Published : 08 Jul 2019 08:48 AM
Last Updated : 08 Jul 2019 08:48 AM

கழகமா? குடும்பமா?

தமிழகத்தில் மேலும் ஒரு அரசியல் வாரிசு முகம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். அதுவும், வாரிசு அரசியலுக்குப் பெயர்பெற்ற கருணாநிதியின் குடும்பத்திலிருந்து. திரைப்படங்களில் விடலைத்தனமான வேடங்களாலும் நகைச்சுவைக் காட்சிகளாலும் கவனத்தை ஈர்த்துவந்த உதயநிதி, அடுத்தகட்டமாக அரசியலிலும் தீவிரமாக ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கிறார். விடலைத்தனத்துக்கான இடம் அல்ல அரசியல்; அங்கே விடலைத்தனம் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் நகைச்சுவையானதாக்கிவிடக்கூடும். ஏனென்றால், தனது அரசியல் நுழைவு தொடர்பில் சில மாதங்களுக்கு முன் உதயநிதி தெரிவித்த கருத்துகள் அவருடைய அரசியல் புரிதல் தொடர்பாக ஆழமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் வழிவகுக்கின்றன.

மக்களாட்சி நாட்டில், எந்தவொரு குடிமகனுக்கும் ஒரு கட்சியில் சேரவும், ஒரு கொள்கையை முன்வைக்கவும் உரிமை இருக்கிறது. உதயநிதியின் அரசியல் வருகையும் அப்படி இருந்திருந்தால், ஒரு இளைஞரின் அரசியல் நுழைவு என்ற அடிப்படையில் அது வரவேற்கத் தகுந்ததாக அமைந்திருக்கும். ஆனால், அவரோ அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்கச்சொல்லி எனது ஆதரவாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள் என்று கட்சியில் பதவி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பேசியவர்.

கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன்

தனது அரசியல் பிரவேசத்துக்கும் அடுத்து தலைமைப் பதவி நோக்கி நகர்வதற்குமான தகுதிகள் அல்லது தார்மீக உரிமைகள் என்பதுபோல, “நான் கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன், எனது குடும்பமே அரசியல் குடும்பம்” என்று குறிப்பிட்டார் உதயநிதி. அரசியலை எவ்வளவு எளிமையாகப் புரிந்துகொள்ள அவர் முற்படுகிறார் என்பதே அதன் மூலம் வெளிப்பட்டது.

குடும்ப - வாரிசு அரசியல் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம் ‘கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல’ என்ற பதிலைச் சலிக்கச் சலிக்கச் சொல்லியவர்கள் அவருடைய தாத்தாவும் அப்பாவும். சங்கர மடத்தின் மடாதிபதிகள்கூட வெளியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; ஒரே குடும்பத்திலிருந்து வரவில்லை.

ஸ்டாலின் தன்னுடைய சொந்த அரசியல் ஆர்வத்தில் அரசியலுக்குள் வந்தவர். அவரைத் தீவிரமாகக் களத்தில் தள்ளியது நெருக்கடிநிலைக் கைதும் சிறை வாழ்க்கையும். தலைமைப் பதவியை நோக்கி நகர 50 ஆண்டுகள் அவர் பயணித்திருக்கிறார். ஒரு தலைவரின் குடும்ப உறுப்பினர் என்பதாலேயே யாருக்கும் அடுத்தகட்ட அரசியல் தலைவராகிவிடும் தகுதி இயல்பாக அமைந்துவிடுவதில்லை என்பதற்குத் தன்னுடைய அப்பாவிடமிருந்தும் பெரியப்பாக்களிடமிருந்துமே உதயநிதி பாடம் கற்றுக்கொள்ளலாம்.

உதயநிதியின் பாதை யாருடையது?

கருணாநிதியின் குடும்பத்திலிருந்து திட்டமிட்டு திரைப்பட நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர், காலவோட்டத்தில் காணாமல்போன வரலாறு இருக்கிறது. அதே தகுதியின் அடிப்படையில் திடுதிடுப்பென்று அரசியலுக்குள் நுழைக்கப்பட்டு, நாட்டின் உயரிய பதவி ஒன்றில் அமரவைக்கப்பட்டவர், தமது பொறுப்புகளை ஏற்று சரிவரச் செய்யாமல் கட்டாய அரசியல் ஓய்வுக்கு அனுப்பப்பட்ட வரலாறும் இருக்கிறது. நெடுங்கால உழைப்பு, காத்திருப்பின் வழிவந்த ஸ்டாலினை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்னமும்கூட தமிழக முதல்வர் என்னும் பதவி அவருக்கு நிறைவேறாத கனவாகத்தான் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அப்படியென்றால், உதயநிதி யாருடைய பாதையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்? யாருடைய பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்?

திமுகவின் பலமே அதன் மாவட்டச் செயலாளர்கள்தான். உள்ளூர் அரசியலில் ஒவ்வொருவரும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தபோதிலும் கட்சியின் வலுவான அடித்தளக் கட்டமைப்பால் அவர்கள் திமுகவைத் தாங்கி நிற்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. திராவிட இயக்கத்தின் வரலாற்றை அறிந்தவர்கள், அரசியல் அனுபவம் நிறைந்தவர்கள், ஒரு கட்சியை நடத்துகிற அளவுக்குத் தகுதியும் திறமையும் கொண்டவர்கள் என்று சொன்னாலும்கூட அது மிகையில்லை. அவர்கள் உதயநிதியின் அரசியல் நுழைவை எப்படிப் பார்க்கிறார்கள் என்றொரு முக்கியமான கேள்வியும் எழுகிறது.

திமுக இளைஞரணித் தலைவராக உதயநிதியை நியமிக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியதாலேயே அப்படியொரு முடிவை எடுக்க நேர்ந்தது என்பதுபோன்ற ஒரு பாவனையை உருவாக்கியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அதுதான் உண்மை என்பதுபோல அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கட்சிப் பொறுப்பாளர்கள் அறிவாலயத்துக்கு வந்து, உதயநிதி பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை இளவரசருக்குப் பட்டம் சூட்டும் விழாவைப் போலக் கொண்டாடியிருக்கிறார்கள். மாநில அளவில் தலைவர் குடும்பமே தலைமையில் தொடரட்டும், மாவட்ட அளவில் நமது மகன்கள் ஆளட்டும் என்று அவர்களும் முடிவெடுத்துவிட்டார்களோ என்னவோ? ஆனால், இதே போன்ற மாவட்டச் செயலாளர்கள்தான் முன்பு கருணாநிதியால் ஒரு மகன் கதாநாயனாக்கப்பட்டபோதும், இன்னொரு மகன் மத்திய மந்திரியாக்கப்பட்டபோதும் அணிசேர்ந்து ஆதரித்தவர்கள் என்பதை அவர்கள் மறந்தாலும், ஸ்டாலின் மறக்கலாமா?

குலையும் தார்மீகம்

உதயநிதி அரசியலை விரும்பலாம், அரசியல் தலைமையையும்கூட விரும்பலாம். எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர் எங்கிருந்து தொடங்கியிருக்க வேண்டும்? கட்சியில் ஒரு அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து தனது அரசியல் பயணத்தை அவர் தொடங்கியிருக்க வேண்டும். கட்சியில் படிப்படியாகப் பதவிகள் நோக்கி நகர முடிவெடுத்திருக்க வேண்டும். நீடித்த உழைப்பின் வழி ஒவ்வொரு நிலையிலும் தன்னை உயர்த்திக்கொண்டு உயரங்களை அடைந்திருந்தால் அவரை யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனால், கட்சித் தலைவரின் மகன் என்ற ஒரே அஸ்திரத்தால் இன்று கட்சியின் இளைஞரணி பதவியைப் பெற்றிருக்கிறார். இதில் எந்தப் பெருமையையும் அவர் அடைய முடியாது.

ஆரம்பத்திலேயே தார்மீகத்தைக் குலைத்துக் கட்சிக்குள் மேலேறும் ஒருவர் கீழே தவறிழைக்கும் எவரையும் நாளை கேள்வி கேட்கவும் முடியாது. “கடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்” என்று ஒருமுறை பேட்டி கொடுத்திருந்தார் ஸ்டாலின். கருணாநிதி தன் கடைசிக் காலத்தில் அனுமதித்த, ஊக்குவித்த குடும்ப அரசியல் சீரழிவுகளைத்தான் அப்படி அவர் குறிப்பிட்டிருந்தார். இன்றைக்கு அதே ஸ்டாலின் தன் பங்குக்கு ஒரு தவறைச் சேர்த்திருக்கிறார்.

கழகம் ஒரு குடும்பம் என்றார் அண்ணா. குடும்பம் ஒரு கழகம் என்கிறார்கள் ஸ்டாலினும் உதயநிதியும். சரிதான், அடுத்த இளைஞரணித் தலைவர் யார்? இன்பநிதியா?

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x