Published : 24 Nov 2014 08:48 AM
Last Updated : 24 Nov 2014 08:48 AM

காடுகளை அழித்து வாழ்க்கையா?

நமக்கென்று இருக்கும் ஒரே வீடான இந்தப் புவியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறோம்

உலகம் மிக வேகமாக இயங்குகிறது. இந்த உலகத்திலேயே மிகப் பெரிய 3 சக்திகள் - சந்தை, இயற்கை அன்னை, மூரின் விதி. இந்த மூன்றுமே ஒரே சமயத்தில் வேகவேகமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. உலகமயம் காரணமாகச் சந்தையானது முன்னெப்போதையும்விட, எல்லா நாட்டுப் பொருளாதாரங்களையும் நெருக்கமாகப் பின்னிப் பிணைத்திருக்கிறது. இதனால், நம்முடைய தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள், சந்தைகள் ஆகிய மூன்று தரப்புமே தங்களைப் பாதுகாக்கும் சுவர்கள் ஏதுமின்றி, ஒன்றையொன்று சார்ந்து இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

மைக்ரோ சிப்புகளின் வேகமும் ஆற்றலும் 2 ஆண்டுகளுக்கொரு முறை இரட்டிப்பாகிறது என்பதே மூரின் அடிப்படை விதி. இதனால் மென்பொருள், கணினி, ரோபோ ஆகியவற்றின் ஆற்றலும் கூடிக் கொண்டே வருகிறது. ஏற்கெனவே, மனிதர்களால் செய்யப்பட்டுவந்த பல வேலைகளை, நுட்பமான கணினிகளே செய்துவிடுகின்றன. பழைய வேலைகளைச் செய்வதுடன் புதிதாகவும் பல வேலைகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த வேலைகளைச் செய்ய தொழில்நுட்பத்திறன் அதிகம் தேவைப்படுகிறது.

நம்முடைய காற்றுவெளியில் கரிப்புகை அதிகரித்து, சுற்றுச்சூழலின் தரத்தைக் குறைக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கத்தால் காடுகள் அழிக்கப்படுகின்றன. நமக் கென்று இருக்கும் ஒரே வீடான இந்தப் புவியும் - நிலம், நீர், காற்றில் சேரும் கழிவுகளால் வேகமாகச் சீர்குலைந்துவருகிறது.

3 பருவ மாறுதல்கள்

சுருக்கமாகச் சொல்வதென்றால், நாம் இப்போது டிஜிட்டல், சூழலியல், புவிசார் பொருளியல் என 3 விதப் பருவ மாறுதல்களுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவேதான் பெரிய நாடுகள் நெருக்குதலுக்கு உள்ளாகின்றன, வலுவற்ற நாடுகள் கண்டனங்களுக்கு ஆட்படுகின்றன. இந்த விஷயத்தில் உடனடித் தீர்வு என்று ஏதும் இல்லையே என்று அமெரிக்கர்கள் மனம் பதைக்கிறார்கள். அவர்களுடைய ஆதங்கம் நியாயமானது. ஆனால், இந்தத் தீர்வானது சாமானிய நடவடிக்கைகளால் ஏற்பட்டுவிடாது. நீண்ட காலம் பிடிக்கும். ஒருவர் மட்டுமல்ல, பலரும் சேர்ந்து செயல்படுத்த வேண்டிய தீர்வு இது. மீட்சி பெறக்கூடிய அடித்தளக் கட்டமைப்பு, கட்டுப்படியாகும் விலையில் சுகாதார நலன், புதிய வேலைகளுக்கு ஏற்ற படிப்பு - பயிற்சி, திறமைசாலிகளை ஈர்க்கக்கூடிய குடியேற்றக் கொள்கை, தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும்படியான நல்ல சுற்றுச்சூழல், கையை மீறாத கடன் சுமை, நல்ல நிர்வாக அமைப்பு ஆகியவை இருந்தால்தான் இந்த வேகத்தை அடைய முடியும்.

பிரேசிலின் கதை

பிரேசில் நாட்டின் இயற்கைச் சூழலுக்கு நிகழ்ந்த சேதத்தைப் பற்றிப் பார்க்கலாமா? ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அக்டோபர் 24-ம் தேதி சாவ்பாவ்லோ நகரிலிருந்து இந்தச் செய்தி நறுக்கை வெளியிட்டது: ‘தென்னமெரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய நகரமும் மிகவும் செல்வந்த நகரமுமான சாவ் பாவ்லோவில் நவம்பர் மாத நடுப் பகுதிக்குள் நல்ல மழை பெய்யாவிட்டால், நகரில் கடும் தண்ணீர்ப் பற்றாக் குறை ஏற்பட்டுவிடும்’ என்பதே அது. பிரேசில் நாட்டின் மிகப் பெரிய நகரமான அதில் சுமார் 2 கோடி மக்கள் வசிக்கின்றனர். கடந்த 80 ஆண்டுகளில் இருந்திராத வகையில் தண்ணீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரி கடந்த ஆண்டு வற்றியது. அதற்குப் பிறகு மழையே இல்லை. இதுதான் முக்கியக் காரணம்.

என்ன, சாவ்பாவ்லோவில் தண்ணீர் இல்லையா? ஆம். பிரேசில் நாட்டின் மூத்த ஆலோசகரான ஜோஸ் மரியா கார்டசோ டா சில்வா இதை விளக்குகிறார்: “செரா டா கான்டரெய்ரா மழைப்பிடிப்புப் பகுதியில் இருந்த இயற்கையான பசுங்காடு அழிக்கப்பட்டுவிட்டது. அங்கு மரங்கள் செழித்து வளர்ந்த காலத்தில், அதைச் சுற்றி ஏற்படுத்தப்பட்ட 6 பெரிய ஏரிகளுக்கு நிறைய நீர் கிடைத்துவந்தது. சாவ்பாவ்லோ நகரின் தண்ணீர் தேவையில் 50%, கான்டரெய்ரா நீர்த் தேக்கம் மூலமே பூர்த்திசெய்யப்பட்டுவந்தது. அங்கிருந்த காட்டை வெட்டி மரங்களை நல்ல விலைக்கு விற்றார்கள். காட்டை அழித்த பகுதியில் விவசாய நிலங்களை ஏற்படுத்தினார்கள். எப்போதும் நீர் வளத்துடன் இருந்த இடங்கள் மண்ணைக் கொட்டி மேடாக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டன. ஓரளவு பசுமையுடன் இருந்த இடம் மேய்ச்சல் காடாக்கப்பட்டது. போதாததற்கு யூகலிப்டஸ் மரங்கள், வணிக நோக்கில் அதிக எண்ணிக்கையில் நடப்பட்டன. மழை குறைந்தது, காற்றில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு வறட்சி ஏற்பட்டது. மழை வந்தால் தண்ணீரை நிரப்பிக்கொள்ள ஏரிகளும், எடுத்துச் செல்ல ராட்சதக் குடிநீர்க் குழாய்களும் தவங்கிடக்கின்றன. மழைதான் வருவதே இல்லை” என்கிறார்.

காடும் இல்லை பசுமையும் இல்லை

இயற்கையான காடுகள் மழை மேகங்களை ஈர்த்துத் தண்ணீரை மழையாக உறிஞ்சி எடுக்கின்றன. அப்படி எடுக்கும் தண்ணீரை ஆறுகளாகவும் ஓடைகளாகவும் மண்ணில் பாய விடுகின்றன. காடுகள் தண்ணீரை மட்டும் பெறுவதில்லை, தண்ணீர் ஓடைகளையும் தூய்மையாகப் பராமரிக்கின்றன. மண் அரிப்பு ஏற்படாமல் காக்கின்றன. தண்ணீரில் அசுத்தம், வண்டல் இல்லாமல் வடிகட்டிச் சுத்தமாகத் தருகின்றன. காட்டை அழித்ததால் மண் தளர்ந்து அரிப்பெடுக்க ஆரம்பித்தது. சிறு மழையில் அவை கரைந்து வெளியேறிவிட்டன. இப்போது காடும் இல்லை, பசுமையும் இல்லை. தண்ணீர் சேர்வதும் குறைந்ததுடன் தண்ணீரின் தரமும் சுவையும் வெகுவாகக் குறைந்துவிட்டன. அரசும் மக்களும் சேர்ந்து இயற்கையை அழித்ததால், மீட்சிபெற முடியாமல் இயற்கை வனம் வறண்ட கட்டாந் தரையாகிவிட்டது. கான்டரெய்ரா பகுதியில் முன்னர் பெய்த மழையில் வெறும் 12% மட்டுமே இப்போது பெய்கிறது.

பிரேசிலின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் தில்மா ரூசஃப்பின் பதவிக் காலத்தில்தான் இந்தக் காடு அழிப்பு தொடங்கி பூர்த்தியடைந்தது. ஆனால், இது தேர்தலில் பெரிய பிரச்சினையாகவே பேசப்படவில்லை. அன்டோனியோ நோப்ரே என்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி வருத்தத்துடன் இதுகுறித்துப் பேசுகிறார். “அமேசான் பகுதியில் காடுகளை அழித்த தாலும், சர்வதேச அளவில் புவிவெப்பம் உயர்வதாலும் மழைக்காடுகள் இருக்கும் பகுதியில்கூட மழைப் பொழிவு குறைந்துவிட்டது. அமேசான் பகுதியில் காற்றிலேயே சாரல் போல மழைத்துளிகள் அடர்த்தியாக விரவிக்கிடக்கும். அதை நாங்கள் ‘பறக்கும் ஆறு’என்றே அழைப்போம். அந்த ஆறு இப்போது இல்லை. எனவேதான், இந்த வறண்ட வானிலை” என்கிறார் அன்டோனியோ நோப்ரே.

மழை பெய்யும் வரை காத்திரு

ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் நிபுணர் பால் கில்டிங், பிரேசிலிலிருந்து மின்னஞ்சலில் இப்படித் தெரிவிக்கிறார்: “பிரேசில் அரசின் மெத்தனத்தைப் பார்க்கும்போது, உலகையே பாதிக்கும் புவிவெப்ப உயர்வுகுறித்து எந்த நாடுமே உளப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை - இனி வாழவே முடியாது என்ற நிலை வரும் வரை - என்றே தோன்றுகிறது. 2 கோடி மக்கள் வாழும் ஒரு நகரின் குடிநீர்ப் பற்றாக்குறை இந்த அளவுக்கு முற்றும்வரை, அந்த அரசு வேறு ஏதோ செயல்களில் கவனம் செலுத்திவந்திருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க என்ன நடவடிக்கை என்று கேட்டால், மழை பெய்யும் என்று காத்திருக்கிறோம் என்ற பதில் வருகிறது. ஏன் இந்தப் போக்கு? காட்டை அழிக்கவிட்டதால்தான் இந்த நிலைமை என்று ஒப்புக் கொண்டால், அதன் விளைவு அரசியல்ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்திவிடும்; மேற்கொண்டு காடுகளை அழிக்கக் கூடாது என்ற கோரிக்கை மக்களிடமிருந்து பலமாக எழக்கூடும். பருவநிலை மாறுதல்களை எதிர்

கொள்ள நாட்டைத் தயார்படுத்தும் பொறுப்பும் அடுத்து வந்து சேரலாம். இவற்றையெல்லாம் தவிர்ப்பதற் குத்தான் ஆட்சியாளர்கள் இயற்கையை அழிப்பதைச் சுட்டிக்காட்டினாலும், காதில் ஏதும் விழாததுபோல பாவனை செய்கிறார்கள்” என்கிறார்.

சந்தை, இயற்கை அன்னை, மூரின் விதியெல் லாம் இப்படி வேகமாக மாறிக்கொண்டே இருந்தால், வாய்ப்புகளும் நெருக்குதல்களும் அதிகமாகிக் கொண்டே வரும். இதற்கேற்ப, பாதிப்புகளை எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறோம்? எப்படி சாதகமாக்கிக் கொள்ளப்போகிறோம்? அவற்றுக்குத் தகுந்தவாறு எப்படி நம்மை மாற்றிக்கொள்ளப்போகிறோம்?

- தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x