறுவன் ஒரு நரகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தான் என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். இப்போது சொல்லுங்கள்: காய்லா ரோலண்ட்டைக் கொன்றது யார்? அந்தச் சிறுவனா, அவன் வளர்ந்த சூழ்நிலையா?

இந்தியா விதிவிலக்கில்லை

இத்தகைய குற்றச் செயல்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் அரங்கேறத் தொடங்கி விட்டன. தமிழகத்தின் கிராமத்துப் பள்ளிக்கூடங்களில்கூட மாணவர்களிடையே வன்முறை மனோபாவம் மேலோங்கிக் காணப்படுகிறது. நோட்டுப் புத்தகத்தைக் கிழித்து விட்டதாக ஒரு மாணவன் இன்னொரு மாணவனைக் கொன்றதாகச் சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. சென்னையில், வகுப்பு ஆசிரியை வீட்டுப் பாடம் எழுதாத ஒரு மாணவனைக் கண்டித்ததால் அந்த மாணவனால் குத்திக் கொல்லப்பட்ட செய்தி தமிழகத்தையே உலுக்கியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நலகொண்டா மாவட்டத்தில் உள்ள கோடா கோடா கிராமத்தில் ஒரு மதரஸாவில் படித்துவந்தான் அப்துர் ரஹ்மான். வயது 7. இவனை அதே மதரஸாவைச் சேர்ந்த 12 வயது முதல் 14 வயது வரையுள்ள மூன்று மாணவர்கள் சேர்ந்து கொன்று ஒரு மரத்தில், தூக்கில் தொங்க விட்டார்கள். என்ன காரணம்? மாணவன் இறந்தால் மதரஸாவைப் பூட்டிவிடுவார்கள்; விடுமுறை கிடைக்கும் என்பதற்காக.

குழந்தைகள் இப்படி வழிகெட்டுப்போவதற்கும் குற்ற வாளிகள் ஆவதற்கும் மூத்த தலைமுறையினரைத் தவிர வேறு யாரைப் பொறுப்பாக்க முடியும்? இந்தக் கேள்விக்கு விடை சொல்ல வேண்டியவர்களும் அவர்கள்தாம்.

மரபணு காரணமா?

‘குழந்தைகளைக் கொலையாளிகளாய் மாற்றுவது எது?’ என்பதையே மனநல ஆய்வாளர்கள் இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். பாரம்பரியமாகவே சிலரிடம் மரபணுக்கள் மூலம் ‘குற்ற வாசனை’ இருக்க வாய்ப்புண்டு என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆயினும் இந்தக் கருத்தை அறிவியல் உலகம் பரவலாக ஏற்றுக்கொள்ளவில்லை. சூழ்நிலைகள்தான் குற்றவாளிகளை உருவாக்குகின்றன என்ற தீர்மானத்தைத்தான் பெரும்பாலான மனநல ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். “கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகக் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்” என்பது போன்ற பாரபட்சமான- இன அடிப்படையிலான நிலைப்பாடுகளை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

அன்றாட வாழ்க்கையிலும் தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் அதிக அளவில் இடம்பெறும் வன்செயல்கள், வீட்டில் பெற்றோர்களுக்கு இடை யிலான சண்டை சச்சரவுகள், தாய்-தந்தையரால் புறக்கணிக்கப்படுவதன் மூலம் உண்டாகும் உணர்வுக் கொந்தளிப்புகள், மோசமான சூழல்கள் போன்றவற்றால் உருவாகும் பிரச்சினைகள்தான் குழந்தைகளைக் குற்றவாளிகளாக ஆக்குகின்றன. இளம் பருவத்தில் தாய்-தந்தையரின் அரவணைப்போ, பாசமோ கிட்டாத குழந்தைகள் உடல் அளவிலும் மனத்தளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். துயரங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் கொடுமைகளுக்கும் தொடர்ந்து ஆளாகும் குழந்தைகளின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் அந்தக் குழந்தைகள் சமுதாயத்தின் மீதும் சக உயிர்கள் மீதும் வெறுப்பும் குரோதமும் கொள்கின்றன. இத்தகைய குழந்தைகளிடம் ‘சமூகத்துக்கு எதிரான ஆளுமைச் சீர்குலைவுகள்’ காணப்படும். தொடக்கத்திலேயே கவனித்தால் இப்படிப்பட்ட குழந்தைகளின் உணர்வுகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

உயிருக்கு மதிப்பில்லை

2000-ல் தன்னுடைய தாய்-தந்தையரைக் கொன்று சக தோழர்கள் 24 பேர் மீதும் குண்டுமழை பொழிந்த 15 வயது கிப் பிங்கிள் தன்னுடைய வளர்ப்பு மிருகங்களைச் சித்திரவதை செய்து ரசிப்பவனாக இருந்தானாம். இதுபோன்ற குழந்தைகளின் மனசாட்சி நாளடைவில் மரத்துப்போய்விடும். திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் காமிக்ஸ் கதைகளும், கொலை செய்வதையும் பழிக்குப்பழி வாங்குவதையும் சிறப்பான செயல்களாகச் சித்தரிப்பதால் அவை அப்படியே குழந்தைகள் மனதில் தங்கி பெரிய பாதிப்பு களை ஏற்படுத்துகின்றன. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் இதனை நிரூபித்திருக்கின்றன. இப்படி வளரும் குழந்தைகளிடம் மனித உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை என்ற எண்ணம் தோன்றினால் அதில் வியப்படைய ஒன்றுமில்லை.

எண்பதுகளில் இருந்ததைவிட அமெரிக்காவில் குழந்தைக் கொலையாளிகளின் எண்ணிக்கை இப்போது இருமடங்காகிவிட்டது. பள்ளிக்கூட வாசல்களில் மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. முழுமை யான சோதனைகளுக்குப் பின்னர்தான் மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். கலாச்சார ஆக்கிரமிப்பின் காரணமாக நம் நாட்டுப் பள்ளிக் கூடங்களின் வாசல்களிலும் இனி மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டாலும் வியப்பதற்கில்லை!

- சிராஜுல் ஹஸன், மூத்த இதழாளர், ‘சமரசம்’ இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x