Published : 01 Aug 2017 09:29 AM
Last Updated : 01 Aug 2017 09:29 AM

அந்தரங்க உரிமைக்கு அர்த்தம்தான் என்ன?

ந்தரங்கம் (தனியுரிமை) என்பதற்கான சட்டபூர்வ விளக்கம் அகராதிகளில் கிடையாது. உயிர் வாழும்வரை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அனுபவிக்கும் தனிப்பட்ட விஷயங்களே அந்தரங்க உரிமை என்று சில சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்கென்று தனி வரையறைகளோ, சாசனங்களோ இல்லை. அ

ந்தரங்க உரிமை என்பது ஒருவருடைய உடல் சார்ந்த, சுயேச்சையான செயல்பாடு சார்ந்த

, தானே முடிவெடுக்கும் நிலை சார்ந்த, அரசினால் வேவுபார்க்கப்படுவதை எதிர்க்கும் மனோபாவம் சார்ந்த, ரகசியம் காப்பது சார்ந்த, கண்ணியம் சார்ந்த, பேச்சுரிமை-எழுத்துரிமை-கருத்துரிமை சார்ந்த ஒன்று. சுருக்கமாகச் சொன்னால், அந்தரங்க உரிமை என்பது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தீர்மானிக்கப்பட வேண்டியது.

சர்வதேச அளவில் தனிமனித சுதந்திரத்தைக் காக்க சட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 1948-ல் இயற்றப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான உலகப் பிரகடனத்தின் 12-வது கூறு, 1966-ல் ஏற்பட்ட சிவில்-அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்பாட்டின் 17-வது கூறு ஆகியவை ஒருவருடைய தனிப்பட்ட அந்தரங்கத்தில் யதேச்சாதிகாரமாக யாரும் தலையிடுவதைத் தடை செய்கிறது. அந்தரங்கம் மட்டுமல்ல.. குடும்ப உறவுகளில், வீட்டில், கடிதத் தொடர்புகளில், அவருக்குள்ள நற்பெயரில், கௌரவத்தில் மற்றவர்கள் குறுக்கிட முடியாமல் அவை தடுக்கின்றன.

இந்தப் பிரகடனத்தில் இந்தியா 1979 ஏப்ரல் 10-ல் கையெழுத்திட்டது. ஐரோப்பிய ஒன்றியம் 2012-ல் இயற்றிய அடிப்படை உரிமைகள் சட்டமும் இப்படி ஒருவருடைய குடும்பம், வாழ்க்கை, கடிதத் தொடர்புகள் ஆகியவற்றில் யாரும் தலையிடத் தடை விதித்திருக்கிறது. ஒருவருடைய தனிப்பட்ட தரவுகளைக் குறிப்பிட்ட நோக்கத்துக்காகத் திரட்டினால் அதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.

பிரச்சினை ஏன் வந்தது?

மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவோருக்கு நேரடியாகப் பலன்கள் சென்று சேர அவர்களுடைய விரல் ரேகை, கண் பதிவு உள்ளிட்ட உடல் சார்ந்த தனி அடையாளங்களைக் கணினியில் பதிவுசெய்யும் ‘ஆதார்’ திட்டத்தால் இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ‘ஆதார்’ என்பது தனியுரிமையை அப்பட்டமாக மீறும் செயல் என்று கண்டித்து, சிலர் உச்ச நீதிமன்றத்தில் 2015-ல் மனு தாக்கல் செய்தனர். ‘சர்வாதிகார ஆட்சியைப் போல தனி உடல் அடையாளங்கள் பதிவு செய்யப்படுகின்றன, ஒருவரைப் பற்றி அரசு திரட்டும் தகவல்கள் வேறு யாருக்காவது கசியவிடப்படும் வாய்ப்பும் இருக்கிறது’ என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.

‘தன்னைப் பற்றிய எதுவும் வெளியில் தெரியக் கூடாது என்று மேல்தட்டு மக்களில் சிலர் இவ்விதம் ஆட்சேபிப்பதானது, பெரும்பாலான ஏழை மக்களுக்கு அரசின் நிதிஉதவிகள் சரியாகவும் விரைவாகவும் போய்ச் சேருவதைத் தடுப்பதற்கான முயற்சியே’ என்று அரசு வாதிட்டது. ‘அரசின் நலத் திட்டங்கள் அந்தந்தப் பயனாளிகளை நேரடியாகப் போய்ச் சேரவும், பயனாளிகளை அரசு சரிபார்க்கவும், திட்டத்துக்கான பணம் இடையில் வேறு எவராலும் கையாடல் செய்யப்படாமலும், வீணாகாமலும் தடுக்க ‘ஆதார்’ உதவுகிறது.

அந்தரங்கம் அடிப்படைச் சட்டமா?

அத்துடன் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், பயங்கரவாதச் செயல்களுக்குப் பணம் தந்து ஊக்கப்படுத்துவது போன்றவற்றையும் தடுக்க உதவுகிறது’ என்று அரசு சுட்டிக்காட்டியது. முதலில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்த இந்த வழக்கை இப்போது ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்க விருக்கிறது.

இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் உள்ளிட்ட மூத்த நீதிபதிகள் அந்தரங்க உரிமை என்பது அரசியல் சட்டம் உறுதியளிக்கும் அடிப்படைச் சட்டம் மட்டும்தானா அல்லது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதா என்று விவாதித்து வருகின்றனர். அந்தரங்கம் என்ற சூழல் இப்போது பாழ்பட்டுக்கிடப்பது குறித்து நீதிபதிகளும் சட்ட வல்லுநர்களும் மனம் வெதும்புகின்றனர்.

அத்துமீறப்படும் அந்தரங்கம்

அந்தரங்க உரிமையை அடிப்படை உரிமையாக, அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் சேர்க்கவில்லை என்று வாதிடுகிறது அரசு. தொழில்நுட்பம் நவீனமயமாகும் இந்தக் காலத்தில், தனி நபர்களின் அந்தரங்க உரிமைகளில் தலையிட அரசும் தனியார் நிறுவனங்களும் காத்திருக்கின்றன என்று எதிர் மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.

அழகு சாதனத்திலிருந்து நுகர்பொருட்கள் வரை விற்பவர்கள் தனி நபர்களின் கைபேசிகளுக்கு மணிக்கொரு முறை விளம்பர குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டேயிருக்கின்றனர். வயது, பால், ஊதியத்துக்கேற்ப இந்த விளம்பரங்கள் அனுப்பப்படுகின்றன. இதைப் பற்றித்தான் மனுதாரர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கவலைப்படுகின்றனர். ‘ஐபேட்’-களை இயக்குவோர் கைவிரல் ரேகைகளைப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பாதுகாக்க வலுவான எந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கும்படி அரசைக் கேட்டுள்ளது. அந்தரங்கம் தனியுரிமையா என்பதை இனிமேல்தான் அறிந்துகொள்ள முடியும்!

தமிழில்: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x