Published : 16 Aug 2017 09:35 AM
Last Updated : 16 Aug 2017 09:35 AM

நினைவில் தொடரும் தேசப்பிரிவினை

சித்தார்த்த தேவ், இந்திய எழுத்தாளர்

பிரிவினை என்பது வெவ்வேறான நடவடிக்கைகளை உள்ளடக்கியது, பிரிக்கப்பட்டதில் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதைப் பொருத்தது. 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பதில் மவுண்ட் பேட்டன் உறுதியாக இருந்தார். இந்திய துணைக் கண்டத்தை இரண்டாகப் பிரிப்பது என்று அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்த பிறகு, இரண்டரை மாத அவகாசம்தான் இருந்தது. பாரிஸ்டர் சிரில் ராட்கிளிஃப் தலைமையிலான எல்லை வரையறைக் குழு தேசிய வரைபடத் தயாரிப்பு வேலையை ஆகஸ்ட் 12-ல் தான் முடித்தது. இரு நாடுகளின் வரைபடங்கள் கைக்குக் கிடைத்ததோ ஆகஸ்ட் 17-ல்!

அதற்குள் மதரீதியிலான இன ஒழிப்பு தொடங்கிவிட்டது. இரு தரப்பையும் சேர்த்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாயினர், கடத்தப்பட்டனர். 1 கோடி முதல் 2 கோடிப் பேர் வரை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குக் குடிபெயர்ந்தனர். ரயில்கள் இரு பகுதிகளுக்கும் இடையில் சடலங்களோடும், பல்லாயிரக்கணக்கான மக்களோடும் ஒன்றையொன்று கடந்து சென்றன. ரயில்களில் செல்ல முடியாதவர்கள் நடந்தே சென்றனர். இந்த வன்முறைச் சம்பவங்களும் வேதனைகளும் பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய எந்த நாட்டிலும் அதிகாரபூர்வ வரலாற்றுப் புத்தகத்தில் விரிவாக எழுதப்படவே இல்லை. இந்த மறதியின் விளைவுதான், இன்றும் இரு நாடுகளிலும் சிறுபான்மை மக்கள் இன அழிப்புக்கு உள்ளாவது, சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள் மத அடிப்படையில் பிரிவினைக்கு உள்ளாவது, சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக ஒடுக்கப்படுவது, கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாவது என்று தொடர்கிறது. தெற்காசியாவில் இப்போது இதுதான் தேசிய உணர்வாகிவிட்டது.

பம்பாயிலிருந்து பாகிஸ்தானுக்கு மிகுந்த தயக்கத்துடனே சென்ற உருது எழுத்தாளர் சாதத் ஹசன் மன்ட்டோ, புதிய நாட்டில் மிகுந்த ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்தார். லாகூரில் உள்ள மனநோயாளிகள் இல்லத்தில் அடைக்கப்படும் நோயாளிகளைப் பற்றிய சிறுகதையில் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தினார். புதிய நாடுகள் பிரித்துக்கொள்ள வேண்டிய சொத்துகள் அவர்கள் என்றார். அவரது கதையில், சீக்கிய சமூகப் பிரமுகரான தோபா தேக் சிங் பிறந்த கிராமம் பாகிஸ்தானுக்குத் தரப்பட்ட பஞ்சாபில் இருந்தாலும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான சிறு நிலத்தில், எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத தரையில் புரண்டு அழுது, சொந்த மண்ணை விட்டுச் செல்ல மாட்டேன் என்றார் அவர். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளும் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்தால் தோபா தேக் சிங்கின் பிடிவாதம் நினைவுக்கு வருகிறது.

காமிலா ஷம்சி, பாகிஸ்தான் எழுத்தாளர்

நான் வளர்ந்தபோது தேசப் பிரிவினை என்பது வரலாறாக அல்ல -குடும்பக் கதையாகத்தான் பார்க்கப்பட்டது. என் குடும்பத்தில் பாதிப்பேர் பாகிஸ்தானியர்களாகவும் பாதிப்பேர் இந்தியர்களாகவும் மாறினோம். என்னுடைய பாட்டியால், மரணப் படுக்கையில் இருந்த அவருடைய தாயாரைச் சென்று பார்க்க ‘விசா’ கிடைக்கவில்லை. 1987-ல் கராச்சியில் கிரிக்கெட் மேட்ச் டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்த நான் பாகிஸ்தானின் வெற்றியைக் கண்டு பூரித்தேன். என் அம்மாவைப் பார்க்க வந்த மாமா தாத்தா, இந்தியா தோற்றதே என்று சோகத்தில் ஆழ்ந்தார்.

சுதந்திரமும் பிரிவினையும் ஏற்படுத்திய விளைவுகள் சிக்கலானவை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகப் போராடிப் பெற்ற சுதந்திரம், வெறுப்பிலும் ரத்தம் சிந்துவதிலும்தான் முடிந்தது. இப்போதைய உரையாடல்கள் அந்த ரத்தம் சிந்தலின் அர்த்தம் என்ன என்பதில் முடிகின்றன. இரு நாடுகளும் தத்தமது நாட்டுச் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்செயல்களை நிகழ்த்துகின்றன. இரு நாடுகளின் இயல்புக்கும் வரலாற்றுக்கும் இது செய்யப்போகும் சேதங்களை நினைத்துக் கவலைப்படுகிறேன். பிரிவினைக் கால வன்செயல்களுக்கு யார் பொறுப்பு என்று ஆராயப்படவில்லை. ஆனால், இருதரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக்கொண்டன.

மொஹ்ஸின் ஹமீது, பாகிஸ்தான் எழுத்தாளர்

எழுபதாண்டுகளுக்குப் பிறகும் பழைய வெறுப்பு இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. இந்தியா சகிப்புத்தன்மையற்ற இந்து தேசியவாத நாடாகிக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தானை மோசமாக பாதித்துக்கொண்டிருக்கும் மதப் பிரிவினைவாதம், எதிர்ப்புக் குரலை ஒடுக்கும் எதேச்சாதிகாரம் ஆகியவற்றை இந்தியாவும் பின்பற்றப் பார்க்கிறது. பத்திரிகைகள் இனி சுதந்திரமாகச் செயல்படும், ஆட்சியாளர்கள் தங்களுடைய முழு பதவிக் காலத்தையும் ராணுவத் தலையீடு இல்லாமல் கழிப்பார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது.

இரு நாடுகளின் ராணுவ வீரர்களும் காஷ்மீரில் எல்லைக்கு அப்பாலிருந்து சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். அணு ஆயுதங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. அனல் கக்கும் மேடைப் பேச்சுகளுக்கு அளவே இல்லை. 70 ஆண்டுகளுக்கு முன்னால் வெட்டிக்கொல்லப்பட்டவரை இன்று உயிரோடு எழுப்ப முடிந்தால் அவர் சொல்வார், “ஆம் - இதுதான் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது” என்று. எத்தகைய தோல்வி இது?

கிரண் தேசாய், இந்திய எழுத்தாளர்

ஒவ்வொரு சனிக்கிழமையும் எனக்கு மனச்சோர்வு வந்துவிடும். ஒரு சனிக்கிழமை நியூயார்க் நகர ரூபின் அருங்காட்சியகத்துக்குச் சென்றேன். இந்தியா தொடர்பாக ஹென்றி கார்த்தியே-பிரெஸ்ஸோன் எடுத்த புகைப்படங்களைப் பார்வையிட்டேன். அவற்றை ஓவியங்கள் என்றே கூறிவிடலாம். பிரிவினைப் புகைப்படங்கள், காந்தியின் கடைசி நாள்கள், அவருடைய படுகொலைக்குப் பிந்தைய சில நாள்கள் படங்களாக இருந்தன. புகைப்படங்கள் நாள்வாரியாக வைக்கப்படவில்லை. அப்போதைய நாள்கள் கூச்சலும் களேபரமுமாக இருந்தாலும் புகைப்படத்தில் அமைதியாக இருந்ததைப்போலத் தெரிந்தது. மாபெரும் சோகம் அல்லது அராஜகம் நடந்தவுடன் அந்த இடத்தைப் பற்றிக்கொள்ளும் அமைதி அது. அந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள் இருந்தாலும் தனித்தனியாக அவர்களின் முகங்கள் தொலைந்துவிட்டிருந்தன.

புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே முகம் சில்லிட்டது, கண்களில் கண்ணீர் வழிந்தது. கடந்த காலத்துக்காக நான் அழவில்லை, நிகழ்காலத்துக்காகவே அழுகிறேன். காந்தியைக் கொன்றவர் ஒரு காலத்தில் உறுப்பினராக இருந்த ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பிரிவுதான் இப்போது இந்தியாவை ஆள்கிறது. அப்போதிருந்ததைப் போலவே இப்போதும் வன்முறையான வார்த்தையாடலில் அது பெருமிதம் கொள்கிறது. ஏழைகளின் முகங்கள் அப்போதும் இப்போதும் ஒன்றேதான். உழைத்துக் களைத்த தொழிலாளி, உடைந்து நசுங்கிய தன்னுடைய பூட்ஸ்களுக்கு அருகில் உறங்குகிறார். இந்த ஆண்டு பசு குண்டர்களால் சுற்றி வளைத்து அடித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் பண்ணைத் தொழிலாளி பெஹ்லூ கான், தனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி சுற்றியிருப்பவர்களிடம் கரம்குவித்து மன்றாடுகிறார். கடந்த காலத்தில் நடந்தவை அனைத்தும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் முடிவில்லாமல் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன.

ஃபாத்திமா புட்டோ, பாகிஸ்தான் எழுத்தாளர்

இந்தியாவுக்கு அந்தப் பெயரைத் தந்த சிந்து நதி, சிந்து மாகாணத்தில் என்னுடைய சொந்த ஊர் வழியாகத்தான் பாய்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வரலாற்று, கலாச்சார பொதுச் சொத்தாகத் திகழ்வது மொகஞ்ச தாரோ, சிந்துநதிக்கரையோர நாகரிகத்தில் முகிழ்த்தது. சமகாலப் பிரிவினைகள் எப்படியிருந்தாலும் கடந்த காலத்தில் நாம் ஒரே பிரதேசமாக, கலாச்சாரமாக, இனமாகவே வாழ்ந்திருக்கிறோம். சிந்து மாகாணத்தில் மகான் உதேரோ லாலிடம் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே பிரார்த்திக்கின்றனர். அவர் பல வடிவங்களைக் கொண்டவர். சிந்தி முஸ்லிம்கள் அவரை கலந்தராகப் பார்க்கின்றனர். மத்திய கிழக்கிலிருந்து யாத்திரை புறப்பட்ட அவர் சூஃபிகளில் ஒருவர். இந்துக்கள் அவரை வருணக் கடவுளின் மறு அவதாரமாக வழிபடுகின்றனர்.

என்னுடைய சிறு வயதில் பல நாட்களை மொகஞ்ச தாரோ செங்கற்களுக்கருகே செலவிட்டிருக்கிறேன். என்னுடைய சகோதரன் உதேரோ லாலை தரிசிக்க அடிக்கடி செல்வான். கராச்சியிலிருந்து புறப்பட்டு செவான் ஷரீஃப் என்கிற சூஃபி கோயிலின் தங்க விதானத்துக்குக் கீழே அமர்ந்திருப்போம். லால் ஷாபாஸ் கலந்தருக்கு அனைவரும் ரோஜா மலர்களைக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். கடந்த ஆண்டு ஐ.எஸ். அமைப்பு அந்த வழிபாட்டிடம் மீது குண்டுவீசியது. முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் ஒற்றுமையாகச் செல்லும் வழிபாட்டிடம் என்பதற்காகவே தாக்கப்பட்டது. செவான் என்ற பெயரே சிவன் என்பதிலிருந்து வந்தது என்று நம்பப்படுகிறது. சிந்திகளின் ஒற்றுமைக் கலாச்சாரம், நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த சமரச சகவாழ்வு, கொந்தளிப்பான இந்த நேரத்திலும் நிலவும் சமரசம் ஆகியவை எழுபதாண்டுப் பிரிவினையைக் கடந்தும் நிற்கும்.

© ‘தி கார்டியன்’, சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x