Last Updated : 07 Aug, 2017 10:06 AM

 

Published : 07 Aug 2017 10:06 AM
Last Updated : 07 Aug 2017 10:06 AM

கைத்தறித் துறைக்கு கைகொடுப்போம்

வி

வசாயம் வேண்டாம் என்று பெரும்பாலான இளைஞர்கள் தீர்மானித்து வேறு தொழில்களுக்குச் செல்வதைப் போல, கைத்தறி நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் வேறு தொழில்பயிற்சி பெற்று பிற துறைகளுக்குச் செல்கின்றனர். கைத்தறித் துறை நிரந்தரமாகவே சில பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தாலும் 2016-17-ல் மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் பருத்தி நூலிழையின் விலை உயர்வும் பலத்த அடிகளாக விழுந்தன. கைத்தறி பருத்தித் துணி உற்பத்தி, விற்பனை இரண்டுமே கணிசமாகச் சரிந்தது என்று மதுரை நிலையூர் நெசவாளர்கள் கூறுகின்றனர்.

‘பருத்தி நெசவில்தான் இளைஞர்களுக்கு ஆர்வம் குறைந்துவருகிறது, காஞ்சிபுரம் சென்று பாருங்கள், ஏராளமான இளைஞர்களைத் தறியில் பார்க்கலாம்’ என்கிறார் மாநில கைத்தறித் துறை இயக்குநரக மூத்த அதிகாரி. கைத்தறி நெசவில் கிடைக்கும் வருமானம் குடும்பச் செலவுகளுக்குப் போதுமான அளவுக்கு இருந்தால்தான் இளைஞர்கள் ஈடுபடுவார்கள்; பருத்தி நெசவில் ஈடுபடும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதத்துக்குக் குறைந்தபட்சம் ரூ.20,000 வருமானம் கிடைக்க வேண்டும். இப்போது மாதம் ரூ.8,000 தான் கிடைக்கிறது என்கிறார் பரமக்குடி ஏ.ஆர்.ராமதாஸ்.

கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களை ஆதரிப்பதில் அதிகாரிகள் இன்னும் தீவிரம் காட்டி னால் நம்மால் அதிசயங்களைச் செய்துகாட்ட முடியும் என்கிறார் எமனேஸ்வரம் ஜெய்பாரத் நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவரான டி.என்.ஜெய்சங்கர். தமிழகத்தில் உள்ள கைத்தறிகளில் மூன்றில் இரண்டு பங்கு, கூட்டுறவுச் சங்கங்களுடன்தான் இணைந்துள்ளன. கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை 1,067. இவற்றில் 89-ஐத் தவிர எஞ்சியவை பருத்திக்கான கைத்தறிகள்தான்.

பணப் பட்டுவாடா தாமதம்

நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மாநில அரசின் உதவிகள் இல்லாமல் இல்லை. நெசவாளர் சங்கங்களுக்குத் தரப்படும் பருத்தி, பட்டு சிட்டா நூல்களுக்கு விலையில் 10% மானியம், கடனுக்கான வட்டியில் 4% மானியம், விற்பனையின்போது தள்ளுபடி மானியமாக 20% முதல் 30% வரையில் சலுகைகள் தரப்படுகின்றன. அத்துடன் நல்வாழ்வுத் திட்டங்களும் உண்டு. அரசின் திட்டங்கள் பயன் மிகுந்தவை என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. அதே வேளையில், கைத்தறிக் கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் சில லட்சம் ரூபாய் நிலுவை என்னும்போது இத்திட்டங்களால் எந்த அளவுக்கு முழுப் பலன்களை அனுபவிக்க முடியும் என்று கேள்வியெழுப்புகிறார் ராமதாஸ்.

தள்ளுபடி மானியமாக ரூ.350 கோடி தரப்பட வேண்டியிருக்கிறது. இந்த ஆண்டுக்கு ரூ.80 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் இயக்குநரக அதிகாரி. நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து வரும் ரசீதுகளைச் சரிபார்த்து பணம் தரச் சராசரியாக 45 நாட்கள் பிடிக்கின்றன. எனவே, மானியம் கோரி ஒரு சங்கம் ரசீது அனுப்பினால், அவர்கள் கேட்கும் தொகையில் 25%-ஐ முதல் கட்டத்திலேயே குறைத்துவிட்டு, எஞ்சிய தொகையைப் பரிசீலிப்பதை விதியாகவே கடைப்பிடிக்கின்றனர் அதிகாரிகள்.

அரசின் சந்தேகம்

ஊதியமாக வழங்கிய தொகையை உயர்த்திக் காட்ட, நெசவாளர் அல்லாதவர்களையும் சில சங்கங் கள் உறுப்பினர்களாகச் சேர்த்துவிடுகின்றனவோ என்று அரசாங்கம் சந்தேகப்படுகிறது. ஒவ்வொரு ஊழியரும் துணி உற்பத்தியில் என்ன பங்கை ஆற்றினார் என்பதை அறிய கைவிரல் ரேகைப் பதிவேடு முறை சில சங்கங்களில் சோதனை அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் விளைவுகளை அலசி ஆராய்ந்த பிறகு, அனைத்து சங்கங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, மானிய இழப்புகள் குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தங்களுடைய உற்பத்திப் பிரிவுகளின் நிதிநிலைமை கவலைப்படும்படியாக இருக்கிறது என்று நெசவாளர்கள் கூறிவரும் நிலையிலும், சங்கங்களின் லாப விகிதம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுவதற்கு நெசவாளர்கள் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். கைத்தறி நெசவுப் பொருட்கள் மூலம் 20% லாபம் கிடைக்க வேண்டும் என்று நிர்ணயிப்பது உண்மை நிலைக்குப் பொருந்தாதது என்று ஜெய்சங்கர் சுட்டிக்காட்டுகிறார். விசைத்தறியுடன் போட்டி போட முடியாமல், கைத்தறி தவிக்கும் நிலையில், கைத்தறியில் உற்பத்தியாகும் துணிகளுக்கு லாபத்தை அதிகப்படுத்தினால் விலையும் அதிகமாகும். அதனால் விற்பனையும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று அவர் அச்சப்படுகிறார்.

கைத்தறித் துறைக்கென்று ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத் தறியோ, வேறு துறையோ தயாரிக்காமல் தடுக்க 1985-ல் இயற்றப்பட்ட கைத்தறிச் சட்டத்தை அரசு தீவிரமாக அமல்படுத்தினால்தான் போட்டிகளைச் சமாளிக்க முடியும் என்கிறார் மதுரைக்கு அருகில் உள்ள நிலையூர் வெற்றி கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் மணிபாபா.

போட்டி போட முடியாது

வேட்டி, புடவை, துண்டு, லுங்கி, படுக்கை விரிப்பு, படுக்கை உறை ஆகியவற்றைக் கைத்தறித் துறையில் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று அரசு ஒதுக்கியிருக்கிறது. இந்த ஒதுக்கீடு அப்படியே கடைப்பிடிக்கப்படுகிறதா என்று வினவுகிறார் மணிபாபா. இதை மிகத் தீவிரமாக அமல்படுத்தவில்லை என்று ஒப்புக்கொள்ளும் அதிகாரி, விசைத் தறிகளைச் சோதிப்பதில் பிற மாநிலங்களைவிட தமிழகம் முன்னணியில் இருக் கிறது. இது அச்சட்டத்தின் முக்கியமான நிபந்தனை என்கிறார் அவர்.

2016-17-ல் 67,000 விசைத்தறிகள் சோதிக்கப்பட்டன. அரசின் சட்டத்தை மீறி, கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்களைத் தயாரித்த நிறுவனங்கள் மீது 55 முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது, 22 வழக்குகளில் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கைத்தறி நெசவுத் துறைக்கு அரசு வலுவான ஆதரவைத் தர வேண்டும் என்று கோரிக்கை விடும் நெசவாளர்கள், இப்போதுள்ள ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டால், அதில் மிகச்சிறிய மாற்றம் ஏற்பட்டாலும்கூட தங்களுடைய பிழைப்பு நொறுங்கிவிடும் என்று உணர்ந்துள்ளனர். குறைந்த செலவில், பெருமளவில் தயாராகும் விசைத்தறி, ஆலைத்தறி துணிகளுடன் கைத்தறியால் போட்டிபோட முடியாது என்பதால், குறிப்பிட்ட சில பிரிவினரை இலக்காக வைத்துத்தான் கைத்தறி ஆடைகளைத் தயாரிக்க வேண்டும் என்று சில சில்லறை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

நெசவாளர்களின் நம்பிக்கை

இப்போதுள்ள கொள்கைகளை அப்படியே தொடருவது சரியா என்ற சிந்தனை அரசுக்குள்ளேயே ஏற்பட்டுவருகிறது. வேட்டிகள், சேலைகள், பள்ளிச் சீருடைகள் போன்றவற்றைத் தயாரித்து விலையில்லாமல் வழங்க 30 ஆண்டுகளுக்கு முன்னால் அரசு தீர்மானித்தபோது, கைத்தறி நெசவாளர்களின் நலன் கருதி அவர்களிடமே தயாரிப்புப் பணிகள் தரப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில் நெசவாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

சரியான முறையில் திட்டமிட்டு கைத்தறித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தினால் கிராமப்புற பொருளாதாரத்தையும் வீழ்ச்சி அடையாமல் பார்த்துக்கொள்ளலாம் என்று மாநில கைத்தறித் துறை முன்னாள் செயலாளர் கூறுகிறார். கைத்தறித் துறையில் இப்போது இருக்கும் பல பிரச்சினைகளுக்கு இடையிலும் நிலைமை மேம்பட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்றே நெசவாளர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

©: ‘தி இந்து’ ஆங்கிலம்

சுருக்கமாகத் தமிழில் : சாரி

ஆகஸ்ட் 7: தேசிய கைத்தறித் தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x