Published : 05 Jul 2019 08:18 AM
Last Updated : 05 Jul 2019 08:18 AM

ரத்தக் குடியர்கள்

போக்குவரத்து நெருக்கடியும் பரபரப்பும் மிக்க மாநகரமாக சென்னை ஒரு தோற்றத்தில் தெரிகிறது. ஆனால், பரபரப்புக்கு அருகிலும் அமைதியும் ஆசுவாசமும் கொண்ட நிழலிடங்களும் இங்கே உண்டு. வேளச்சேரியிலிருந்து கடற்கரை நிலையம் வரை செல்லும் ரயில் நிலையப் பாதையும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களும் இதற்கு உதாரணம். ஐம்பது வருடங்களுக்குப் பின்னரும் வரவிருக்கும் பயணிகளின் எண்ணிக்கையை உத்தேசித்துக் கட்டப்பட்ட பிரம்மாண்ட ரயில் நிலையங்களும் அதைச் சுற்றி ஏகாந்தமாக இருக்கும் காலியிடங்களும் குறுக்குவெட்டாக சென்னையைப் பறவைக் கோணத்திலிருந்து பார்க்கும் சவுகரியமும் கொண்ட தடம் அது. அப்படித்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை பெருங்குடி ரயில் நிலையமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இருந்தன.

அமைதியிழந்த பள்ளத்தாக்கு

பெருங்குடி ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி ரயில் நிலையத்தை இணைக்கும் சாலை ஒரு நிலை வரை போடப்பட்டு, நடுவில் உள்ள ஏரியால் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. காலை நடைப் பயிற்சியாளர்கள், மாலை நடை செல்லும் வயோதிகர்கள், உடன் வரும் ராஜபாளையம் நாய்கள், அரிதாக வரும் காதலர்கள், கோடைக் காலத்தில் வீல் ஸ்கேட்டிங் செய்யும் குழந்தைகள், சதுப்பு நிலத்துக்கு வரும் பறவைகளோடு ரயில் சத்தம் மட்டுமே அவ்வப்போது ஊடுருவும் அமைதிப் பள்ளத்தாக்குபோல இருந்தது பெருங்குடி ரயில் நிலையப் பகுதி.

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு 500 அடி தூரத்துக்குள் மதுக்கடைகளும் பார்களும் இருக்கக் கூடாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, வேளச்சேரியின் பிரதான பகுதியில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. அதற்குப் பின் ஓரிரு மாதங்களில் பெருங்குடி ரயில் நிலையத்தின் குடியிருப்பு வீடுகள் துவங்கும் பாலகிருஷ்ண நகர் பிரதான சாலையின் முனையில் நீலத் தகடுகளுடன் ஒரு பெரிய ஷெட் ஒன்று ஒருநாள் முளைத்தது. அடுத்த சில நாட்களில் அது ‘டாஸ்மாக்’ மதுக்கடை ஆனது.

நான்கு நாட்கள் அந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பகுதி நடுத்தர வர்க்கக் குடியிருப்புவாசிகள்; கூடுதலாக போலீஸ் பந்தோபஸ்தையும் அந்த மதுக்கடை பெற்றதுதான் அவர்களுக்குக் கிடைத்த பலன். பறக்கும் ரயில் தரமணி ரயில் நிலையத்தைத் தாண்டும்போது உருவாகி வரும் புதிய கட்டுமானங்களுக்கருகே பார்க்க இயலக்கூடிய புலம்பெயர் தொழிலாளிகள் உறங்கும் கொட்டகையைப் போல நெளிந்து சரிந்த நிலையில் புதிய டாஸ்மாக் கடை, இப்போது அந்த இடத்தின் ரணமாக மாறியுள்ளது.

மது குடிக்கும் எலிகள்

நீலத் தகரச் சுவர்களுக்குள் மதுப்புட்டிகளை விற்பனை செய்வதற்கு உள்ள இடத்தைத் தவிர, மிச்சமிருக்கும் நான்கு சென்ட் ஒரு கழிப்பறைபோல மாற்றப்பட்டுள்ளது. தண்ணீர் பாக்கெட்கள், தூக்கி வீசப்பட்ட மதுக்குப்பிகள், உடைந்த கண்ணாடிச் சில்லுகள் என அந்தக் கழிப்பறை மதுக்கடையைச் சுற்றி வீடுகளால் விழுங்கப்படாமல் இருக்கும் சதுப்பு நிலப்பகுதிகள், சாலையெங்கும் கிடக்கின்றன. எதிரே ரயில் பாலத்தினடி, இடது புறம் ஏழு நகர் குடிசைப் பகுதி, வலப்பக்கம் புதிதாகப் போடப்பட்ட சாலைகளின் பிளாட்பாரங்கள் வரை அந்தக் கழிவுகள் நீண்டுள்ளன.

புதிதாக இன்னொரு கலாச்சாரமும் அங்கே உருவாகியுள்ளது. காலை ஐந்தரை, ஆறு மணிக்கே அங்கு விற்கப்படும் மதுவைத் தேடி வேலைக்காக சென்னைக்கு இறங்கும் கூலித்தொழிலாளர்கள், அக்கம்பக்கத்து குடிசைப் பகுதி மக்கள் வரத் தொடங்கினர். சனி, ஞாயிறுகளில் பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து வார விடுமுறைக்கு சென்னைக்கு வந்து செல்லும் இளைஞர்கள், இந்த டாஸ்மாக்கின் மதுவைக் குடலில் சரித்த வெதுவெதுப்போடுதான் புதிய நகருக்குள் தங்கள் பரிச்சயத்தைத் தொடங்குகின்றனர்.

கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நிறைந்துகொண்டிருக்கும் சதுப்பு நிலப் பகுதிகளில் வளரும் நாணல்புற்கள், அங்கு வீசப்படும் பாட்டில்களின் மிச்ச மதுவையும் உறிஞ்சியே வளர்கின்றன. நீலத்தாழைக் கோழிகள் சாப்பிடும் புழுக்களோடு கொஞ்சம் மதுவும் இருக்கும். புராணிக அன்னத்தின் பிரம்மாண்டத்தையும் கம்பீரத்தையும் ஞாபகப்படுத்தும் கூழைக்கடாக்கள் மீனை விழுங்கி, சூரியனை நோக்கிக் கெக்கலித்து தண்ணீரைச் சலித்துவிடும்போது அவை போதையில் இருக்கிறதாவென்று தெரியவில்லை. டாஸ்மாக் கடைகள் மேல் கரையும் காகங்கள், டாஸ்மாக்கைச் சுற்றி உலவும் எலிகள் மதுவுக்குப் பழகி இருபது ஆண்டுகளாகிவிட்டதென்பது மட்டும் நிச்சயம்.

மலிவான தீர்வு

ஒரு உறங்காத நகரத்தின் கனவுகளை அவிழ்க்கும் திரவங்களைக் குப்பிகளில் வைத்திருக்கும் டாஸ்மாக், நள்ளிரவில் களைத்து உறங்குகிறது. சற்று தூரத்தில் போலீஸ் ரோந்து வாகனம் நீல, சிவப்பு விளக்குகளோடு நிற்கிறது. சுற்றி 400 மீட்டர் சுற்றளவுக்கு அதன் குப்பைகளும் கழிவுகளும் நீள்கின்றன. இவ்வளவும் குடியிருப்புப் பகுதியில்தான்... ஒரு ரயில் நிலையத்துக்கு எதிரேதான் பட்டவர்த்தனமாக நடக்கின்றன. இந்தக் கதையைப் படிக்கையில் உங்களுக்கு உங்களூர் கதை நினைவுக்கு வரலாம்.

சுத்தமான கழிப்பறை, வயிற்றை மேலும் துன்புறுத்தாத உணவுக்குக் கூட உத்தரவாதம் இல்லாத டாஸ்மாக்கில் வாங்கப்படும் ஒரு பாட்டிலின் விலை, அதன் உற்பத்தி விலையை விடப் பத்து மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

அரசு நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு, கலாச்சாரம், பொழுதுபோக்கு, வெகுமக்கள் பண்பாடு, பொது ஆரோக்கியம் என தமிழகத்தின் ஆறுவழிச் சாலைகள் முயங்கிப் பிரியும் முனையாக இன்று ‘டாஸ்மாக்’ உருவெடுத்து நிற்கிறது. சமூகத்தில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி அதலபாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், மது ஒரு மலிவான தீர்வாக மாறுவது சகஜம்; இந்த நிலைமையை ஆளும் வர்க்கமும் சேர்ந்தே தக்க வைக்க விரும்பும்.

தமிழகமெங்கும் முக்கியமான மதுச்சாலைகள் குடிசைப் பகுதிகளுக்கு அருகிலேயே இருக்கின்றன. மாலை வேளைகளில் வவ்வால்கள் போல கொத்துக்கொத்தாக, மதுச்சாலையின் கம்பிச்சதுரங்களுக்கு முன்னர் கையை நீட்டித் தொங்கிக் கொண்டிருப்பது தமிழகத்தின் அன்றாடக் காட்சிகளில் ஒன்று.

இன்று சாராயம்; நாளை ரத்தம்

19-ம் நூற்றாண்டின் பின்பகுதியில், ரஷ்யாவில் வாழ்ந்த இலக்கிய மேதை ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தனது  ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலில் இதைத்தான் சொல்கிறார்: “ஏழைகளின் நிலையும் அதுதான். தமது தேவைகள், ஆசைகள் நிறைவேறாத தவிப்பாலும், பொறாமையாலும் குடியில் வீழ்ந்து மூழ்கிப் போவார்கள். இந்த மாதிரி தூண்டிவிடப்படுவதால் இன்று பெருகுவது சாராயம்; நாளை ரத்தம்! அதாவது இன்று மது குடிப்பவர்கள் நாளை ரத்தம் குடிப்பார்கள்!”

மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, மனைவியும் மகளும் கண்மூடித்தனமான போதையில் வந்த குடியர்களின் வாகனத்தால் அடித்துத் தூக்கிவீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே மனைவி இறந்துபோன ஆனைகட்டி சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. மனைவியின் சடலத்துடன் அதே சாலையில் அமர்ந்து ‘டாஸ்மாக்’ மதுக்கடைக்கு எதிராக இரவு வரை போராட்டத்தில் அமர்ந்திருந்த மருத்துவரும் சமூகச் செயல்பாட்டாளருமான ரமேஷின் புகைப்படம் ஒரு வார காலமாகப் பார்ப்பவர்களின் மனத்தை அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது.

தஸ்தயேவ்ஸ்கியின் கடைசி வரி மீண்டும் நினைவுக்கு வருகையில், அந்தக் குடியர்கள் மட்டும் இல்லை; நம்மை ஆளும் ஆட்சியாளர்களும் கண் முன் வந்து போகிறார்கள். “இன்று பெருகுவது சாராயம்; நாளை ரத்தம்! அதாவது, இன்று மது குடிப்பவர்கள் நாளை ரத்தம் குடிப்பார்கள்!”

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு:

sankararamasubramanian.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x