Last Updated : 31 Aug, 2017 09:05 AM

 

Published : 31 Aug 2017 09:05 AM
Last Updated : 31 Aug 2017 09:05 AM

நீதிபதி சதாசிவா ஆணைய அறிக்கையின் பத்தாண்டுகள்

மிழகத்தின் மேற்கு மண்டலத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப் பிரதேசத்தில் ‘வீரப்பன் தேடுதல் வேட்டை’ எனும் பெயரில் மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய கிராம மக்கள்மீது தமிழக, கர்நாடக அதிரடிப் படையினர் நிகழ்த்திய அத்துமீறல்கள் மிகக் கொடூரமானவை. நீண்டகாலப் போராட்டத்துக்குப் பின்னர், நீதிபதி சதாசிவா அறிக்கையின் மூலம் அந்த அத்துமீறல்கள் குறித்த உண்மைகள் வெளியானபோது தமிழகமே அதிர்ந்தது. அந்த அறிக்கை வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அதுதொடர்பான ஒரு மீள்பார்வை இது.

1993-ல் கர்நாடகக் காவல் துறையினரும், தமிழகக் காவல் துறையினரும் வீரப்பனால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக, கர்நாடகச் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் வீரப்பனின் கூட்டாளிகள் கொல்லப்பட்டனர் அல்லது கைதுசெய்யப்பட்டு தடா சட்டத்தின்கீழ் சிறைப்படுத்தப்பட்டனர். மறுபுறம் மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய கிராம மக்களின் வாழ்க்கை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. புதிய அதிரடிப்படை முகாம்கள் உருவாக்கப்பட்டன.

சித்திரவதை முகாம்கள்

தமிழகத்தில் மேட்டூர், பண்ணாரி உள்ளிட்ட பல இடங்களிலும், கர்நாடகத்தில் மாதேஸ்வரன் மலையிலும் அமைக்கப்பட்ட அந்த முகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டவர்களின் பரிதாப நிலை வெளி உலகம் அறியாதது. பலர் கடும் சித்திரவதைக்கு ஆளானார்கள். முகாமில் அடைக்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளானார்கள். விவரிக்க இயலாத கொடூரங்கள், படுகொலைகள் என அந்தப் பட்டியல் நமது சமூகத்தின் மனசாட்சியை அசைக்கக்கூடியது. பெரும் அரசியல் இயக்கங்கள் இதுகுறித்துக் கேள்வி கேட்க அப்போது தயாராக இல்லை. அப்பாவி மக்களை நசுக்கிக்கொண்டே, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தப் போராடுவதுபோல் ஒரு தோற்றத்தைக் காவல் துறை உருவாக்கியிருந்த நிலையில், எளிய பழங்குடி இயக்க, மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள்.

தமிழக மனித உரிமை செயல்பாடுகளின் வரலாற்றில் மிக முக்கியமான தருணம் அது. தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், தமிழகக் கர்நாடக மக்கள் சிவில் உரிமைக் கழகம்,மக்கள் கண்காணிப்பகம், மதுரை சோக்கோ அறக்கட்டளை, பெங்களூரு சிக்ரம் போன்ற இயக்கங்கள் 1997 முதல் இணைந்து கூட்டுச் செயல்பாடுகளின் முலம் காவல் துறையின் அத்துமீறல் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பின.

இதையடுத்து, கர்நாடகத்தைச் சேர்ந்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய புலனாய்வுத் துறை முன்னாள் இயக்குநர் சி.வி.நரசிம்மன் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவை 1999 இறுதியில் தேசிய மனித உரிமை ஆணையம் உருவாக்கியது. வீரப்பன் தேடுதல் வேட்டையில் மனித உரிமை அத்துமீறலில் அதிரடிப்படை ஈடுபட்டதா என்பதைக் கண்டறிவதும், பாதிக்கப்படவர்களுக்கு நீதி வழங்குவதும் இக்குழுவின் நோக்கமாக இருந்தது.

அரசுகளின் மெளனம்

கடந்த 2000 ஜனவரியில் இதன் முதல் விசாரணை கோபிச்செட்டிபாளையத்தில் தொடங்கியது. பின்னர் மாதேஸ்வரன் மலை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் பல கட்ட விசாரணை நடந்தது. இந்த விசாரணையைத் தடைசெய்ய பெரும் முயற்சி எடுத்த காவல் துறை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இரண்டு முறை தடையாணையும் பெற்றது. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட சமயத்தில் வீரப்பன் வைத்த கோரிக்கைகளில், நீதிபதி சதாசிவா ஆணைய விசாரணைக்கான தடை நீக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையும் அடக்கம். தடைகள் தகர்க்கப்பட்டு விசாரணை தொடர்ந்தது. பாதிக்கப்பட்ட எளிய மக்கள் தங்களின் வதைகளையும் வலிகளையும் அச்சமின்றி வெளிப்படுத்திக் களச் செயல்பாட்டாளர்களுக்கும் விசாரணை ஆணையச் செயல்பாடுகளுக்கும் நம்பிக்கை கொடுத்தனர். போலீசாரால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர், பாலியல் வன்செயலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள், சித்திரவதைக்கு உள்ளானவர்கள், சட்டவிரோதமாகச் சிறைப்படுத்தப்பட்டவர்கள், காவல் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் என 197 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர் . விசாரணை முடிந்து 2003 மார்ச் மாதமே அறிக்கை தேசிய மனித உரிமை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோதும் அந்த அறிக்கை மீது தமிழக, கர்நாடக அரசுகள் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அத்துடன் 2005 வரை இந்த அறிக்கையை தேசிய மனித உரிமை வெளியிடாமல் செய்தன.

பாதிக்கப்பட்ட மக்கள் 2005 அக்டோபரில் டெல்லி சென்று ஆணையத்தை முற்றுகையிட்டனர். மேலும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்ளிட்ட பலரை நேரடியாகச் சந்தித்து முறையிட்டனர். அதிரடிப்படையின் அத்துமீறல்கள், நாடு முழுவதும் அதிரடிப்படை என்ற பெயரில் எளிய மக்களின் மீது நிகழ்த்தப்படும் கொலைகள், அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அதிரடிப்படை அமைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா, ஆனி ராஜா போன்றோர் பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணைநின்றார்கள்.

அறிக்கை வெளியானது

இறுதியாக 2007 ஜனவரி 15-ல் நீதிபதி சதாசிவா ஆணையத்தின் அறிக்கை வெளியானது. அதிரடிப்படை செய்த கைது நடவடிக்கைகள் முழுவதும் சட்ட விரோதமானவை என்றும், ஒருவரைக் கைதுசெய்யவோ அல்லது சோதனை செய்யவோ அதிரடிப்படைக்கு அதிகாரம் இல்லை என்றும், அதிரடிப்படை அப்பகுதி காவல் துறைக்கு உதவி புரியலாமே தவிர அதற்கு எந்த எல்லையற்ற அதிகாரமும் இல்லை என்றும் கூறியது. மேலும் சித்திரவதை, படுகொலைகள், பாலியல் வன்முறைகள், வக்கிரங்களில் காவல் துறை ஈடுபட்டதற்கான அடிப்படை முகாந்திரம் உள்ளதாகவும் அறிவித்தது.

அதிரடிப்படையை உருவாக்கிய செயல்பாடுகள் சட்டவிரோதமாக இருந்ததை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சாட்சியமளித்த 192 பேர்களில் 89 பேருக்கு இழப்பீடு வழங்கவும், மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட அதிரடிப்படையினரை அரசு சாராத நீதித் துறை சார்ந்த விசாரணை குழுவை வைத்து விசாரிக்கவும், காவல் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தது. ஆனால், நீதி முழுமையாக வென்றுவிடவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கர்நாடக, தமிழக அரசுகள் தலா இரண்டரை கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்கியபோதும் துயரங்கள் இன்னமும் தீரவில்லை. தவறு செய்தவர்களைக் காவல் துறை பாதுகாக்கிறது. நடவடிக்கைகள் ஏதும் இல்லை. ஆனால், பதவிகள், பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த அறிக்கை இதுவரை தமிழிலோ ஆங்கிலத்திலோ நூல் வடிவில் வெளியிடப்படவில்லை. எல்லாவற்றையும் தாண்டி, சதாசிவா ஆணையத்தின் அறிக்கை, எளிய மக்களுக்கு எதிரான அடக்குமுறையின் வரலாற்று சாட்சியம் என்றே என்றென்றும் நினைவுகூரப்படும்!

- ச.பாலமுருகன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யு.சி.எல்) தேசியக் குழு உறுப்பினர்,

‘சோளகர் தொட்டி’ என்ற நாவலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x