Last Updated : 17 Dec, 2014 10:35 AM

 

Published : 17 Dec 2014 10:35 AM
Last Updated : 17 Dec 2014 10:35 AM

சக்திமிக்க இன்னொரு ஆய்வு!

இந்திய விண்வெளியில் புதிய சாத்தியங்களை உருவாக்குவதற்கு ஒரு முன்னோட்டமே இது.

இதுவரை இல்லாத அளவில் பெரியதொரு ராக்கெட்டை இந்தியா உருவாக்கியிருக்கிறது. எதிர்காலத்தில் இது விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீரர்களை ஏற்றிச்செல்வதாக இருக்கலாம். இந்த ராக்கெட் இன்னும் முழுதாக உருப்பெறவில்லை என்றாலும், விரைவில் விண்ணில் செலுத்தி சோதிக்கப்படவிருக்கிறது.

இது கிட்டத்தட்ட 14 மாடிக் கட்டடம் அளவுக்கு உயரமாக இருக்கும். எடை 630 டன். இப்போது நம்மிடம் உள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டைப் போல இரண்டு மடங்கு பெரியது. புதிய ராக்கெட்டின் பெயர் ஜி.எஸ்.எல்.வி - மார்க் 3 என்பதாகும். இதை ஒருமையில் ராக்கெட் என்று சொன்னாலும், உண்மையில் நான்கு ராக்கெட்டுகளின் தொகுப்பே இது.

பெரிய வடிவிலான மூல ராக்கெட். அதன் பக்க வாட்டில் இணைந்த இரு துணை ராக்கெட்டுகள். மூல ராக்கெட்டின் மேற்புறத்தில் இணைந்த ஒரு ராக்கெட், அதை முகப்பு ராக்கெட் என்றும் கூறலாம். தொகுப்பு ராக்கெட்டில் அடங்கிய ராக்கெட்டுகள் அடுத்தடுத்து எரிந்து தனியே கழன்று விழும்போது தொடர்ந்து எடை குறைந்துவரும் என்பதால், கடைசியில் முகப்பு ராக்கெட் அதி வேகத்தில் பாயும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா முதலான நாடுகளும் இவ்விதமான தொகுப்பு ராக்கெட்டுகளையே பயன்படுத்துகின்றன.

ராக்கெட் என்பது ஒரு வாகனமே. அந்த வகையில், ராக்கெட்டானது செயற்கைக் கோளைத் தேவையான உயரத்துக்குக் கொண்டுசெல்கிறது. ராக்கெட்டில் பயன் படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் எரிபொருளைப் பொறுத்து ஒரு ராக்கெட்டானது குறிப்பிட்ட எடையைச் சுமந்து செல்லும். அந்த வகையில் ராக்கெட்டெல்லாம் ஒரே திறன் கொண்டவையல்ல.

இப்படியான ராக்கெட் ஏன் தேவை?

இந்தியா 1994-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வெற்றிகரமாகப் பயன்படுத்திவரும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் சுமாரான திறன் கொண்டதே. இது ஒரே ஒரு தடவை மிக அதிகபட்சமாக 1,860 கிலோ எடையைச் சுமந்துசென்றது. மற்றபடி, இது சுமார் ஒன்றரை டன் எடையைச் சுமந்து செல்லக்கூடியதே.

ஆனால், நமக்கு இது போதாது. சுமார் 4 டன் எடையைச் சுமந்து செல்லக்கூடிய சக்தி மிக்க ராக்கெட் தேவை. இப்படியான ராக்கெட்டை உருவாக்க நாம் பல ஆண்டுகளாகப் பெரும் பாடுபட்டுவருகிறோம். அப்படியான ராக்கெட் ஏன் தேவை என்பதற்குக் காரணம் உண்டு.

நாம் தயாரிக்கும் தகவல்தொடர்பு செயற்கைக் கோள்களின் எடை மூன்று டன்னுக்கும் அதிகம். இவற்றைச் செலுத்த நம்மிடம் தகுந்த ராக்கெட் இல்லாத தால், ஒவ்வொரு தடவையும் அந்த செயற்கைக் கோளைத் தென் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று ஐரோப்பாவின் ஏரியான் ராக்கெட் மூலம் செலுத்தச் செய்கிறோம். இப்போது ஜி.எஸ்.எ.ல்.வி- மார்க் 3 ராக்கெட் வெற்றி பெற்றால், இவ்வித செயற்கைக் கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்த முடியும். எதிர்காலத்தில் இந்த ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர்களையும் விண்வெளிக்கு அனுப்ப முடியும். இங்கு இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். எந்த ஒரு ராக்கெட்டுக்கும் எடை சுமக்கும் விஷயத்தில் இரண்டு விதமான திறன் உண்டு. சென்னை யிலிருந்து செங்கல்பட்டு வரை செல்வதானால், ஒரு லாரியில் 10 டன் ஏற்றிச்செல்ல முடியும். ஆனால், அது நாகர்கோவில் வரை செல்வதானால் 4 டன்தான் ஏற்றிச்செல்ல முடியும் என்ற நிலைமை கிடையாது. ஆனால், ராக்கெட் விஷயத்தில் இப்படியான நிலைமை உண்டு.

கிரையோஜெனிக் இன்ஜின்

ஜி.எஸ்.எல்.வி - மார்க் 3 ராக்கெட் மூலம் சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்தில் செயற்கைக் கோளைச் செலுத்த வேண்டும் அல்லது அந்த உயரத்துக்கு ஒரு விண்கலத்தைச் சுமந்து செல்ல வேண்டும் என்றால், அந்த ராக்கெட்டால் 10 டன் வரை சுமந்து செல்ல இயலும். ஆனால், 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குத் தகவல்தொடர்பு செயற்கைக் கோளைச் செலுத்த வேண்டுமானால், அந்த ராக்கெட்டால் சுமார் நான்கு முதல் ஐந்து டன் எடையைத்தான் சுமந்து செல்ல முடியும். எனினும் கிரையோஜெனிக் இன்ஜின் இருந்தால்தான் இது சாத்தியம்.

நமக்கு ஹைட்ரஜன் வாயு தெரியும். ஆக்சிஜன் வாயு தெரியும். ராக்கெட்டின் பின்புறத்தில் உள்ள இன்ஜினில் இந்த இரண்டு வாயுக்களும் சேர்ந்து எரியும்படி செய்தால், மிக அதிகபட்ச உந்துதிறன் கிடைக்கும். எடை மிக்க செயற்கைக் கோள் அல்லது விண்கலத்தை உயரே செலுத்த இவ்வித இன்ஜின் அவசியம் தேவை. பொதுவில், முகப்பில் உள்ள ராக்கெட்டில் இந்த இன்ஜின் பொருத்தப்படும்.

இந்த இரண்டு வாயுக்களும் ஏராளமான அளவில் தேவை என்பதால், ராக்கெட்டில் பெரிய சிலிண்டர்களில் வைத்து எடுத்துச் செல்வது சாத்தியமில்லை. ஆனால், இந்த இரண்டு வாயுக்களையும் தனித்தனியே கடுமையான அளவுக்குக் குளிர்வித்தால் திரவமாகிவிடும். ராக்கெட் இன்ஜினில் ஒன்றுசேர்ந்து எரியும்வரை இவை தனித்தனித் தொட்டிகளில் அதே குளிர் நிலையில் திரவ வடிவில் இருந்தாக வேண்டும். இப்படி, கடுமை யாகக் குளிர்விக்கப்பட்ட திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜன் ஆகியவற்றைப் பயன்படுத்தும் இன்ஜினே கிரையோஜெனிக் இன்ஜின் எனப்படுகிறது. (கிரையோ என்றால் கடும் குளிர்விப்பு என்று பொருள்).

இவ்வித இன்ஜினை உருவாக்குவது என்பது மிகவும் சிக்கலானது. உலகில் முதன்முதலில் (1957) செயற்கைக் கோளைச் செலுத்திய, அத்துடன் முதன்முதலில் (1961) மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய ரஷ்யா 1987-ம் ஆண்டில்தான் கிரையோஜெனிக் இன்ஜினை உருவாக்கு வதில் வெற்றி கண்டது. இந்தியா சொந்தமாக இந்த வகை இன்ஜினை உருவாக்குவதற்கு நீண்ட காலம் பிடித்ததில் வியப்பில்லை.

சோதனை பறத்தல்

எனினும், இந்த மாதத்தின் பிற்பகுதியில் உயரே செலுத்தப்பட இருக்கும் ஜி.எஸ்.எல்.வி - மார்க் 3 ராக்கெட்டின் முகப்பில் கிரையோஜெனிக் இன்ஜின் இடம்பெறாது. இந்த இன்ஜின் இன்னும் சோதிக்கப்படும் கட்டத்தில் உள்ளது. எனவே, டம்மிதான் பொருத்தப்படும். புதிய ராக்கெட்டின் ஸ்திரத்தன்மை, வானில் பாயும் திறன், எடை சுமந்து செல்லும் திறன் ஆகியவற்றைச் சோதிப்பதே இப்போதைய நோக்கமாகும். ஆகவே, இது எந்த செயற்கைக் கோளையும் உயரே செலுத்தாது.

எனினும், அது சுமார் 4 டன் எடையைச் சுமந்து செல்கிறதா என்பதைச் சோதித்தாக வேண்டுமே. முதல் பயணம் என்பதால், பெரும் செலவில் உருவாக்கப்படும் செயற்கைக் கோளை அந்த ராக்கெட்டின் முகப்பில் வைப்பது உசிதமல்ல. அதற்குப் பதில் சுமார் மூன்றரை டன் எடை கொண்ட ஒரு கூடு வைக்கப்பட இருக்கிறது.

இந்தக் கூடு, எதிர்காலத்தில் இந்திய விண்வெளி வீர்ர்கள் இருவர் ஏறிச் செல்வதற்குப் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தின் மாடல் போன்றது. இதில் அவசியமான சில கருவிகள் மட்டுமே இருக்கும். ராக்கெட் குறிப்பிட்ட உயரம் வெற்றிகரமாகப் பறந்துசென்ற பின், இந்தக் கூடு மட்டும் தனியே பிரிந்து, வங்கக் கடலில் பாராசூட் மூலம் கீழே இறங்கும். இறங்கும்போது அந்தக் கூடு தீப்பிடிக்காமல் தடுக்க, அதன் வெளிப்புறத்தில் வெப்பத் தடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அந்த ஏற்பாடு நன்கு செயல்படுகிறதா என்பதும் இப்போது சோதிக்கப்படும்.

எனினும், இதை வைத்து இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கட்டத்தை நெருங்கிவிட்டதாக நினைத்தால் தவறு. ராக்கெட்டின் முகப்பில் மூன்றரை டன் எடை கொண்ட எதையாவது வைத்து அனுப்பியாக வேண்டும் என்ற அடிப்படையில்தான் அந்தக் கூடு வைக்கப்படுகிறது. மற்றபடி, இந்திய விண்வெளி வீரரை உயரே அனுப்புவதற்கு நாம் பல கட்டங்களைத் தாண்டியாக வேண்டும். அதற்குக் குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகலாம்.

- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர், அறிவியல் எழுத்தாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x