Last Updated : 08 Jul, 2019 07:21 AM

 

Published : 08 Jul 2019 07:21 AM
Last Updated : 08 Jul 2019 07:21 AM

இந்திய இடதுசாரிகளுக்கு எதிர்காலம் இருக்கிறதா?

மே மாத மூன்றாவது வாரத்தில் கேரளத்தில் இருந்தேன். மக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய சில நாட்களே இருந்தன. நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, மக்களவையில் இடதுசாரிகளின் மொத்த எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருக்கும் என்பது தெளிவாகியிருந்தது. ஒரு தேசிய சக்தி என்ற நிலையிலிருந்து கட்சி மறையும் நேரத்தில், அந்தக் கட்சி ஆட்சியிலிருக்கும் ஒரே மாநிலத்தில் நான் இருந்தேன். ‘கேரள சாஸ்திர சாகித்திய பரிஷத்’ (கேஎஸ்எஸ்பி) அமைப்பின் மாநாட்டில் பேச அங்கு சென்றிருந்தேன். இந்த அமைப்பு 1960-களின் தொடக்கத்தில் ஆசிரியர்களாலும் ஆர்வலர்களாலும் தொடங்கப்பட்டது. ‘சமூகப் புரட்சிக்கு அறிவியல்’ என்பது அதன் முழக்கம். அறிவியல் இலக்கியத்தை மக்களிடம் கொண்டுசெல்வது, ஆதாரங்கள் அடிப்படையில் சமூகப் பிரச்சினைகளுக்கு அறிவியல்பூர்வமாகத் தீர்வுகளைக் காண்பது என்று சிறப்பாகச் செயல்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பது, மக்களிடையே சுகாதாரப் பழக்கங்களைப் பிரபலப்படுத்துவது தொடர்பாக நூற்றுக்கணக்கான துண்டறிக்கைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் நடந்த மாநாட்டில் கேரளத்தின் எல்லாப் பகுதியிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வந்திருந்தனர். மிகப் பெரிய விருந்து மண்டபத்தில் அனைவரும் ஒன்றாகச் சாப்பிட்டுவிட்டு, தட்டை நாங்களே கழுவிச் சுத்தப்படுத்தினோம். ‘கேஎஸ்எஸ்பி’ கட்சி அமைப்பல்ல; அதேசமயம், சமத்துவத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டது. 1980-களில் அமைதிப் பள்ளத்தாக்கில் வளர்ச்சித் திட்டங்கள் கூடாது என்பதற்காக மார்க்ஸிஸ்ட் கட்சியுடன் மோதலில் ஈடுபட்ட அதன் வரலாற்றை இங்கே ஒரு புரிதலுக்காகச் சொல்லலாம். இம்முறை அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் காங்கிரஸுக்கு வாக்களித்திருக்கக்கூடும் (ஒரு சிலர் பாஜகவுக்கும்கூட). எப்படியிருந்தாலும் இந்த அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும் இடதுசாரி இயக்கத்தின் செல்வாக்கை ஒட்டியது.

இடதுசாரிகள் செய்த பெரிய தவறு

இப்படி ஒரு அமைப்பு வேறு எங்கும் – வங்கத்திலும்கூட – கிடையாது. வங்க மார்க்ஸியம் என்பது இலக்கியமானது, அறிவுஜீவித்தனமானது. மலையாளிகளுடைய மார்க்ஸியம் மண்ணுக்கு ஏற்றது, காரிய சாத்தியமானது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிக மோசமான வீழ்ச்சிக்காலம் 2019 என்றால், அவர்கள் தங்கள் எழுச்சியின் உச்சம் தொட்டது 2004-ல். நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளுக்கு அப்போது 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். இடதுசாரிகள் செய்த பெரிய தவறு 2004-ல் நடந்தது.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சேராமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்ஸிஸ்ட் கட்சியும் தவறிழைத்தன. இடதுசாரிகள் அந்த அரசில் சேர்ந்திருந்தால் கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி போன்ற துறைகளைக் கேட்டுப் பெற்று, மக்களுடைய வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் எவ்வளவோ பணிகளைச் செய்திருக்கலாம். அதன் மூலம் கட்சியின் பெயர் நாடு முழுவதும் பரவியிருக்கும். கம்யூனிஸ்ட்டுகளின் எளிமை, நேர்மை, திறமை போன்றவற்றை மக்கள் உணர்ந்துகொண்டிருப்பார்கள்.

முழு இந்தியமயத்துக்குத் திரும்ப வேண்டும்

சாம்பலிலிருந்து மீண்டும் எழும் நம்பிக்கை இந்திய இடதுசாரிகளுக்கு இருக்குமானால், அவர்கள் முதலில் செய்ய வேண்டியது முழு இந்தியமயத்துக்குத் திரும்புவதுதான். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்

1920-ல் மும்பை மார்க்ஸிஸ்ட் அறிஞர் எஸ்.ஏ.டாங்கே, காந்தியுடன் ரஷ்யத் தலைவர் லெனினை ஒப்பிட்டு, லெனினை அதிகமாகவே புகழ்ந்திருந்தார். அதிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட்டுகள் தங்களுடைய இயக்கத்துக்கான ஆதர்ச நாயகர்களை இந்தியாவை விட்டு வெளிநாடுகளிலிருந்துதான் தேர்வு செய்தார்கள். ஜெர்மானியர்களான காரல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கல்ஸ், ரஷ்யர்களான விளாதிமிர் இலிவிச் லெனின், ஜோசப் ஸ்டாலின், சீனத்தின் மாசேதுங், வியட்நாமின் ஹோசிமின், கியூபரான பிடல் காஸ்ட்ரோ, வெனிசுலாவின் ஹியூகோ சாவேஸ் ஆகியோரை உயர்ந்த பீடத்தில் ஏற்றி ஆராதித்தார்கள். பிரச்சினை என்னவென்றால், அவர்கள் வெளிநாட்டவர்கள் என்பது மட்டுமல்ல, அனைவருமே ஒரு கட்சி ஆட்சி முறையில் நம்பிக்கை வைத்த சர்வாதிகாரிகள்.

லெனின், மாவோ இருவருக்கும் இந்தியாவைப் பற்றியும் இந்திய சமூகத்தைப் பற்றியும் போதிய புரிதல்கள் இல்லை. பல கட்சி ஆட்சி முறையைக் கொண்ட ஜனநாயகத்தின் மீதும் அவர்களுக்குப் பெரிய மரியாதை இல்லை. உள்நாட்டிலேயே உயிரோடு வாழ்ந்த சமகால மாபெரும் சிந்தனையாளர்களான காந்தியையும் அம்பேத்கரையும் விட்டுவிட்டதால், இந்திய யதார்த்தத்திலிருந்து கம்யூனிட்ஸ்டுகள் விலகியே நின்றனர். 1920-களில் கம்யூனிஸம் வளர்ந்தபோது, அதற்கு இணையாக சோஷலிஸ மரபும் இந்தியாவில் வளர்ந்தது இளைய தலைமுறைக்குத் தெரியாது. கமலாதேவி சட்டோபாத்யாய, ராம் மனோகர் லோகியா, ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோர் தங்கள் காலத்தில் வாழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்களைவிட இந்திய சமூகத்தை அதிகமாகப் புரிந்துகொண்டிருந்தார்கள். கமலா தேவி சட்டோபாத்யாயவின் பாலின சமத்துவச் சிந்தனை, ராம் மனோகர் லோகியாவின் வர்க்கச் சிந்தனை, ஜெயபிரகாஷின் அதிகாரப் பரவலாக்கல் கொள்கை ஆகியவை தொடர்பாக டாங்கே, நம்பூதிரிபாடுக்கு இருந்ததைவிட தீவிரமாக, வலுவாக இருந்தன. இதற்குக் காரணம், சோஷலிஸ்ட்டுகள் தங்களுடைய அரசியல் பாடங்களை இந்திய சமூகத்தைக் கூர்ந்து கவனித்ததிலிருந்து படித்தனர். கம்யூனிஸ்ட்டுகள் லெனின் என்ன சொன்னார், ஸ்டாலின் என்ன சொன்னார் என்றே பின்பற்றினார்கள்.

சோஷலிஸம் என்ற அடையாளம்

இந்திய சோஷலிஸ்ட்டுகளிடமிருந்து கம்யூனிஸ்ட்டுகள் பாடம் படிப்பதற்கான காலம் கடந்துவிட்டதா? கம்யூனிஸ்ட்டுகள் மேலும் தங்களை இந்தியமயப்படுத்திக்கொள்ளலாம்; கம்யூனிஸம் என்பதற்குப் பதிலாக சோஷலிஸம் என்ற அடையாளத்தை ஏற்கலாம். 21-வது நூற்றாண்டு மனங்களுக்கு கம்யூனிஸ்ட் என்ற வார்த்தையே அடக்குமுறை, சர்வாதிகாரம் ஆகியவற்றை நினைவுபடுத்துகிறது. சோஷலிஸ்ட் என்ற வார்த்தை மிகவும் சாவதானமாக இருக்கிறது. சோஷலிஸ்ட் என்ற பெயரை மீண்டும் ஏற்று, கட்சியை மக்களிடம் கொண்டு செல்வதற்கான வழிகளை ஆராயலாம். 2019 தேர்தலுக்குப் பிறகு, எல்லா கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஒரே கொடியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும்கூட கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. அப்படி நேரும்பட்சத்தில் அந்த அமைப்புக்குப் புதிய பெயரும் அவசியம். கம்யூனிஸ்ட் என்ற பெயரை விட்டுவிட்டு, ‘ஜனநாயக சோஷலிஸ்ட்’ என்று பெயர் வைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறேன். இடதுசாரி இயக்கத்துக்குப் புத்துயிர் அளிக்க முதல் நடவடிக்கையாக அமையும் என்று நம்புகிறேன். இந்தப் பெயர் மாற்றம் எதற்காக என்றால், இந்திய அரசியலில் இடதுசாரிகளுக்குப் புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்காக – ஏனென்றால், இப்போது அவர்களுக்குக் கடந்த காலம் மட்டுமே இருக்கிறது!

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x