Published : 05 Jul 2019 08:22 AM
Last Updated : 05 Jul 2019 08:22 AM

360: பெயர் மாற்றத்துக்காகப் போராடும் வங்கம்

பிரிட்டிஷ் காலத்தில் கிழக்கு வங்கம், மேற்கு வங்கம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்ட வங்கத்தின் பெயரைச் சுதந்திரத்தின்போதே இந்தியா மாற்றியிருக்க வேண்டும்; ஏனென்றால், பிரிவினையின்போது பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்ட கிழக்கு வங்கம், பின்னாளில் கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்படலாயிற்று. அடுத்து, 1971-ல் பாகிஸ்தானிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ‘வங்கதேசம்’ என்று தன் பெயரை அது சூட்டிக்கொண்ட பிறகேனும் மேற்கு வங்கத்தின் பெயரிலுள்ள ‘மேற்கு’ தூக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், கிழக்கு வங்கம் என்ற ஒன்று இல்லாமல்போய்விட்டது.

ஆகையால், எங்கள் மாநிலத்தின் பெயரை வங்கம் என்று மாற்றுங்கள் என்று நெடுங்காலமாகக் குரல் எழுப்புகிறார்கள் வங்கத்து மக்கள். 1999-ல் இதற்குக் காதுகொடுத்த ஜோதிபாசு தலைமையிலான மாநில அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. மம்தா முதல்வராகப் பொறுப்பேற்றதும், இந்த விஷயத்தில் கூடுதல் தீவிரம் காட்டினார். 2011, 2016 என்று இரு தருணங்களில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றியவர், 2018-ல் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார். இதற்குச் சமீபத்தில் அனுமதி மறுத்து பதில் அளித்திருக்கும் மத்திய அரசு, “வங்கம் (பங்களா) என்ற பெயரும் வங்கதேசம் (பங்களாதேஷ்) என்ற பெயரும் ஒரே மாதிரி இருப்பதால் சர்வதேச அரங்கில் இது பெயர்க் குழப்பத்தை ஏற்படுத்தும்” என்று காரணம் குறிப்பிட்டிருக்கிறது. “வங்கத்து மக்கள் உணர்வை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லியிருக்கும் மம்தா, இதை மக்கள் பிரச்சினையாக்கும் முடிவில் இருக்கிறார். 2019-ல் மாநிலங்களின் அதிகாரம் இந்நிலையில் இருக்கிறது என்றால், 1969-ல் ‘மெட்ராஸ் மாநிலம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்றாக்க நம் முன்னோடிகள் பட்ட கஷ்டத்தை உணர முடிகிறதா?

1956-ல் தியாகி சங்கரலிங்கம் உண்ணாவிரதமிருந்து உயிரிழந்ததிலிருந்து எழுச்சி பெற்ற முழக்கம் அது. இந்த ஆண்டு ‘தமிழ்நாடு’ தன் பூர்வ பெயரைத் தன் தலைமகன் அண்ணா வழியே நிலைநாட்டிக்கொண்ட ஐம்பதாவது ஆண்டு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x