Published : 26 Dec 2014 09:11 AM
Last Updated : 26 Dec 2014 09:11 AM

ஆழிப் பேரலையில் பாடம் கற்றோமா?

மறக்க முடியுமா? இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கத்தால் ‘சுனாமி’ என்ற ஆழிப் பேரலை நிகழ்த்திய ஊழித் தாண்டவத்தின் பத்தாவது ஆண்டு நினைவுநாள் இன்று. 11 நாடுகளைச் சேர்ந்த 2,27,898 பேரைப் பலிகொண்ட நாள் இது.

இந்தோனேசியத் தீவுகளுக்கு அருகில் குறிப்பாக சுமத்திரா தீவின் மேற்குக் கரையோரத்தின் கடலடியில்தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டைப் போல 23,000 மடங்கு ஆற்றல் கொண்ட நிலநடுக்கம் அது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் இந்தோனேசியா, இந்தியா உள்பட 11 நாடுகள் தாக்குதலுக்குள்ளாயின.

சுமார் 3,000 மைல்களுக்கு அப்பாலும் பயணப்பட்டு கிழக்கு ஆப்பிரிக்கக் கடலோரப் பகுதிகளைத் தாக்கிய நிலையிலும் அதன் தீவிரம் குறையாமல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் கடலடித் தரையில் ஏற்பட்ட வெடிப்பின் நீளம் மட்டும் சுமார் 600 மைல்கள் என்கிறார்கள் நிபுணர்கள். டிரில்லியன் டன்கள் அளவுக்குக் கடலில் பாறைகள் இடம்பெயர்ந்தன.

ஆழிப் பேரலையால் இந்தியாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 6,400. புதுச்சேரி, காரைக்கால் உட்பட தமிழகக் கடல் பகுதியில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,400. இதெல்லாம் அதிகாரபூர்வ எண்ணிக்கையே. இதைவிட அதிகமானோர் இறந்திருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. தவிர, 70,000 முதல் 80,000 பேர் வரை வீடுகளை இழந்து இடம்பெயர்ந்தனர். இந்தப் பேரலை கடலோரத் தீவுகளின் மலைகளில் இருந்த மரங்களைக்கூடப் பெயர்த்துவிட்டது. நிலங்களையும் கடல் கொண்டது.

ஏராளமான சரக்குக் கலன்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டன. கடலோரம் நிறுத்திவைக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் உள்ளிட்டவை பலத்த வேகத்துடன் ஆயிரக்கணக்கான அடிகள் தொலைவுக்குத் தூக்கி வீசப்பட்டன. ஒட்டுமொத்தமாக, கடலோடிகளின் வாழ்க்கையும் வாழ்வாதாரங்களும் குலைந்துபோயின.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் கடலோடிகள் சமூகத்தின் மீது நம்முடைய பார்வை சற்றுத் திரும்பியது. அப்போதும் கடலோடிகளின் வாழ்க்கையையும் கடலையும் ஒட்டுமொத்த சமூகமும் புரிந்துகொண்டுவிடவில்லை. ஒருபக்கம் சுனாமிக்கு எவ்வளவோ நிவாரணங்கள் வந்து குவிந்தாலும் மறுபக்கம் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் சுனாமி நிவாரணத்திலும் கொழுத்த லாபவேட்டை நடத்தியதை என்னவென்று சொல்வது?

கரிசனம் என்பது தொடர் பயணமாக இருக்க வேண்டும். சுனாமியின்போது கடலோடிச் சமூகத்தின்மீது நாம் காட்டிய பரிவு அப்படியே மங்கிப்போய் மீண்டும் மறதியும் புறக்கணிப்பும் நம்மை ஆட்கொண்டதுதான் பேரவலம். கடலில் என்ன நிகழ்ந்தாலும் அது கரையில் மட்டுமல்ல உள்நாட்டிலும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும். அந்த அளவுக்கு இயற்கை நுட்பமானது. சுனாமியின்போது மட்டும்தான் இயற்கை சூறையாடியது.

மனிதர்கள் நிகழ்த்தும் சூறையாடலோ முடிவின்றித் தொடர்கிறது. சூறையாடல் மட்டுமல்ல, நிலத்தில் உள்ளவர்கள் கடலைத் தங்கள் குப்பைத் தொட்டியாகவும் கழிவு நீர் வடிகாலாகவும் பயன்படுத்திக்கொண்டிருப்பது எவ்வளவு அநீதி! கடலுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற எண்ணத்தில் கடலை நாம் சீரழித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் சுனாமியில் நாம் எதுவும் பாடம் கற்கவில்லை என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x