Published : 11 Jul 2019 08:51 AM
Last Updated : 11 Jul 2019 08:51 AM

தினம் ரூ.20,000-க்கு கச்சோடி விற்பவர்களுக்கு வரி கிடையாதா?

கச்சோடி இன்றைக்கு வடஇந்திய உணவு மட்டும் கிடையாது. சென்னையில் தேவி திரையரங்குக்குப் பின்புறமுள்ள கச்சோடி கடைக்குப் போனால், எந்நேரமும் 20 பேர்  முட்டிமோதிக்கொண்டிருப்பார்கள். தமிழ்நாட்டிலேயே இப்படி என்றால் உத்தர பிரதேசத்தில்? அலிகரில் உள்ள முகேஷ் கச்சோடி கடை ரொம்பப் பிரபலம். சமீபத்தில், இங்கே ஜிஎஸ்டி அதிகாரிகள் சிலர் கச்சோடி சாப்பிடப்போயிருக்கிறார்கள். கடை வியாபாரத்தைக் கவனித்தவர்கள் மலைத்துப்போய்விட்டார்கள். ஒரு நாள், தூரத்திலிருந்தபடி கடையை நாள் முழுக்கக் கவனித்தவர்கள் பிறகு, ஒரே சமயத்தில் 12 அதிகாரிகளோடு போய் சோதனையிட்டிருக்கிறார்கள். கடை உரிமையாளர் மக்கன் லால் (70) அவரது மகன்கள் முகேஷ் (40), பகவான் தாஸ் (35), பண்டி (29) மற்றும் கடைப் பையன்கள் இருவர் வேலையில் இருந்திருக்கின்றனர். எண்ணெய்ச் சட்டியில் நூறு கச்சோடிகள் வெந்துகொண்டிருந்திருக்கின்றன. ஒரு கச்சோடியின் விலை ரூ.24, தயிர்-வெங்காயம் சேர்த்த ரைதாவுக்கு ரூ.5 தனி. இதைத் தவிர ஒரு நாளைக்கு எவ்வளவு கோதுமை-மைதா, உருளைக்கிழங்கு, எண்ணெய், கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன, ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கச்சோடி தயாரிப்பதென்றால் மொத்தம் எவ்வளவு கிடைக்கும் என்றெல்லாம் கணக்குப் போட்டவர்கள் ஒரு நாள் விற்பனை குறைந்தது ரூ.20,000; அதாவது, வருஷத்துக்குக் குறைந்தது ரூ.60 லட்சம் வியாபாரம்.

கடையிலிருந்து ஒரு கிமீ தொலைவில்தான் மக்கன் லாலின் வீடு இருக்கிறது. அங்கே போனவர்களுக்கு இன்னொரு ஆச்சரியம். வெறும் 225 சதுர அடி வீடு. மிகச் சிக்கனமான வாழ்க்கை. மக்கன் லால் குடும்பத்தின் சொத்துகளை இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். “ரூ.60 லட்சம் வியாபாரம் என்றால், குறைந்தது ரூ.20 லட்சம் மிஞ்சும். குடும்ப வியாபாரம் என்பதால் சம்பளமும் மிஞ்சும். ஆனால், வரி கட்டுவதில்லை. ஜிஎஸ்டி முதல் வருமான வரி வரை சேர்த்தால் அரசுக்குக் குறைந்தது ரூ.5 லட்சம் வரை இழப்பு. ஆனால், இவர்களையெல்லாம் விட்டுவிடும் இந்திய அரசு, மாதச் சம்பளக்காரர்களை வாட்டி வதைக்கிறது” என்று புலம்புகிறார்கள் விவரமறிந்த அலிகர்காரர்கள். ஒரு கச்சோடிக் கடையே ரூ.5 லட்சம் வரி ஏய்க்கிறது என்றால், நாடு முழுக்க எவ்வளவு வரி ஏய்ப்புகள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x