Last Updated : 18 Aug, 2017 09:40 AM

 

Published : 18 Aug 2017 09:40 AM
Last Updated : 18 Aug 2017 09:40 AM

இணைய களம் - ஜி-போர்டு: எழுத்துகளாக மாறும் குரல்

கூகுள் அட்டகாசமான ஒரு வேலை யைச் செய்திருக்கிறது. நண்பர்கள் சிலர், இணையத்தில் தமிழில் எழுதவேண்டும் ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை எனும்போது, என்.எச்.எம். மென்பொருளை கணினிக்கும், செல்லினம் (Sellinam) செயலியை அலைபேசிக்கும் பரிந்துரைப்பேன்.

இதுவல்லாமல் ‘கூகுள் இன்புட்’ வழியாக எழுதுகிறவர்களும் உண்டு. எனக்கு அது தோதாக இல்லை. அடுத்து என்ன எழுதவேண்டும் என்று ஒவ்வொரு சொல்லுக்கும் எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருந்தால், நாம் எதைச் சுயமாக எழுதுவது? செல்லினம் அப்படி இல்லை. ஒரு 'ஃ' வைத்தாலும் அதை நாமே எழுத வேண்டும். எங்கே எழுத்துப்பிழை விடுகிறோம் என்று நமக்குப் புரிபடும். சரி விஷயத்துக்கு வருகிறேன். ‘ஜி-போர்டு தி கூகுள் கீபோர்டு’ (G-Board the Google Keyboard) என்கிற புதிய செயலியை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது. 22 எம்.பி. நிறை உள்ள இந்த செயலி மூலமாக இனி தமிழில் பேசினாலே அது எழுத்தாகத் தட்டச்சு ஆகிவிடும். முன்பு ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளுக்கு மட்டுமே இருந்த இவ்வசதி இப்போது ஜி-போர்டு வழியாக பிராந்திய மொழிகளுக்கும் அறிமுகமாகிறது.

இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ், சிங்கப்பூர் தமிழ் என்று மூன்று பிராந்திய மொழி இசைவுகளை கூகுள் நீங்கள் பேசப் பேச தமிழில் இடுகையிடுகிறது. இதே போல் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் குரல் தட்டச்சு முறையைக் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் வாட்ஸப், ஃபேஸ்புக், ட்விட்டர், தேடுபொறி என்று எங்கும் பேசியே எழுத்தைப் பதிவாக்கலாம்.

சங்கடம் என்னவென்றால், பொதுத் தமிழ் என்கிற பாடத் தமிழில்தான் அதில் எழுத முடியும்போல. ‘‘இங்கன நிக்கேன்.. நீ எப்ப வார. சீக்கரம் வந்து தொல’’ என்றால் திணறிவிடும் ஜி-போர்டு! மற்றபடி பயன்படுத்திப் பார்த்ததில் ‘இனிய காலை வணக்கம் தோழி‘ எல்லாம் ஒரே நொடியில் குரலில் இருந்து எழுத்துகளாக மாறுகிறது. ‘சாட்டையடிப் பதிவு தோழி’ என்று பின்னூட்டம் இடுவதும் இனி எளிதாகிவிடும்!

தமிழில் தட்டச்சு செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று இனிமேல் யாராவது கூறுவார்களா என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x