Last Updated : 04 Jul, 2019 09:14 AM

 

Published : 04 Jul 2019 09:14 AM
Last Updated : 04 Jul 2019 09:14 AM

கிராமப்புற அமெரிக்கா ட்ரம்ப் ஆட்சியில் எப்படிச் சீரழிகிறது?

அமெரிக்க வேளாண் துறையின் பொருளாதார ஆய்வு சேவையிலிருந்து, பொருளாதார நிபுணர்கள் விலகி ஓடிக்கொண்டிருப்பதாக ‘பொலிட்டிக்கோ’ இதழ் தெரிவிக்கிறது. சில வாரங்களுக்கு முன் ஒரே நாளில் ஆறு பேர் ராஜிநாமா செய்திருக்கிறார்கள். காரணம்? ட்ரம்ப்பின் கொள்கைகளைத் துதிபாடாத அறிக்கைகளை வெளியிட்டதால் தாங்கள் தண்டிக்கப்படுவதாக அவர்கள் உணர்ந்ததால்தான் இந்நிலை. ஆனால், அந்த அறிக்கைகள் எல்லாம் உண்மையைப் பிரதிபலிக்கின்றனவே தவிர வேறெதுவும் இல்லை.

கிராமப்புற அமெரிக்கா என்பது ட்ரம்ப்பின் பிரதான அடித்தளம். இன்னும் சொல்லப்போனால், கிராமப்புறங்கள்தான் ட்ரம்ப் மொத்த நேர்மறை ஆதரவு மதிப்பை அமெரிக்க அளவில் பெற்றிருக்கும் இடங்கள். ஆனால், ட்ரம்ப்பின் கொள்கை முடிவுகளால் அதிக சேதங்களை எதிர்கொள்ளும் பகுதிகளும் அவையே.

அப்படியென்றால் ட்ரம்ப்பிஸம் என்றால்தான் என்ன?

2016-ல் ட்ரம்ப் தன்னை வித்தியாசமானதொரு குடியரசுக் கட்சிக்காரராகக் காட்டிக்கொண்டார். ஆனால், நடைமுறையில் அவரது பொருளாதாரச் செயல்பாடு என்பது ஜி.ஓ.பி. அடிப்படையிலானது: பெருநிறுவனங்களுக்குப் பெருமளவிலான வரிக்குறைப்பு, அதே நேரத்தில் சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னலைச் சிதைப்பது. இதுதான் ட்ரம்ப்பிஸம்! இந்தக் கொள்கைகள் இன்று அளவுக்கதிகமாக கிராமப்புற அமெரிக்காவைத்தான் பாதித்துக்கொண்டிருக்கின்றன. ட்ரம்பின் வரிக்குறைப்பு விவசாயிகளைப் பெரிதும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், அவர்கள் பெருநிறுவனத்தினர் இல்லை, அவர்களில் பணக்காரர்கள் மிகக் குறைவு.

ட்ரம்ப் தரப்பு கோபத்தைத் தூண்டிவிட்ட வேளாண் துறை பொருளாதார நிபுணர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கைகளுள் ஒன்று, விவசாயிகளுக்கு வரிச்சலுகை கொடுக்கப்பட்டாலும்கூட அதன் பலன்கள் பெருமளவுக்கு 10% பணக்காரர்களுக்கே போய்ச் சேர்கின்றது என்றும் ஏழை விவசாயிகளுக்கு ஏற்கெனவே உள்ளதைக் காட்டிலும் சற்று வரி உயர்ந்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டுவது இங்கே குறிப்பிடப்பட வேண்டியது. ஆக, பாதுகாப்பு வலைப்பின்னல் மீதான தாக்குதல் என்பது பாதுகாப்புத் திட்டங்களை வெகுவாகச் சார்ந்திருக்கும் கிராமப்புற அமெரிக்காவுக்குப் பெருமளவுக்குத் தீமை விளைவிப்பதாக மாறியிருக்கிறது. மலிவுவிலை உணவு அட்டைகளை அதிக அளவில் பெறக்கூடிய மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் 100 கவுன்ட்டிகளில் 85 கவுன்ட்டிகள் கிராமப்புறங்களில் இருக்கின்றன. மீதமுள்ளவை சிறிய நகர்ப்புறங்களில் இருக்கின்றன. ட்ரம்ப் நசுக்க நினைக்கும் ‘மெடிக்எய்ட்’ என்ற மருத்துவ உதவித் திட்டத்தால் கிராமப்புறங்களில் பெரும் பலன் இருந்ததும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

சரிந்த சந்தை

கிராமப்புற அமெரிக்கர்கள் தனிப்பட்ட முறையில் அரசு உதவியைப் பெறவில்லை என்றாலும், இந்தத் திட்டங்களெல்லாம் அவர்களுக்கு மிகவும் முக்கியமானவை. பாதுகாப்பு-வலைப்பின்னல் திட்டங்கள் அதிகாரத்தைக் கொண்டுவருகின்றன. இதனால், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க ஏதுவாகிறது. ‘மெடிக்எய்ட்’ என்பது கிராமப்புற மருத்துவமனைகள் உயிர்த்திருப்பதற்கு முக்கியமான காரணி; அது இல்லையென்றால் கிராமப்புற அமெரிக்கர்களுக்கான மருத்துவ உதவிகள் பெரிதும் தடைப்பட்டுவிடும்.

உள்நாட்டுத் தொழில்களுக்கான பாதுகாப்புக் கவசத்தை எப்படிப் பார்ப்பது? அமெரிக்க விவசாயத் துறை பெரிதும் வெளிநாட்டுச் சந்தைத் தொடர்பையே சார்ந்திருக்கிறது, அமெரிக்க சோயாபீன்ஸ் உற்பத்தியாளர்கள், தங்கள் உற்பத்தியில் 50% ஏற்றுமதி செய்கிறார்கள்; கோதுமை விவசாயிகள் தங்கள் உற்பத்தியில் 46% ஏற்றுமதி செய்கிறார்கள். அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கான முக்கியமான சந்தையாக சீனா உருவெடுத்திருக்கிறது. அதனால்தான் வணிகம் தொடர்பாக ட்ரம்ப் சமீபத்தில் கோபமாக இட்ட ட்விட்டர் பதிவினால் - விரிவான வணிகப் போருக்கான சாத்தியத்தைத் தோற்றுவித்ததாகக் கருதப்படும் அந்தப் பதிவினால் - தானியச் சந்தையானது 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த அளவு வணிகத்தைக் கண்டிருக்கிறது.

விவசாயிகள் மீதான அச்சுறுத்தல் என்பது ட்ரம்ப் விதித்திருக்கும் ஏற்றுமதி/ இறக்குமதி வரிகளுக்கு வெளிநாட்டினர் மேற்கொள்ளக்கூடிய பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பானது மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேசப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இறக்குமதி வரி என்பது போகப்போக ஏற்றுமதிகள் மீதான வரியாகவும் ஆகிவிடும். ஏனெனில், அவற்றால் டாலரின் மதிப்பு உயர்கிறதல்லவா! ஆக, உலகம் வணிகப் போரில் இறங்கினால் அமெரிக்க இறக்குமதிகளும் சரி, ஏற்றுமதிகளும் சரி சுருங்கிப்போய்விடும் – இதில் விவசாயிகள்தான், அதாவது அமெரிக்காவின் மிக முக்கியமான ஏற்றுமதியாளர்கள், பெருமளவில் இழப்புக்குள்ளாவார்கள்.

ட்ரம்ப்பும் சில பொய்களும்

சரி, இப்படியெல்லாம் இருந்தும் கிராமப்புறத்தினர் ட்ரம்ப்பை ஏன் ஆதரிக்கிறார்கள்? இதில் கலாச்சாரம் தொடர்பான காரணங்கள் நிறைய உண்டு. குறிப்பாக, அகதிகள் மீது நகர்ப்புற வாக்காளர்களுக்கு இருக்கும் வெறுப்பைவிட, கிராமப்புற வாக்காளர்களுக்கு இருக்கும் வெறுப்பு அதிகம். அதிலும் குறைந்த அளவே அகதிகள் இருக்கும் சூழலில் இந்த வெறுப்பு அதிகம். பரிச்சயமில்லாத நிலையே வெறுப்பை வளர்க்கிறது. கடற்கரை நகரங்களைச் சேர்ந்த மேல்தட்டினரால் தாங்கள் அவமதிக்கப்படுவதாகவும் கிராமப்புற வாக்காளர்கள் உணர்கிறார்கள். ட்ரம்ப் இந்தக் கோபத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.

தங்கள் ஆதரவுத் தளத்தை அப்படியே தக்கவைக்க ட்ரம்ப் ஆதரவாளர்கள் செய்வது ஒன்றே ஒன்றைத்தான்: பொய்கள். உயிரற்ற பொய்களை மீண்டும் மீண்டும் சொல்வது. சமீபத்திய ஓர் உதாரணம், சொத்துவரி மீதான தனது வரிக்குறைப்பு நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு உதவியிருக்கின்றன என்று சில வாரங்களுக்கு முன்பு ஆரவாரமான ஒரு பேரணியில் ட்ரம்ப் தெரிவித்தார். இதுவும் முழுக்க முழுக்கப் பொய். 2017-ல் 80 பண்ணைகளும் சில தொழிலமைப்புகளுமே சொத்துவரி செலுத்தியிருக்கின்றன. பிரித்துக்கொண்ட குடும்பப் பண்ணைகள் சொத்துவரி செலுத்தியிருக்கின்றன என்பது முழுக்கக் கட்டுக்கதையே. இன்னொரு விடை என்பது உண்மையை ஒடுக்குவதில் இருக்கிறது. ஆகவேதான், தங்கள் வேலையைச் செய்ய முயன்ற வேளாண் துறை பொருளாதார நிபுணர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

இதில் விஷயம் என்னவென்றால் உண்மை மீதான தாக்குதலால் ஏற்படும் பின்விளைவானது அரசியலைத் தாண்டியும் போகக் கூடியது. வேளாண் துறையின் பொருளாதார ஆய்வு என்பது யாரெல்லாம் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்குத் துதிபாடுவதற்கானதல்ல. அந்தத் துறை தனது நோக்கங்களைப் பற்றிய குறிப்புகள் சொல்வதுபடி அதன் பணியானது “முடிவுகளை எடுப்பதில் பொதுமக்களுக்கும் தனியாருக்கும் உள்ள திறனை மேம்படுத்தும் வகையில் உயர்தரமான, விருப்புவெறுப்பற்ற பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்வதே.” தற்போது, அந்தச் சேவையின் திறன் வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டது. ஏனெனில், உண்மையைச் சார்ந்த கொள்கை மீது ட்ரம்ப்பின் நிர்வாகத்துக்கு நம்பிக்கை இல்லை. அடிப்படையில் அதற்கு உண்மைத் தகவல்களின் மீது நம்பிக்கையே கிடையாது. அவ்வளவுதான். எல்லாமே அரசியல்ரீதியிலானதுதான். இந்தத் தரக்குறைவுக்கு யார் விலை கொடுப்பது? கிராமப்புற அமெரிக்கர்கள்தான். ஆக, ட்ரம்ப்பின் மிகப் பெரிய ஆதரவாளர்கள்தான் அவரது மிகப் பெரிய பலிகடாக்கள்!

நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x