Published : 21 Aug 2017 09:36 AM
Last Updated : 21 Aug 2017 09:36 AM

எங்கள் வாழ்வில் சென்னை!

செ

ன்னை மாநகரின் வயது 378. இந்தப் பகுதியின் காலம் சுமார் 1,000 ஆண்டுகளிலிருந்து 2,000 ஆண்டுகள் வரையில் இருக்கும் என்கின்றன சென்னையைச் சுற்றியுள்ள பல இடங்களில் கிடைத்திருக்கும் தொல்லியல் சான்றுகளும் கல்

வெட்டுகளும் பிற ஆவணங்களும். சுதந்திரப் போராட்டம், மொழிப் போராட்டம் கண்ட மாநகரம் இது. வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை வகிக்கும் நகரம். பலதரப்பட்ட மக்களும் ஒற்றுமையுடன் வாழுமிடம். தொழில், வர்த்தக மையம். கலைகளின் உறைவிடம். மருத்துவத் துறையின் கலங்கரை விளக்கம் என்று பல சிறப்புகளைக் கொண்ட நகரம்.

தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகம், ஆசியாவிலேயே பெரிய மருத்துவமனை, பெரிய பேருந்து நிலையம் என்று பல்வேறு விஷயங்களுக்கு முன்னோடியான நகரம். யாரையும் தன்னிடமிருந்து விலக்காத மாநகரம் சென்னை. தங்கள் வாழ்விலிருந்தும் பார்வையிலிருந்தும் சென்னையின் முக்கியத்துவத்தை, சிறப்பை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்கள் இவர்கள்:

பன்மைத்துவ நகரம்

பழமையும் பண்பாடும் தொழில்நுட்பப் புதுமைகளும் ஒருங்கே கொண்டது சென்னை. கோயில்களில் குறையாத கூட்டமும் தகவல் தொழில்நுட்பத் துறையில் குன்றாத முன்னேற்றமும் சென்னையின் தனிச்சிறப்புகள். இறைவழிபாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ராஜாஜியும் கடவுள் மறுப்பைத் தனது கொள்கையின் அடிநாதமாகக் கொண்டிருந்த பெரியாரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தது சென்னையில்தான். பாரதி, ‘வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திருநாடு’ என்று சொன்னார். இன்று கன்னடர்களும் தெலுங்கர்களும் உணர்கின்ற இன, மொழிப் பற்றை அன்றே செயலில் காட்டியது சென்னை மண். 1857-ல் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்று, சென்னைப் பல்கலைக்கழகம். நாடகம், சினிமா என்கிற ஊடகங்களில் வலிமையை இந்தியாவில் முதலில் உணர்த்தியதும் சென்னைதான். உலக அளவிலும் இந்திய அளவிலும் சீரழிந்த அரசியல் கூறுபாடுகள் இன்று சென்னையையும் அதிகமாக பாதித்திருப்பதை குதிரை பேர அரசியல் காட்சி கள் உணர்த்துகின்றன. ஆனாலும், நூற்றாண்டுகளாய் கனிந்த அரசியல் சமுதாய உணர்வுகள் மறுபடியும் சென்னையை உன்னத நிலைக்குக் கொண்டுசெல்லும் என்றே நம்புகிறேன்.

சென்னை மீண்டெழும்

பொறியியல், தகவல் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களின் கனவுக்கோட்டை சென்னை. வெளிநாடுகளுக்குப் போய் சம்பாதிக்க விரும்புகிறவர்களுக்கான முதல்படியும் இதுதான். பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு வேலை தரக்கூடிய அளவுக்கு சென்னையின் ஐ.டி. துறை வளர்ந்து நிற்கிறது. கிராமத்துக்கு ஒருவர் என்ற நிலை மாறி, குடும்பத்துக்கு ஒருவரை சென்னை கவர்ந்திழுத்தது. ஈரோட்டைச் சேர்ந்த நானும் அப்படித்தான் சென்னை வந்தேன். நல்ல வேலை. கை நிறையச் சம்பளம். குடும்பத்துக் குப் பணம் அனுப்பவும், வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கிக் குவிக்கவும் உதவுகிற நகரம் சென்னை. இன்று தமிழகத்தில் பல வீடுகளில் எல்.இ.டி. தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள், குளிர்சாதனப் பெட்டிகள் எல்லாம் இருக்கின்றன என்றால் அதில் சென்னை ஐ.டி. துறைக்குப் பெரிய பங்கு உண்டு. இப்போது சென்னை ஐ.டி. துறையின் சோதனைக் காலமாக இருப்பது உண்மைதான். எனினும், எத்தனையோ இடர்ப்பாடுகளை வென்ற இதிலும் மீண்டெழும் என்று உறுதியாக நம்புகிறேன்!

நம் உலகத்தை விரிக்கும் நகரம்!

எனக்குச் சொந்த ஊர் மதுரை. வேலை, போட்டித் தேர்வு எனும் ஒரு அம்சம்தான் 1970-களில் சென்னையை நோக்கிப் புறப்படவைத்தது. சென்னையில் மேன்ஷன்களில் தங்கி வேலைபார்த்துக்கொண்டிருந்த எங்கள் ஊர் நண்பர்கள்தான் ஒரே ஆதரவு. இரவுகளில் மொட்டை மாடிகளில் தூங்குவோம். ஒரு கட்டத்தில் கூட்டுறவுச் சங்க முதுநிலை ஆய்வாளராகச் சேர்ந்தேன். மதுரையில்தான் பணி. பிறகு சென்னைக்குப் பணி மாற்றலாகி, ஓய்வு பெற்றுவிட்டேன். என்னுடன் வேலையில் சேர்ந்த பிற மாவட்டத்துக்காரர்களில் 70% பேர் இன்றைக்கு சென்னையில்தான் நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார்கள்.

நம் உலகத்தை விரிவடையச் செய்யும் நகரம் இது. சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், பணி நேரத்துக்குப் பிறகு மாலையில் கோடம்பாக்கத்தில் சுற்றிக்கொண்டிருப்பேன். சினிமா மட்டுமல்ல, இலக்கியம், பத்திரிகைத் துறை என்று வெவ்வேறு விஷயங்களில் ஆர்வமுடையவர்களுக்கு வாய்ப்புகள் இங்கு அதிகம். என் வாரிசுகளும் சென்னையிலேயே தங்கிவிட்டதால், மதுரைக்கு அவ்வப்போது சென்று வருவதைத் தாண்டி, சென்னையிலேயே ‘செட்டில்’ ஆகிவிட்டேன். 70-களில் நான் பார்த்த சென்னைக்கும் இன்று இருக்கும் சென்னைக்கும் நிறைய வித்தியாசங்கள், கால மாற்றங்கள். ஆனால், இன்றைக்கும் மாறாமல் இருப்பது சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட சென்னை மக்களின் அன்பு!

பாரம்பரியத்தின் சின்னம்

இந்தியாவின் தலைமை நில அளவையாளராகப் பணியாற்றிய காலின் மெக்கன்சி, தமிழக வரலாற்றைப் பற்றிய அரிய வரலாற்று ஆவணங்களைத் தொகுத்தவர். அவர் எழுதிவைத்த கையெழுத்துச் சுவடிகளில், சென்னை நகரத்தின் வரலாறு பற்றிய முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று ‘கிரேட்டர் சென்னை’ என்று அழைக்கப்படுகிற மாநகர எல்லைப் பகுதி குறும்பர்களின் ஆட்சியின்கீழ் இருந்திருக்கிறது. அவர்கள் ஆட்சி செய்த 24 கோட்டங்களில் புலியூர்க் கோட்ட மும் ஒன்று. இந்தப் புலியூர்க் கோட்டத்தின்கீழ் பூந்தமல்லி, மாங்காடு, அடையாறு, திருவான்மியூர், தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய ஊர்கள் இருந்திருக்கின்றன. 300 சதுர கிலோ மீட்டருக்கும் மேல் புலியூர்க் கோட்டம் விரிந்து பரந்திருக்கிறது. மன்னராட்சியின்கீழ் இருந்த புலியூர்க் கோட்டத்தை ஆளுநர்கள் நிர்வாகம் செய்திருக்கிறார்கள். கிராம சபைகள் மூலமாக உள்ளாட்சி சிறந்து விளங்கியிருக் கிறது. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் அதைச் சுற்றியிருந்த பகுதிகள் புலியூர்க் கோட்டத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே.

கி.பி. 5-ம் நூற்றாண்டில் ஆழ்வார்களும் கி.பி. 7-ம் நூற்றாண்டில் நாயன்மார்களும் பாடிய பல திருத்தலங்கள் சென்னைப் பகுதி யில் உள்ளன. திருவான்மியூர், திருவல்லிக்கேணி, பாடி, மதுரவாயல், திருநின்றவூர், திருமயிலை ஆகிய பாடல் பெற்ற தலங்கள் சென்னை மாநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளன. சென்னையைப் போன்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கலை இலக்கியப் பாரம்பரியம் கொண்ட நகரங்கள் மிகவும் குறைவுதான். அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது என்பது நமக்கு மேலும் பெருமை!

பூர்வகுடிகளின் உயர் பண்பு

என் சொந்த ஊர் என்பதால் மட்டுமல்ல, வந்தாரை வாழவைக்கும் பூமி என்பதால் எனக்குச் சென்னையைப் பிடிக்கும். உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையும், உழைப்பாளர் சிலையும் அதன் அடையாளங்கள். வந்தாரை வாழவைக்கும் பூமி என்பதே, இங்குள்ள பூர்வகுடி மக்களுக்குப் பிரச்சினையாகவும் மாறிவிட்டது. மாநிலம் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டங்களையும், தொழில் நிறுவனங்களையும் சென்னையிலேயே குவித்து பூர்வகுடிகளை அவர்களின் குடியிருப்புகளில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். வெள்ளைக்காரர்கள் கூட பூர்வகுடி மக்களை அருகிலேயே வைத்திருந்தார்கள்.

ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு சென்னையை வளர்க்கிறோம், அழகுபடுத்துகிறோம் என்று குடிசைகளை அப்புறப்படுத்தினார்கள். வாழ்வாதாரமாக இருந்த நகரத்தில் இருந்து பிய்த்து எடுத்து, தொலைதூரத்தில் குடியமர்த்திவிட்டு, அவர்களைச் சமூக விரோதிகள் என்றும் முத்திரை குத்தினார்கள். சென்னை வாசிகள் சுயநலவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருந்தவர் கள் எல்லாம், வெள்ளம் வந்தபோது படகுடன் வந்து மீட்புப் பணியில் அம்மக்கள் ஈடுபட்டபோதுதான் அவர்களின் உயர்ந்த பண்பை உணர்ந்துகொண்டார்கள். அவர்கள் இல்லா மல் சென்னையில்லை என்ற புரிதலுடன், அவர்களையும் இணைத்துக்கொண்டு ‘சென்னை விழா’ கொண்டாடுவதுதான் சரியாக இருக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x