Published : 04 Jul 2019 09:20 AM
Last Updated : 04 Jul 2019 09:20 AM

360: பெருநிறுவனங்கள் சிகரம் ஏற தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் பிஎஸ்என்எல்

பெருநிறுவனங்கள் சிகரம் ஏற தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் பிஎஸ்என்எல்

கன்னியாகுமரியில் தொடங்கி இமயமலை வரை பிரமிக்கத்தக்க வலைப்பின்னலைக் கொண்ட உலகின் பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்த பிஎஸ்என்எல் இன்று தள்ளாடிக்கொண்டிருக்கிறது. ஜூன் மாத சம்பளம் ரூ.850 கோடிக்கு வழி தெரியாமல் அரசாங்கத்திடம் கையேந்தும் நிலைக்கு நிறுவனம் கீழே தள்ளப்பட்டுவிட்டது. “சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஏராளமான அவலங்கள் அரங்கேற்றப்படுகின்றன; 1.75 லட்சம் ஊழியர்களைக் கொண்ட பெரும் நிறுவனத்தை எப்படி நிர்வகிப்பது என்ற தொலைநோக்கின்மையும், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசின் போக்குகளுமே முக்கியமான காரணங்கள்” என்கிறார்கள் ஊழியர்கள். எப்போது வேண்டுமானாலும் இழுத்து மூடப்படலாம் என்ற அச்சமும் அவர்களிடம் கவிந்திருக்கிறது. தொலைத்தொடர்புத் துறையின் பொற்காலத்தில் இருக்கிறோம். ஆனால், ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தைக் காப்பாற்ற முடியவில்லை. எப்பேர்ப்பட்ட ஒரு அரசு நம்முடையது!

திரிணமூல் காங்கிரஸை உலுக்கும் வெட்டு துட்டு விவகாரம்

வங்கத்தில் மம்தாவுக்குப் புதிய தலைவலியாக முளைத்திருக்கிறது ‘கட் மணி’ விவகாரம். அதாவது, அரசுத் திட்டங்களைப் பெற்றுத்தருவதற்காக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர்கள், மக்களிடமிருந்து பெற்ற ‘வெட்டு துட்டு’ விவகாரம்! அரசு தரும் உதவித்தொகை கிடைக்க வழிவகுக்கிறேன் என்ற பெயரில், மக்களிடம் காசு வாங்குவதோடு மட்டுமல்லாமல், காரியத்தையும் செய்துகொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். திரிணமூல் கட்சிக்காரர்களுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் பெயர்களைத் தாங்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, போராட்டங்கள் வெடிக்கலாயின. கிழக்கு பர்தவான் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகி மிரிணாள் பால் மட்டுமே 42 பேரிடம் ‘கட் மணி’ வாங்கியிருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றால், மாநிலம் முழுக்க நிலைமையைச் சொல்லவும் வேண்டுமா? கடும் அதிர்ச்சிக்குள்ளான மம்தா, யாரெல்லாம் இப்படி ‘கட் மணி’ வாங்கியிருக்கிறார்களோ, அவர்கள் அத்தனை பேரும் சம்பந்தப்பட்டோரிடம் பணத்தைத் திரும்பத் தர வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதன் விளைவாகப் பதற்றத்தில் இருக்கின்றனர் திரிணமூல் காங்கிரஸார்.

இந்திய அரசியலில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு அளவுக்கதிமாக மதிப்பிடப்படுகிறதா?

ஒபாமாவைப் பின்பற்றி 2014 தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட மோடியின் வெற்றிக்குப் பின் எல்லாக் கட்சிகளுமே சமூக ஊடகங்களுக்குப் பெரிய முக்கியத்துவம் தருகின்றன. இந்த முறை செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு இணையான இடம் சமூக ஊடகங்களுக்குத் தரப்பட்டது. ஏராளமான விளம்பரத்தையும் அவை சம்பாதித்தன. ஆனால், தேர்தலில் முடிவுகளைத் தீர்மானிக்கும் அளவுக்கெல்லாம் சமூக ஊடகங்கள் செல்வாக்கு செலுத்தவில்லை என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. இந்திய வாக்காளர்களில் 64% பேர் சமூக ஊடகங்களெதையும் பயன்படுத்துவதே இல்லை. செல்போனும் கையுமாகத் திரிபவர்களும்கூட பெரும்பாலும் காணொலிகளை - அதிலும் பொழுதுபோக்கு அம்சம் நிரம்பியவற்றிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அரசியல் விவாதங்களில் ஈடுபடும் மிகக் குறைவானவர்களில் பெரும்பான்மையோர் ஏற்கெனவே ஒரு கட்சி அல்லது சித்தாந்த சார்புடையவர்கள். ஆக, பொது வாக்காளர்களிடையே சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பெரிதென நம்ப வேண்டியதில்லை என்பதை ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. “பாஜகவின் சமூக ஊடகப் பிரச்சாரங்களைப் பார்ப்பவர்கள், பாஜகவின் வெற்றியோடு அவற்றை ஒப்பிட்டு அதுவே பாஜக வெற்றிக்கான காரணம் என்று நம்புகிறார்கள். அப்படியல்ல. எல்லா முனைகளிலும் பாஜக வாக்காளர்களைச் சென்றடைய முற்படுகிறது. முக்கியமாக, களத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கொடுக்கும் உழைப்பை பாஜகவின் கட்சி அமைப்பும் சுவீகரித்துக்கொண்டிருக்கிறது. இதுவே பாஜகவின் வெற்றிக்கான முக்கிய காரணம்” என்கிறது இந்த ஆய்வு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x