Published : 09 Jul 2019 09:04 AM
Last Updated : 09 Jul 2019 09:04 AM

360: சரியும் குளிர்பான செல்வாக்கு; ‘காஃபே காபி டே’வை வாங்க முற்படும் கொக்க கோலா!

சரியும் குளிர்பான செல்வாக்கு: ‘காஃபே காபி டே’வை வாங்க முற்படும் கொக்க கோலா!

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு நாடெங்கிலும் 1,752 கிளைகளோடு இயங்கிவரும் ‘காஃபே காபி டே’ நிறுவனத்தை வாங்க முனைப்பு காட்டிவருகிறது ‘கொக்க கோலா’ நிறுவனம். தமிழ்நாட்டில் நம்மாழ்வார் ஏற்படுத்திய மறுமலர்ச்சியைப் போலவே இப்போது நாடெங்கிலும் குளிர் பானங்களுக்கு எதிரான மனோநிலை வளர்ந்துவருகிறது; மாறாக, செயற்கை சுவை - நிறமிகள் தவிர்க்கப்பட்ட பழச்சாறுக்கான சந்தை விரிகிறது. பழச்சாறு விற்பனையில் ஈடுபாடு காட்டிவரும் ‘கொக்க கோலா’ நிறுவனம் ‘காபி டே’ கடைகளில் காபியோடு தன்னுடைய பழச்சாறு வகைகளையும் விற்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது. இந்தியாவில் காபி சில்லறை விற்பனைச் சந்தையின் மதிப்பு ரூ.2,500 கோடி. மேலும் ‘காபி டே’ கடைகளுக்குத் தொழில் முனைவர்கள் - இளைஞர்கள் அதிகம் வருகின்றனர். இவர்களை இலக்காகக் கொள்ளும்போது மேலும் சில புதிய திட்டங்களை யோசிக்கலாம் என்று  ‘கொக்க கோலா’ நிறுவனம் கருதுவதாகச் சொல்லப்படுகிறது.

ஒரு தொகுதி... ஓராயிரம் மழைநீர் சேகரிப்புக் கட்டுமானம்... ஒரு லட்சம் மரக்கன்றுகள்...

சென்னையின் முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியம், சூழலை வளர்த்தெடுக்கும் செயல்பாடுகளில் உத்வேகத்துடன் தன்னை இணைத்துக்கொள்பவர். சென்னையில் மழை பெய்யாவிட்டாலும், அதிகம் பெய்தாலும் உடனடியாகப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் ஒன்று சைதாப்பேட்டை. சமீபத்திய கோடையானது பெரும் தண்ணீர்த் தட்டுப்பாட்டில் தொகுதியைத் தள்ளிவிட்ட நிலையில் 1,000 இடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டுமானத்தை உருவாக்கும் திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்துவந்து, சமீபத்தில் தொடங்கியுள்ளார் சுப்பிரமணியம். ஏற்கெனவே, தொகுதிக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருப்பவர் சுப்பிரமணியம். அதாவது, மரக்கன்றுகளை நடுவதோடு மட்டும் அல்லாமல், அவற்றுக்கு இரும்புக்கூண்டு அமைத்து, அன்றாடம் தண்ணீர் பாய்ச்ச ஆட்களை அமர்த்தி, அவை தானாக வளர்ந்து நிற்கும் வரை பராமரிக்கும் பணியிலும் கவனம் செலுத்துகிறவர் சுப்பிரமணியம் என்பதால், மழைநீர் சேகரிப்புத் திட்டத்தையும் முழுமையாக, முறையாகச் செய்வார் என்ற நம்பிக்கையில் உற்சாகம் காட்டுகிறார்கள் சைதை தொகுதி மக்கள். இதுபோன்ற நல்ல முயற்சி ஒரு தொகுதியோடு முடிந்துவிடக் கூடாது. இந்த சேகரிப்புத் திட்டத்தைத் தமிழகத்தின் மற்ற தொகுதிகளிலும் கட்சி பேதம் இன்றி எம்எல்ஏக்கள் செயல்படுத்தலாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x