Last Updated : 10 Dec, 2014 09:43 AM

 

Published : 10 Dec 2014 09:43 AM
Last Updated : 10 Dec 2014 09:43 AM

எனது நண்பர் ராஜாஜி

கருத்துரீதியாக வேறுபட்டிருந்தாலும் அன்பால் ஒன்றுபட்டவர்கள் தந்தை பெரியாரும் ராஜாஜியும்!

ஆச்சாரியாரிடம் எப்போதுமே மரியாதை உண்டு. ஆச்சாரியாரைப் பற்றி அரசியல், பொதுநலத்தில் மாறுபட்ட அபிப்ராயம் கொண்டிருந்தாலும், கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்தாலும் அவருக்கு என்னிடம் அன்பு உண்டு. நான் அவரது அன்புக்குப் பாத்திரமானவன்.

ஒத்துழையாமை ஆரம்பமானவுடன் நான் அவருடைய உள்ளத்தைக் கொள்ளைகொண்ட காதலி போலவே இருந்துவந்தேன். எங்களுக்குள் வெகுநாள் ஒத்துழையாமையிலே அபிப்ராய பேதமே இல்லா திருந்தது. அவர் இஷ்டத்தை அறிந்து, அதுவே என் அபிப்ராயம்போலக் காட்டி இணங்கச் செய்வதுபோல ஒவ்வொரு விஷயத்திலும் நடந்துகொள்வேன். அதனாலேயே அனேகர் என்னைக் கண்டுவிட்டே அவரைக் காணுவார்கள், அப்படிப்பட்ட நிலை.

எங்கள் காதல்!

வகுப்புணர்ச்சி காரணமாகவே இருவருக்கும் மாற்றம் அடைய நேரிட்டது. அதன் பிறகு பல சம்பவங்கள் ஏற்பட்டுவிட்டன என்றாலும், அவரைக் காணும் போது என்னை அறியாமலே அவரிடத்தில் ஒரு மரியாதையும் பணிவும் ஏற்பட்டுவிடுகின்றன. அவரைக் காணும்போது எப்படி மரியாதையும் பணிவும் ஏற்படுகிறதோ, அதுபோல ஒரு பரிதாபமும் ஏற்படாமல் இருப்பதில்லை. காரணம், அவ்வளவு பெரிய தியாகம் செய்தவர். அவ்வளவு தியாகமும் ஒரு பயனும் இல்லாமல் போகும்படியாய்விட்டதே பாவம் என்று பரிதாபப்படுவதுண்டு என்றாலும், அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு மூன்று அர்த்தம் செய்துபார்க்காமல் நான் ஒரு முடிவுக்கும் வருவதில்லை.

நான் பிரிந்துவிட்ட பிறகும் ஒரு சமயத்தில் சட்டசபைக்கு நிற்கும்படி என்னை வேண்டினார். நான் நிற்பது நல்லது என்கின்ற நம்பிக்கையும் உறுதியும் இருந்தும், இந்த ஸ்தாபனங்களுக்கு அவருடைய ஆதரவில் செல்வது எனது வாழ்வைக் கெடுத்துவிடுமோ என்று அஞ்சியே மறுத்துவிட்டேன்.

கோவை ஜெயிலில் எதிர் பிளாக்கில் ஒரு கைதியாகச் சந்தித்தார். தோழர் சர் ஆர்.கே. சண்முகம் அதட்டியதாலும், தோழர் ஆச்சாரியார் முயற்சியாலும் நான் ஆச்சாரியார் அவருடைய சமையலறை சாப்பாட்டில் இருக்க நேர்ந்தது. அப்போதும் எங்கள் கதை ஞாபகத்துக்கு வந்தவுடன் இருவருக்கும் கண்களில் நீர் ததும்ப எங்கள் காதலைக் காட்டிக்கொண்டோம். எந்தக் கருத்தில் என்றால், எனக்கும் அப்படிப்பட்ட தலைவர் கிடைக்க மாட்டார். அவருக்கும் என்னைப் போல ஒரு தொண்டர் கிடைக்க மாட்டார்.

முடிவில், இருவரும் சேர்ந்து முன்போல ஒத்துழைக்க முடியுமா என்கின்ற விஷயமாகவே பேசிப் பேசி ஒத்துழைக்கச் சந்தர்ப்பம் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை மீதே ஜெயிலில் பிரிந்தோம். அதற்குப் பிறகு, ஒருதரம் சந்திக்க நேர்ந்தாலும் இருவரும் சரிவர அந்த அபிப்ராயத்தை வலியுறுத்தவில்லை. பிறகு, சுமார் 20 மாதம் பொறுத்து நானும் தோழர்கள் பாண்டியன் முதலியவர்களும் குற்றாலத்தில் ஒருநாள் ஸ்னானத்துக்குப் போகையில் அங்கு நான்கு நாள் முன்னதாகவே சுகத்துக்காகவே போயிருந்த ஆச்சாரியார், தன் ஜாகையில் இருந்த என்னைக் கண்டார். பார்க்க வேண்டும் என்று சொல்லியனுப்பினார்.

குற்றாலத்தில்…

அருவியில் குளித்துவிட்டு அவர் ஜாகைக்குப் போனேன். அப்பொழுது மாலை 3 மணி இருக்கும். நானும் என் தோழர்களும் அதுவரை சாப்பிடவில்லை யாதலாலும் ஆச்சாரியாரிடமும் அதிக நேரம் அவகாச மில்லை. அவசரமாய் விடை கேட்டேன். ஏன் ஒருநாள் சாவகாசமாக இங்கு தங்குவதுதானே என்றார். நான் இப்போது சாவகாசமில்லை என்றும் மற்றொரு நாள் வருவதாகவும் சொன்னேன். அவசியம் வர வேண்டும் என்றார். ஆகட்டும் என்றேன்.

அந்தப்படியே 13 நாள் பொறுத்து மறுபடியும் குற்றாலம் சென்றேன். அதுசமயம், அவர் ஒரு வனபோஜனத்துக்குப் புறப்பட்டுக்கொண்டு, வீட்டின் முன்வாசலுக்கு வந்துவிட்டார். என்னைக் கண்டதும் ஆசையாக வரவேற்று வனபோஜனத்துக்கு அழைத்தார். நான் பின் சென்றேன். வழியில் சிறிது முன்னதாகவே சென்றுகொண்டிருந்த நாங்கள், காதல் மிகுதியில் அர்த்தமற்ற வார்த்தைகளைப் பேசுவதுபோலப் பல விஷயங்களைக் கலக்கிக் கலக்கி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேசிக்கொண்டே சுமார் ஒன்றரை மைல் நடந்தோம். அந்த இடம் சென்று மற்ற எல்லோரும் சேர்ந்து சம்பாஷித்தோம். பிறகு, வீட்டுக்குத் திரும்பி அன்று மாலையும் இரவும் கழித்தோம்.

தானாக வந்த விஷயங்களைப் பற்றித்தான் பேசினோமே ஒழிய, குறிப்பாக எதையும் வருந்தி ஒன்றும் பேசவில்லை. இவைகளிலேயே அனேக விஷயங்கள் கலந்துகொண்டன. முடிவு என்னவென்றால், இரு கட்சி கிளர்ச்சிகளும் எங்களுக்குப் பிடிக்கவில்லை. சேர்ந்து இன்ன இன்ன காரியம் செய்தால் நாட்டுக்கு, சமூகத்துக்கு நலன் ஏற்படும் என்பதும் பேசி அபிப்ராயத்துக்கு வந்த விஷயங்களாகும்.

அவரைவிட எனக்கு, இருவரும் கலந்து ஒற்றுமையாய் ஒரு வேலை செய்யக்கூடிய காலம் வராதா என்கின்ற ஆசை ததும்பி இருந்தது. அவ்வளவு பெரிய விஷயம் பேச அந்த சந்தர்ப்பம் போதாது. ஆனால், சில விஷயங்களில் இருவருக்கும் நேர்மாறான அபிப்ராயம் இருப்பதும் அது விஷயத்தில் ஒத்துவர முடியாதே என்று பயப்படக்கூடிய அம்சங்களும் வெளியாயிற்று. அப்படி இருந்தபோதிலும் ஒரு சமயத்தில் கூடுவோம் என்கின்ற நம்பிக்கை குறையவில்லை. இவ்வளவுதான் நாங்கள் பேசியதன் தத்துவமாகும்.

நட்பின் தொடக்கம்

சேலத்தில் ராஜாஜிக்கு கெட்டிக்கார வக்கீல் என்ற பெயரோடு, புத்திசாலி என்ற பெயரும் யோக்கியர் என்ற பெயரும் ஏற்பட்டுவிட்டது. அவரை எனக்கு 1910-ம் ஆண்டு வாக்கிலிருந்து தெரியும். ராஜாஜி 1912 வாக்கில் எல்லோருடைய வீட்டிலும் சாப்பிடுவார். இதனால் அவரிடம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அப்போது அவர் ஒரு பகுத்தறிவாதியாகவே நடந்துகொண்டார்.

ராஜாஜி, வரதராஜுலு நாயுடு, ஆதிநாராயண செட்டி யார் ஆகியவர்கள் சேலத்தில் இருந்து மதுரைக்கு வரதராஜுலு நாயுடு கேசுக்கு சுமார் 5, 6 தடவைக்கு மேல் போகும்போது ஈரோட்டில் இறங்கி, என் வீ்ட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு ரயிலுக்குப் போவார்கள். ஈரோட்டில் அவ்வளவு நேரம் தாமதமாய் திருச்சிக்கு வண்டி போகும். அதனால், எனக்கு இவர்களிடம் சற்று அதிகமாகப் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு இருவரும் வலைவீசினார்கள். நானும் அந்த வலையில் சிக்கிவிட்டேன். இவர்கள் முயற்சிக்கு என்னை ஒரு முக்கியமானவனாகக் கருதிக்கொண்டார்கள்.

எனக்கு ராஜாஜி உண்மையான நம்பிக்கைக் காரராகவும் நண்பராகவும் ஆக வேண்டும் என்பதும் ராஜாஜியின் ஆசை. அதனால், நான் அவர் நட்பில் மூழ்கிவிட்டேன். என்னையும் வரதராஜுலுவையும் ராஜாஜியிடமிருந்து பிரிக்கப் பார்த்தார்கள். வரதராஜுலு நாயுடுவுக்கு ராஜாஜி மீது சிறிது வெறுப்பு இருந்ததால், அவர் கலந்துவிட்டார். உடனே, அவருக்கு காரியக் கமிட்டியில் ஒரு இடம் கொடுத்தார்கள். நான் மறுத்துவிட்டேன்.

இதனால் ராஜாஜிக்கு என்மீது வெகு பிரியம். வெகு நம்பிக்கை. நான் தலைமைப் பதவியில் இருந்தபோது ஒரு சர்வாதிகாரியாகவே நடந்துகொள்வேன். டாக்டர் ராஜன், கே. சந்தானம், வரதாச்சாரி ஆகியவர்கள் ராஜாஜியிடம் என்மீது புகார் கூறுவார்கள். அதற்கு ராஜாஜி, நாயக்கர் போல ஒரு உண்மையான மனிதனைக் காணவே முடியாது என்று சொல்வதோடு, நாயக்கரின் உயிரின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியாது என்று கூறுவார்.

என்னைச் சமுதாயத் தொண்டனாக்கியவர்

வ.வே.சு. அய்யரை எனக்கும் பிடிக்காது. ராஜாஜிக்கும் பிடிக்காது. அவர் சீனிவாச அய்யங்கார் பேச்சைக் கேட்டுக்கொண்டு, என்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். ராஜாஜி ஓட்டு சேகரம் செய்து அத்தீர்மானத்தைத் தோற்கடித்தார். எனக்கும் ஆச்சாரியாருக்கும் இடையே உள்ள நட்பு கணவன் - மனைவிக்கும் உள்ளது போன்றது. உற்சாகம் காரணமாக, தனிப்பட்ட முறையில் சமுதாயத் தொண்டில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த என்னை முழுக்க முழுக்கச் சமுதாயத் தொண்டனாக ஆக்கிய பெருமை ராஜாஜிக்கே உரியதாகும்.

என்னை ராஜாஜிதான் கோவை மாவட்ட காங்கிரஸ் செயலராக ஆக்கினார். பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலராக, தலைவராக ஆக்கினார். என்னிடம் அவர் முழு நம்பிக்கை வைத்து என்னையே அவர், நமது தலைவர் நாயக்கர் என்று அழைத்ததோடு பார்ப்பனரில் வெகு பேரை என்னைத் தலைவர் என்று அழைக்கும்படிச் செய்தார். நாங்கள் நாலைந்து ஆண்டுகள் இரண்டறக் கலந்து நண்பர்களாக இருந்தோம். சகல ரகசியமான காரியங்கள் பற்றிப் பேசி ஒரு கருத்துடையவராக இருந்தோம்.

- குற்றாலத்தில் ராஜாஜியைச் சந்தித்ததுகுறித்து தந்தை பெரியார் 1936 ஜூலை 14-ம் தேதி ‘குடிஅரசு’ இதழில் எழுதியதிலிருந்து…
தொகுப்பு: சு. ஒளிச்செங்கோ,
முன்னாள் செய்தியாளர்,
பெரியார் பெருந்தொண்டர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x