Published : 11 Dec 2014 09:48 AM
Last Updated : 11 Dec 2014 09:48 AM

திட்டக் குழுவுக்கு மாற்று என்ன?

மத்திய திட்டக் குழுவைக் கலைப்பது என்ற முடிவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி, அது தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டி, அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டிருக் கிறார். திட்டக் குழுவைத் திருத்தியமைத்து அதன் பணிகளை மேலும் கூர்மைப்படுத்தலாம் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் கூறியிருக்கிறார்கள்.

பிரதமரின் கருத்தை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல்வர்களும் வேறு சில முதல்வர்களும் ஆதரித்திருந்தாலும் முழுமையான கருத்தொற்றுமை ஏதும் ஏற்படவில்லை. திட்டமிடுதலில் மாநில அரசுகளுக்கு அதிகப் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற மோடியின் கருத்தைப் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

திட்டக் குழு செயலிழந்துவிட்டது என்று சொல்லித்தான் இந்த முடிவை நோக்கி மோடி நகர்ந்திருக்கிறார். ஆனால், இந்தக் குற்றச் சாட்டு, திட்டக் குழுவின் மேல் மட்டுமல்ல, அனைத்து அரசுத் துறைகள் மீதும் தேர்தல் அமைப்பு போன்றவை மீதும்கூட வைக்க முடியும். ஆகவே, பிரச்சினை திட்டக் குழுவுடையதல்ல. தன்னலமின்றியும், ஈடுபாட்டுடனும் பணியாற்றுபவர்கள் மேற்கண்ட எல்லாத் துறைகளிலும் அமைப்புகளிலும் அருகிவிட்டதுதான் இதற்குக் காரணம். இதில் திட்டக் குழுவை மட்டும் தனித்துச் சொல்ல என்ன இருக்கிறது?

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் விவசாயம், தொழில்துறை என்று எல்லாத் துறைகளிலும் சமமான வளர்ச்சி ஏற்படுத்தவும்தான் திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது. மக்களில் எல்லாப் பிரிவினரும் எல்லாப் பிராந்தியமும் ஒரே மாதிரியான முன்னேற்றத்தைக் கண்டுவிடவில்லை. இந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்கவும், பின்தங்கிய பகுதிகள் மற்றும் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்குச் சிறப்புக் கவனம் செலுத்தவும் திட்டக் குழு அவசியமாக இருந்தது.

திட்டக் குழுவின் தொடக்க ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்திய அரசியலில் ஏற்பட்ட தேக்கமும் ஊழல் எண்ணங்களும் போகப் போக திட்டக் குழுவிலும் பிரதிபலித்து, இன்று ஒரு வெள்ளை யானையாகத் தோற்றமளிக்கிறது அது.

திட்டக் குழுவுக்குப் பதிலாக ஒரு புதிய அமைப்பு வரவிருப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்போது திட்டக் குழுவின் பழம் பெருமைகளைப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. புதிதாக வரவிருக்கும் அமைப்பின் இன்றியமையாத அம்சங்களைப் பற்றி விவாதிப்பதே இப்போதைய அவசியம். திட்டக் குழுவின் நல்ல அம்சங்களை எடுத்துக்கொண்டு, அதன் குறைகளைக் களைந்த அமைப்பாக அதை யோசிக்கலாம்.

சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் நிபுணர்களையும் உள்ளடக்கியதாக அந்த அமைப்பு இருப்பது அவசியம். இந்தியா முழுமைக்குமாக யோசிக்காமல் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற விதத்தில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். திட்டங்களிலும் செயல்பாடுகளிலும் மேலிருந்து கீழ் என்று இல்லாமல், கீழிருந்து மேல் என்று சிந்திக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆளும் கட்சியின் விருப்பத்துக்குரியவர்களே பொதுத் துறைகளிலும், அரசு அமைப்புகளிலும் ஆக்கிரமிப்பார்கள் என்பது நம் காலத்தின் எழுதப்படாத சட்டம். புதிய அமைப்பும் அப்படி இருக்குமென்றால், ஓரிரு வருடங்களுக்குள் அது தரைதட்டிப்போவதை யாராலும் தடுக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x