Published : 03 Jul 2019 04:44 PM
Last Updated : 03 Jul 2019 04:44 PM

தைராய்டு, கல்லீரல் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை: புற்றுநோய் சிகிச்சை நிபுணர் பி.குகன்

தைராய்டு, கல்லீரல் புற்றுநோய்க்கு இலக்கு நோக்கிய சிகிச்சை முறையுடன், புதிதாக வந்துள்ள சிகிச்சை முறை பெரிதும் பலனளிக்கும் என்கிறார் கோவையைச் சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.குகன்.

பொதுவாக நோய் ஏற்பட்டாலே நமது மன வலிமை கொஞ்சம் குறையும். குறிப்பாக, புற்றுநோய் பாதிப்பு என்றால் நிலைகுலைந்து போய்விடுவோம். ஆனாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த நிலையில், தைராய்டு, கல்லீரல் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை பெரிதும் பலனளிக்கும் என்கிறார் டாக்டர் பி.குகன். அவரை சந்தித்தோம்.

“கழுத்தின்  பின் பகுதியில் சிறிய அளவில் உள்ள ஒரு சுரப்பிதான் தைராய்டு. இதில், புற்றுநோய் ஏற்படுவது அரிதானது. இந்தியாவில் 14,000 நோயாளிகளில் ஒருவருக்கே இப்புற்றுநோய் கண்டறியப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் புற்றுநோய்களில் இதுவும் ஒன்றாக மாறியுள்ளது. அதேபோல, எல்லா தரப்பினருக்கும் பாதிப்பு உள்ளது.

தைராய்டு புற்றுநோய்க்கு ஆரம்ப நிலையில் எவ்வித அறிகுறியும் இருப்பதில்லை. கழுத்தின் முன்பகுதியில் சிறிய கட்டி, குரலில் மாறுதல், பேசுவதில் சிரமம், உணவு, தண்ணீர் விழுங்க சிரமம், மூச்சுத் திணறல், தொண்டையில், கழுத்தில் வலி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள். இதில், காம்பு வடிவம், நுண்ணறை, திசுக்களின் தன்மை மாற்றம் என பல வகைகள் உள்ளன. எனினும், காம்பு வடிவம், நுண்ணறை வகைதான் 90 சதவீதம் உள்ளன. இவற்றை ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் எளிதாக குணப்படுத்த முடியும். மெடுலரி, கார்சினோமா புற்றுநோய் வகைகள்  3 முதல் 4 சதவீதம் மட்டுமே ஏற்படுகின்றன. திசுத் தன்மை புற்றுநோய் 1 முதல் 2 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த வகையை கட்டுப்படுத்துவதும், சிகிச்சை அளிப்பதும் கடினமானது.

தைராய்டு புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, அயோடின் கதிரியக்க சிகிச்சை, வெளியிலிருந்து கதிரியக்க சிகிச்சை மற்றும் இலக்கு  நோக்கிய சிகிச்சை என பல முறைகள் உள்ளன. பல நோயாளிகளுக்கு தைராய்டு சுரப்பியை அகற்றி,  மாற்றாக ஹார்மோன் செலுத்தி சிகிச்சை தரப்படுகிறது. சில வகை தைராய்டு புற்றுநோய்,  அருகில் உள்ள உறுப்புகளையும் பாதிக்கிறது. இவை, அயோடின் கதிரியக்கம், இலக்கு நோக்கிய சிகிச்சை முறைகளுக்கு கட்டுப்படுவதில்லை.

மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி!

இலக்கு நோக்கிய சிகிச்சையுடன்,  புதிய மருந்து சிகிச்சை பலனளிக்கிறது. மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை  `லேன்விட்டானிப்’ என்ற அமிலநொதியைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்க அங்கீகாரம் அளித்துள்ளது.  இது, தற்போதைய சிகிச்சை முறையில் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட சிகிச்சையாக உள்ளது. தைராய்டு புற்றுநோய் செல்கள் மீது அதிக அளவில் செயலாற்றும் தன்மையை கொண்டதாகவும்  உள்ளது.தைராய்டு புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து  சிகிச்சை அளித்தால், மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.  தொடர்ந்து  மருத்துவப் பரிசோதனை மற்றும்  வாழ்நாள் முழுவதும்  கண்காணிப்பு அவசியம்.

கல்லீரல் புற்றுநோய்...

அதிவேகமாகப் பரவும் புற்றுநோயில் 2-வது  இடம் வகிக்கிறது கல்லீரல் புற்றுநோய். சர்வதேச அளவில் ஒவ்வோர் ஆண்டும் 7,50,000 பேர் இதனால் இறக்கின்றனர். அதேபோல, ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 7,80,000 நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.

இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதும் கடினமானது. எனினும், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால்தான், குணப்படுத்துவது எளிதாகும். அறிகுறிகளைக் கண்டறிந்து, பக்க விளைவுகள் இல்லாமல் சிகிச்சையளிப்பது முக்கியம்.

நோய் முற்றி, கல்லீரல் சரிவர இயங்காத  நிலையில், வலி நிவாரண சிகிச்சை அளித்து, பல்வேறு சிகிச்சை வாய்ப்புகளை பரிசீலிக்கலாம்.

கல்லீரல் நன்றாக செயல்படும்போதே, ஆரம்ப கட்டத்தில் கல்லீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டால், மேலும் பரவாமல் தடுக்க முடியும்.  அறுவைசிகிச்சையால் கட்டியை அகற்றி, கல்லீரல் பாதிப்பை தவிர்க்கலாம்.  புற்றுநோய் பரவுமானால், அதன் பகுதியை தனியாகப் பிரித்து, சிகிச்சை அளிப்பது இயலாது.

சுருங்கும் தன்மை அல்லது கட்டியின் வளர்ச்சி குறைவாக இருக்கும்போது, கதிரியக்க சிகிச்சை அல்லது மருந்துடன் கூடிய வெப்ப கதிரியக்க  சிகிச்சை மேற்கொள்ளலாம். இது புற்றுநோய் செல்களை அழிக்கும்.

doctorjpg

கீமோதெரபி சிகிச்சை முறையில், ரத்த நாளத்தில் மருந்தை செலுத்தி, குறைந்த நாட்களுக்கு ரத்த ஓட்டத்தை  தடைசெய்து,  கட்டியின் வளர்ச்சியை தடுக்கலாம். கட்டிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடை செய்வதால், புற்றுநோய் செல்களை அழிக்க முடியும்.

இவ்வாறு மருந்தை செலுத்தி சிகிச்சை அளிக்க இயலாத சூழ்நிலையில், இலக்கு நோக்கிய சிகிச்சை மேற்கொள்ள முடியும்.  புற்றுநோய் செல்களை வளரச் செய்யும் பகுதியில் மருந்தை செலுத்தி, புற்றுநோய் மரபணு, புரதம் அல்லது திசுக்களைக் கட்டுப்படுத்த முடியும். புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுத்து, நலமான செல்களில் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் பாதுகாக்கலாம்.

அமில நொதி அழிப்பானாக செயல்படும் `லென்விடினிப் மெசிலேட்’ வயது வந்த நோயாளிக்கு ஒருமுறை சிகிச்சையாக தரப்படுகிறது.  இந்த மருந்து பன்முக செயல்பாடுகளைக் கொண்டது. புற்றுநோய் செல்கள் மீது செயல்பட்டு, அதை  அழிக்கவல்லது. இந்த புதிய மருந்தால் நோயாளிகள் பலன் பெறுவர். பாதுகாப்பான முறையில் புற்றுநோயைக் கையாளவும், புற்றுநோயின் தீவிரத்தைக் குறைப்பதிலும் இந்த சிகிச்சை முறை பலனளிக்கும்.

பொதுமக்களிடையே கல்லீரல் குறித்த விழிப்புணர்வும், சரியான சமயத்தில் முன் பரிசோதனை செய்வதும், அறிகுறிகள் அறிந்தவுடன் சிகிச்சை மேற்கொள்வதும் அவசியம். இவை, புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி செய்வதுடன், இறப்பவர்களின் எண்ணிக்கையையும் குறைக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x