Published : 15 Aug 2017 09:17 AM
Last Updated : 15 Aug 2017 09:17 AM

இந்திய சுதந்திரம் : விழுமியங்கள் இன்றி வளர்ச்சி இல்லை!

ங்கிலேயரின் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற 71-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம் என்று மிகப் பெரிய லட்சியங்களோடு தொடங்கிய பயணம் இது. நமது பாதையில் இதுவரையில் அடைந்த இலக்குகளைக் கண்டு மகிழ்ச்சியடைவதைக் காட்டிலும், இன்னும் எட்டிப் பிடிக்க வேண்டியவை ஏராளம் என்பதை இந்தச் சுதந்திர நாளில் மீண்டும் ஒரு தடவை நினைவுகூர வேண்டிய அவசியம் உண்டாகியிருக்கிறது.

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியர்களின் ஆயுட்காலம், எழுத்தறிவு, தனிநபர் வருமானவிகிதம் ஆகியவை அதிகரித்திருக்கின்றன என்பதை மறுப்பதிற்கில்லை. அதேநேரத்தில், முதியோர்கள் தங்கள் ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ளும் வகையில் சேமிப்பு, மருத்துவ வசதிகள், சுகாதாரமான சுற்றுச்சூழல் இங்கு இன்னும் உருவாகவில்லை. உருவாகியிருக்கும் வசதிகளை அனைத்துத் தரப்பினரும் பெற முடியாத நிலைக்கு உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருப்பது உதாரணம் ஆகியிருக்கிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5%-க்கும் குறைவான தொகையைத்தான் பொதுச் சுகாதாரத்துக்காகச் செலவிடுகிறோம். கல்வித் துறைக்கு நாம் ஒதுக்கும் தொகை அதைவிடவும் குறைவு. தொடக்கப் பள்ளிகளில் சேரும் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முழுமையாக நிறைவுசெய்வதில்லை. 10%-க்கும் குறைவானவர்களே உயர் கல்வியை எட்டி பட்டத்தைத் தொட முடிகிறது. அப்படிப் படித்து முடித்தவர்களுக்கும் உத்தரவாதமான வேலைவாய்ப்புகள் இல்லை. சரிபாதி மக்கள் தொழிலாகக் கொண்டிருக்கும் விவசாயத்தை வளர்த்தெடுக்கவும் தவறிவிட்டோம். விவசாயத்தைப் புறக்கணித்ததன் மூலமாக மக்கள் சுயசார்புடன் வாழ்வதற்கான வாய்ப்பையும் இழந்துவருகிறோம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியே சாதனையாகவும் இலக்காகவும் முன்வைக்கப்பட்டாலும் அதை அடையவும் கூட அமைதியும் சமூக நல்லிணக்கமும் முக்கியம் என்பதை ஆளும் வர்க்கம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சாதி, மத அடிப்படையில் மோசமாகப் பிளவுண்டு கிடக்கிறது இந்திய அரசியல். மத துவேஷங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. மதரீதியாக மக்களை ஒருங்கிணைத்து அரசியல் வெற்றிகளைப் பெறும் முயற்சிகள் இந்தியாவின் அடிப்படை ஆதாரக் கொள்கைகளில் ஒன்றான மதச்சார்பின்மைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேல் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கும் எண்ணற்ற இனங்களின் பிரதிநிதித்துவத்துக்கும் அடிநாதமாக இருந்த மாநிலங்களின் உரிமை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தியாவின் தனிச் சிறப்பான பன்மைத்துவம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது.

இந்திய சுதந்திரத்துக்காகத் தங்கள் உயிரையும் உழைப்பையும் அளித்த ஒப்பற்ற தலைவர்களின் கனவு, அரசியல் சுதந்திரம் மட்டுமே அல்ல. இந்தியக் குடிமக்கள் சமூக, பொருளாதார அடிப்படையிலும் சமத்துவத்தைப் பெற வேண்டும் என்பதும்தான். துல்லியமாகச் சொல்லப்போனால் சமத்துவம், சமப் பிரதிநிதித்துவம், முக்கியமாகப் பன்மைத்துவம் ஆகியவைதான் உண்மையான சுதந்திரத்துக்கான பொருளாகவும் இருக்க முடியும். ஆகவே, சுதந்திரத்தை நினைவுகூர்வதைப் போலவே அது நமக்களித்த பொறுப்புகளை நினைவில் கொள்வதும் முக்கியம். நாட்டின் அடுத்தடுத்த வளர்ச்சியையும் இந்த உயர்ந்த விழுமியங்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவமே தீர்மானிக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x