Published : 16 Aug 2017 09:28 AM
Last Updated : 16 Aug 2017 09:28 AM

குழந்தைகள் மரணத்தில் உங்களுக்குப் பொறுப்பில்லையா ஆதித்யநாத்?

கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது நாட்டையே துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தத் துயரச் சூழலில், ‘தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்ற அதிகாரத் தரப்பின் வழக்கமான மந்திரத்தை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உச்சரித்திருப்பது, கொந்தளிப்பை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

தலைமைச் செயலாளரின் தலைமையில் விசாரணை ஆணையத்தையும் அவர் நியமித்திருக்கிறார். குழந்தைகளின் மரணத்திற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.கே. மிஸ்ராவைக் காரணமாக்கி அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். மிஸ்ரா இடைநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

நிர்வாகத்தின் சீர்கேட்டுக்குத் தனிப்பட்ட ஒரு மருத்துவரை மட்டும் பொறுப்பாக்குவது எப்படி நியாயமாகும்? அவசரமான காலகட்டங்களில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லையென்றால் ஒரு மருத்துவரால் எப்படி சிகிச்சையளிக்க முடியும் என்று மருத்துவர்களின் தரப்பிலிருந்து குரல்கள் எழுந்துள்ளன. எல்லாவற்றிலும் உச்சம், தனது சொந்தச் செலவில் சிலிண்டர்களை வாங்கிவந்து பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய கஃபீல் கான் என்ற மருத்துவரை இடைநீக்கம் செய்திருப்பதுதான்.

மூளைச் சாவுகளின் காரணமாகவே குழந்தைகள் இறந்தார்கள் என்கிறார் ஆதித்யநாத். மூளைக் காய்ச்சலின் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் போனதால் உயிரிழக்க நேர்ந்தது என்று ஒப்புக்கொள்வதற்கு அவர் தயாராக இல்லை. ஆனால், குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களும், அவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் தவித்த மருத்துவர்களும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையே குழந்தைகளின் மரணத்துக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார்கள்.

கமிஷன் ஆட்சி

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறைக்குக் காரணம், அதற்குரிய தொகையைச் செலுத்தாமல் மருத்துவமனை நிர்வாகம் பாக்கி வைத்தது. பாக்கி வைத்ததற்குக் காரணம் சிலிண்டர் விநியோகிப்பவர்களிடம் இன்னும் கூடுதலான கமிஷனை எதிர்பார்த்தது என்று அவலட்சணங்கள் ஒவ்வொன்றாய் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

கோரக்பூர் பி.ஆர்.டி மருத்துவமனை, ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கிவரும் நிறுவனத்துக்கு ரூ.63 லட்சம் தொகையை நிலுவையில் வைத்துள்ளது. நிலுவைத் தொகையைக் கேட்டு அந்நிறுவனம் தொடர்ந்து நினைவூட்டல் கடிதங்களை அனுப்பிவைத்திருக்கிறது. இக்கடிதங்களின் நகல்கள் மாவட்ட ஆட்சியர் தொடங்கி மருத்துவத்துறை முதன்மைச் செயலர் வரைக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. நிலுவைத்தொகை தரப்படாவிட்டால் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கையையும்கூட அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சிலிண்டரின் விலையில் கூடுதல் கமிஷன் கேட்டுக் கிடைக்காததால் அந்நிறுவனத்தின் கடிதங்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

உயிர்காக்கும் சிகிச்சையிலும் கமிஷனை எதிர்பார்க்கிற, கமிஷனுக்காக உயிர்கள் போனாலும் கவலைப்படாத நிர்வாகம்தான் உத்தர பிரதேசத்தில் நடந்துகொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. மத்திய, மாநில அரசுகள் கல்வி, மருத்துவத்துக்கான நிதிஒதுக்கீட்டைக் குறைத்துக்கொண்டே வரும் போக்கின் விளைவுகளுள் ஒன்றாகவும் இன்று உத்தர பிரதேசத்திலும் நாட்டின் ஏனைய மாநிலங்களும் பொது சுகாதார/ மருத்துவத் துறை வீழ்ச்சியடைந்துகொண்டிருப்பதைக் கருத வேண்டும்.

பசுக்களா, குழந்தைகளா?

இதே முதல்வர்தான், கோசாலைகள் கட்டுவதற்கு ரூ. 40 கோடி நிதிஒதுக்கீடு செய்கிறார். பசுக்களின் உயிர் அளவுக்குக் குழந்தைகள் உயிர்மீது அவருக்கு அக்கறை இல்லையா என்றுதான் நமக்குக் கேட்கத் தோன்றுகிறது! ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆதித்யநாத் நடந்த பேரழிவுக்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், பதவிகளுக்காக மத துவேஷத்தை வளர்த்தெடுக்கத் தயங்காதவர்கள், தார்மீகப் பொறுப்பேற்றுப் பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்ப்பதோ அல்லது அப்படி செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதோ நகைமுரணாகத்தான் இருக்கும். குறைந்தபட்சம், இனிமேலாவது இத்தகைய துயர நிகழ்வுகள் நடந்தேறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்தானே. ஆனால், ஆதித்யநாத்தின் பேச்சு அந்த நம்பிக்கையையும்கூட இல்லாமல் செய்துவிடுகிறது. அவர் மீண்டும் மீண்டும் குழந்தைகளின் மரணங்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கடமைகளிலிருந்தும் பொறுப்புகளிலிருந்தும் நழுவ முயற்சிக்கிறார்.

மூளைக் காய்ச்சல்தான் காரணமா?

மூளைக் காய்ச்சல்தான் குழந்தைகளின் மரணத்துக்குக் காரணம் என்று சமாளிக்கத் தெரிந்த ‘யோகி’க்கு அந்நோய் எப்படி தொற்றுகிறது என்று தெரியாதா என்ன? பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாமையும் சுகாதாரத்தில் நிலவும் குறைபாடுகளுமே மூளைக் காய்ச்சல் உருவாவதற்கும் பரவுவதற்கும், பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் குடிப்பதற்கும் காரணம். குடிநீர், சுகாதார வசதிகளை மேம்படுத்தி தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பில்லையா? நோய் ஏதோ வானிலிருந்து ஏவப்பட்டது போன்றும், அதைத் தடுப்பூசி கொண்டு தடுத்துவிடலாம் என்றும் ஆதித்யநாத் கூறுவது வேடிக்கை என்றாலும் வேதனையின் உச்சம்.

கோரக்பூர் மருத்துவமனைக்குக் கடந்த மாதம்தான் ஆய்வுக்குச் சென்றிருக்கிறார் முதல்வர் ஆதித்யநாத். அப்போது அங்கு ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா, அரசிடமிருந்து உதவி தேவைப்படுகிறதா என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் கேட்டதாகவும், அவர்கள் ஆக்ஸிஜன் வசதிக் குறைபாடுகளைப் பற்றி எதுவும் கூறவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். மருத்துவமனை நிர்வாகத்துக்கு நிலுவைத்தொகையை நினைவூட்டி எழுதப்பட்ட கடிதத்தின் நகல் சுகாதாரத்துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டிருந்தும்கூட மாநில அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்பதன் உதாரணம்தான் இந்த நெஞ்சைப் பதறவைக்கும் இழப்பு. ஆனால், அரசின் தவறை மறைக்க எதையெல்லாம் காரணமாகக் காட்ட முடியுமோ அத்தனை வேலைகளையும் மும்முரமாகச் செய்துகொண்டிருக்கிறார் ஆதித்யநாத். பழியிலிருந்து தப்பிக்க இன்று எடுக்கிற முயற்சிகளில் கொஞ்சமேனும் மருத்துவமனைகள் ஒழுங்காக இயங்குகின்றனவா என்று கண்காணிப்பதிலும் காட்டியிருந்தால் எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர்களைப் பறிகொடுத்திருக்க நேர்ந்திருக்காது.

கோரக்பூர் பி.ஆர்.டி மருத்துவமனை, கிழக்கு உத்தர பிரதேசம் முழுவதற்குமான மருத்துவமனையாகவே இருந்துவருகிறது. பிஹார் மாநிலத்திலிருந்தும்கூட இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறார்கள். தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கே சிகிச்சை பெற வருகிறார்கள். எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த பிறகும்கூட மாநில அரசின் பொறுப்பற்ற தனத்தை உலகமே அறிந்துகொண்ட பிறகும்கூட இன்னமும் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தினந்தோறும் சிகிச்சைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அதையும் விட்டால் அவர்களுக்கும் வேறு கதியில்லை என்பதுதான் கொடுமை.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x