Last Updated : 17 Dec, 2014 10:48 AM

 

Published : 17 Dec 2014 10:48 AM
Last Updated : 17 Dec 2014 10:48 AM

இன்னொரு இந்தியா 8 - மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க வியூகம்

மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க காவல் படைகளைப் புதுப்புது பெயர்களில் அனுப்புவதே கடந்த காலங்களில் இந்திய அரசு மேற்கொண்ட வியூகம். 2005-ல் பழைய உத்தி ஒன்றை அரசு புதுப்பித்தது. அன்றைய மலேயாவில் கம்யூனிஸ்ட்டுகளை எதிர்கொள்ள பிரிட்டிஷ் அரசாங்கம் கையாண்ட கொடூரமான உத்தி அது.

இந்திய அரசு ஏற்கெனவே மிஸோரம், நாகாலாந்து கிளர்ச்சிகளின்போது இந்த உத்தியைக் கையாண்டிருக்கிறது. அதாவது, காட்டின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் மக்களை ஒரு குறிப்பிட்ட வளையத்தில் கொண்டுவருவது. அதைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்து, அங்கு காவல் படையினரை நிறுத்துவது. இந்த வளையத்துக்குள் வராத பகுதிகளில் வசிப்பவர்களை வேட்டையாடுவது.

பஸ்தரில் ஏற்கெனவே இதை வேறு வகையில் பரிசோதித்துப் பார்த்த ஒருவர் இருந்தார். மகேந்திர கர்மா. பழங்குடிகளில் கொஞ்சம் முன்னேறிய சமூகங் களில் நிலங்களைச் சொந்தமாக்கிக்கொள்ளும் / சொந்த நிலங்களிலேயே தங்கி விவசாயத்தில் ஈடுபடும் நிலவுடைமைச் சமூக முறை உண்டு. அதேபோல, கிராமத் தலைவர்களுக்கு என்று தனி மரியாதையும் செல்வாக்கும் உண்டு.

மாவோயிஸ்ட்டுகள் தலையெடுப்புக்குப் பின் இப்படியானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். மேலும், அரிதாக அரசாங்கம் கொண்டுவரும் ஓரிரு சாலை / பாலக் கட்டுமானம் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கும் தடையாக இருப்பது, மக்களுடைய திருமணங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்களில்கூடத் தலையிடுவது, அதீதமான கட்டுப்பாடுகள் என்று மாவோயிஸ்ட்டுகள் மீதும் விளிம்புநிலை மக்களில் ஒரு பகுதியினருக்கு அதிருப்தி உண்டாகியிருந்த சமயம். இப்படிப்பட்டவர்களை ஒருங்கிணைத்து மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிர்ப் படையை உருவாக்குவதே மகேந்திர கர்மாவின் திட்டம். சத்தீஸ்கரை ஆளும் பாஜக முதல்வர் ரமண் சிங்கின் அரசு, இந்தத் திட்டத்துக்குக் கூடுதல் செயல் திட்டங்களை அளித்தது. இப்படியாக, 2005-ல் சல்வா ஜுடும் அமைப்பு உருவானது.

அராஜகத் திட்டம்

காட்டில் ஆதிவாசிகளை ஒருங்கிணைத்து சல்வா ஜுடும் கூட்டம் நடத்தும். ஒரு குறிப்பிட்ட வளையத்துக்குள் அமைக் கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு, எல்லாக் கிராமத்தினரும் தம்முடைய வீடு வாசலை விட்டுவிட்டு வர வேண்டும் என்று அது வலியுறுத்தி, கெடு நிர்ணயிக்கும். அந்தக் கெடுவுக்குள் வராத கிராமத்தினர் மாவோயிஸ்ட்டுகள். அவர்கள் மீது சல்வா ஜுடும் தாக்குதல் நடத்தும்.

இப்படி ஒரு அராஜகமான செயல்திட்டத்தை மத்தியில் ஆண்ட காங்கிரஸும் மாநிலத்தில் ஆளும் பாஜகவும் இணைந்து ஆதரித்தன. அரசு சார்பில் நேரடியாக உதவின. சல்வா ஜுடும் நடத்திய கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் பங்கேற்றனர். தங்களுடன் பங்கேற்காதவர்கள் மீது தாக்குதல் நடத்த ஏதுவாக, கத்தி, அரிவாள், கோடாரி, வில் - அம்புகள் ஆகியவை அரசு சார்பில் அளிக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேல் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுக்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சிறப்புக் காவல் கண்காணிப்பாளர்கள். இப்படி 30,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ. 1,500. அரசே இந்தச் சம்பளத்தைக் கொடுத்தது. சத்தீஸ்கர் மாநிலக் காவல் துறையும் சிறப்புப் பாதுகாப்புப் படை வீரர்களும் இவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

ரத்தத்தில் உறைந்த காலம்

சல்வா ஜுடும் படை கிராமங்களில் புகுந்து சூறையாடியது. ஆண்களை வெட்டிச் சாய்த்தது. பெண்களைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியது. வீடுகளை எரித்தழித்தது.

பாசகுடா கிராமம் ஓர் உதாரணம். 2005 டிசம்பர் 5-ல் இங்கு நுழைந்தது சல்வா ஜுடும். ‘ஆவபள்ளி என்ற இடத்தில் சால்வா ஜுடும் பொதுக்கூட்டம் நடக்கும். அதில் பங்கேற்காதவர்கள் மாவோயிஸ்ட்டுகளாக அறிவிக்கப் படுவார்கள்’ என்று சுவரொட்டியை ஒட்டியது சல்வா ஜுடும். அப்படிக் கூட்டத்துக்கு வந்தவர்களைப் பார்த்து, ‘மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாகச் சரணடையாவிட்டால் சுட்டுத்தள்ளப் படுவார்கள்’ என்று மிரட்டினார்கள். அராஜகத்தை நிறைவேற்றியும் காட்டினார்கள். 2006 பிப்ரவரி 21-ல் மீண்டும் பாசகுடாவுக்கு வந்து, ‘மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக இந்தக் கூட்டத்தில் எல்லோரும் பேச வேண்டும்.

அப்படிப் பேசாதவர்களெல்லாம் மாவோயிஸ்ட்டுகள்’ என்று எச்சரித்தனர். இரு நாட்களுக்குப் பிறகு லிங்ககிரி, கொர்சகுடா, சர்கேகுடா, மல்லேபள்ளி, போர்குடா ஆகிய இடங்களில் கிராமவாசிகளை வைத்துக் கூட்டங்கள் நடத்தினார்கள். இந்த ஊர்களிலெல்லாம் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கை என்ற போர்வையில் வீடுகள் எரிக்கப்பட்டன, மக்கள் தாக்கப்பட்டனர், பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர்.

சம்பவங்களுக்குச் சில நாட்கள் பின்னர், மார்ச் 5 இரவு அங்கு வந்தவர்கள் கிராமவாசிகளைத் தாக்கி அவர்களில் 4 பேரைக் கொன்றனர். இறந்தவர்களின் சடலங்களுடன் கிராமவாசிகள் போலீஸ் நிலையம் சென்றனர். போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, சடலங் களைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். எல்லாம் முடிந்ததும் ஆற்றைக் கடந்து சடலங்களுடன் கிராமவாசிகள் வந்துகொண்டிருந்தனர். அப்போது சால்வா ஜுடும் ஆட்கள் கிராமத்தினரை ஆற்றின் எதிர்க் கரையில் இருந்த தங்களுடைய முகாமுக்கு இழுத்துச் சென்று இரு மாதங்கள் வைத்திருந்து சித்தரவதை செய்தனர். கிராமமே வெறிச்சோடியது (மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகே பாசகுடாவைச் சேர்ந்த பலர் தங்களுடைய கிராமங்களுக்கே திரும்ப முடிந்தது.

கோம்பட், கச்சன்பள்ளி, பள்ளசார்மா, கூமியாபால், டாடேமார்கு, பல்லோடி என்று சல்வா ஜுடும் அமைப்பின் வெறியாட்டம் தொடர்ந்தது. சர்கேகுடா, டாடேமெட்லா, மோர்பள்ளி, திம்மாபுரம் என்று வரிசையாகக் கிராமங்கள் எரிக்கப்பட்டன. மக்கள் கதறினார்கள். ரமண் சிங் அரசாங்கமோ, இப்படி சல்வா ஜுடும் சூறையாடிய 644 கிராமங்களை ‘விடுவிக்கப்பட்ட கிராமங்கள்’ என்று அறிவித்து வெற்றிச் சின்னம் காட்டியது.

இந்தக் காலகட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் என்ன செய்தார்கள் என்றால், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சல்வா ஜுடும் ஆட்களைக் குறிவைத்துத் தாக்கினார்கள். இப்படியான தாக்குதல் நடக்கும்போது, அங்கிருக்கும் பழங்குடி மக்கள் சும்மா இருக்க முடியாது. அப்படிச் சும்மா இருந்தால், மாவோயிஸ்ட்டுகள் ஆக்கப்பட்டுவிடுவார்கள். தாக்குதலுக்குப் பின் அங்கு வந்தடையும் ஏனைய சல்வா ஜுடும் படையினரால் வேட்டையாடப்படுவார்கள். எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டால், அவர்கள் சல்வா ஜுடும் ஆக்கப்பட்டுவிடுவார்கள். மாவோயிஸ்ட்டுகளால் வேட்டையாடப்படுவார்கள். ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் தங்கள் சொந்த வீடு, உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு, பரதேசிகளாக இப்படித் திறந்தவெளி முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் அஞ்சி மேலும் அடர் காட்டுக்குள் ஓடிப்போனார்கள்.

“சல்வா ஜுடும் அமைப்பைக் கலைக்க வேண்டும். அதற்கு அரசு அங்கீகாரம் அளிப்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது. சல்வா ஜுடும் படுகொலைகளையும் தாக்குதல்களையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று 2011-ல் உச்ச நீதிமன்றம் தடை விதித்த பின்னரும்கூட, சத்தீஸ்கர் அரசுக்கு அந்த அமைப்பைக் கைவிட மனம் இல்லை. சுமார் 6,500 பேர் கொண்ட ஒரு படையை அப்படியே மாநிலக் காவல் துறையின் ஒரு பிரிவாக ஏற்று, அவர்களைக் காவலர்கள் ஆக்கியது. இறுதியில், 2013-ல், சல்வா ஜுடும் தலைவர் மகேந்திர கர்மா மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்ட பின், அதன் ஆதிக்கம் அடங்கியது.

“இந்தக் காலகட்டத்தில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டு களின் எண்ணிக்கை 50-ஐக் கூடத் தாண்டியிருக்காது. ஆனால், பல நூறு அப்பாவிப் பழங்குடி மக்கள் கொல்லப்பட்டார்கள்; அப்படிக் கொலை விழுந்த / பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட / எரிக்கப்பட்ட குடும்பங் களிலிருந்து பல நூறு மாவோயிஸ்ட்டுகள் அதற்குப் பின்தான் உருவானார்கள்” என்கிறார்கள் தண்டகாரண்ய போரைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருப்பவர்கள்.

அநீதி அரசு

இந்த இடத்தில் சத்தீஸ்கரை ஆளும் பாஜகவின் ரமண் சிங் அரசைப் பற்றி அவசியம் குறிப்பிட வேண்டும். இந்தியாவிலேயே ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்படும் இடம் என்று சத்தீஸ்கருக்குப் பேர் வாங்கித் தரக் கூடிய அரசு ரமண் சிங்குடையது. புகழ்பெற்ற மருத்துவச் சேவையாளரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான பினாயக் சென்னை தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைத்ததும், சர்வதேச அளவில் அவருக்கு ஆதரவாக நோம் சோம்ஸ்கி உள்ளிட்டவர்கள் ஆதரவாகக் குரல் கொடுத்ததும், பின்னாளில் உச்ச நீதிமன்றம் ‘‘தடைசெய்யப்பட்ட இயக்கம் தொடர்பான புத்தகம் ஒன்றை வைத்திருந்தார் என்ற ஆதாரத்தின் அடிப்படையிலேயே சென் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளார். அப்படி என்றால், காந்தி புத்தகம் வைத்திருப்பதாலேயே ஒருவரை காந்தியவாதி என்று சொல்லிவிட முடியுமா?’’ என்று கேட்டு, பிணையில் விடுவித்ததே போதும் ரமண் சிங் அரசின் ஜனநாயகத்தைச் சொல்ல.

சத்தீஸ்கரில் அரசுக்கு எதிராக மூச்சுக்கூட விட முடியாது என்கிறார்கள் உள்ளூர் பத்திரிகையாளர்கள். முதல் அடி, எச்சரிக்கை. அடுத்த அடி, விளம்பரதாரர்களை மிரட்டி விளம்பரத்தை நிறுத்துவது. மூன்றாவது அடி, பத்திரிகை முகவர்களையும் கடைக்காரர்களையும் மிரட்டி விநியோகத்தை முடக்குவது. இதையெல்லாம் தாண்டியும் அந்தப் பத்திரிகை மூச்சுவிட்டால், வழக்குகள் - தாக்குதல்கள். இந்த விஷயங்களிலெல்லாம் மத்திய அரசு - மாநில அரசு ஒருங்கிணைப்பில் காங்கிரஸ் - பாஜக இறுக்கமான ஒற்றுமையோடு செயல்பட்டன.

எல்லா அட்டூழியங்களுக்கும் பின்னணியில் காட்டைச் சூறையாடும் பெருநிறுவனங்களின் திட்டம் இருந்தது என்ற குரல்கள் எங்கும் ஒலித்தன. அந்தக் குரல்களை நம்புவதற்கு எல்லா முகாந்திரங்களும் இருக்கின்றன.

(தொடரும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x