Last Updated : 10 Aug, 2017 09:58 AM

 

Published : 10 Aug 2017 09:58 AM
Last Updated : 10 Aug 2017 09:58 AM

இதழியலில் எழுபது ஆண்டுகள்!

த்திரிகையாளராக 70 ஆண்டுகள் பணிபுரிவது என்பது அசாத்தியமான சவால். ‘சான்பிரான்சிஸ்கோ கிரானிகல்’ பத்திரிகையில் பணியாற்றிய டேவிட் பேர்ல்மேன் (99) அலட்டிக்கொள்ளாமல் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார். இந்த மாதம்தான் ஓய்வுபெற்றிருக்கிறார் பேர்ல்மேன். அதுவும் தன் விருப்பத்தின் பேரால்!

அறிவியல் ஆர்வம்

அறிவியல் செய்திகளைத் தொடர்ந்து எழுதிவந்த பேர்ல்மேன் 1918-ல் பிறந்தவர். 21-வது வயதில் பத்திரிகையாளர் ஆனார். இரண்டாவது உலகப் போர் சமயத்தில் ராணுவத்தில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு. 20-வது நூற்றாண்டின் அறிவியல் யுகத்தில் தொடங்கி, 21-வது நூற்றாண்டில் கணினி யுகம் வரையில் பணி செய்திருக்கிறார். பல விருதுகள் பெற்றவர். அவருடைய பெயரிலேயே பல விருதுகள் வழங்கப்படும் அளவுக்குப் புகழ்பெற்றவர்.

சுமார் 5 ஆண்டுகள் ‘நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன்’ பத்திரிகையின் ஐரோப்பியப் பதிப்பில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பணியாற்றினார். பிறகு, மீண்டும் சான் பிரான்சிஸ்கோ கிரானிகலுக்கே திரும்பிவிட்டார். நிருபராக வேலைக்குச் சேர்ந்த புதிதில், எல்லா இளைஞர்களைப் போலவே கிரைம் செய்திகளில்தான் ஆர்வம் காட்டியிருக்கிறார். எங்காவது கொலை என்றால் உற்சாகத்தோடு போய்விடுவார் செய்தி சேகரிக்க. 1957-ல் கடலில் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நிலைதடுமாறி விழுந்ததில், கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். ‘தி நேச்சர் ஆஃப் தி யூனிவெர்ஸ்’ என்ற புத்தகத்தை அங்கிருந்த மருத்துவர் படிக்கக் கொடுத்தார். ஆர்வமில்லாமல்தான் படிக்கத் தொடங்கினார் பேர்ல்மேன். படித்த பிறகு மனம் மாறியது. இதைப் போலவே நாமும் அறிவியல் செய்திகளைத் தர வேண்டும் என்று அன்றைக்கு முடிவெடுத்தார்.

பேர்ல்மேனின் எச்சரிக்கை

அவர் பணியில் சேர்ந்தபோது லைனோ என்ற முறையில் வரிவரியாக எழுத்துகளை இயந்திரத்தில் உருவாக்கி அச்சிடும் முறை தான் இருந்தது. செய்திகளைத் தர அலுவல கத்தில் டைப்-ரைட்டரைத்தான் பயன்படுத்தினார்.

வெளியே செல்லும்போது போர்ட்டபிள் டைப்-ரைட்டரைக் கையில் கொண்டுபோய் செய்தியை அடித்து அனுப்புவார். நேரம் குறைவாக இருந்தால் தொலைபேசி மூலம் அலுவலகத்துக்கு செய்தி தந்துவிடுவார். இணையதளம் புழக்கத்துக்கு வந்ததும் உலகமே பெரும் தகவல் புரட்சிக்கு ஆளாகிவிட்டது என்று நினைவுகூர்கிறார்.

அவருடைய இப்போதைய வருத்தம் எல்லாம் அமெரிக்கப் பத்திரிகைகளில்கூட அறிவியல் செய்திக்கு ஒதுக்கும் பக்கங்களைக் குறைத்துவிட்டார்களே என்பதுதான். அறிவியல் என்பது மாணவர்களுக்கு அவசியமானது என்பதால் அதில் ஆர்வம் ஏற்பட பத்திரிகைகள் அறிவியல் செய்திகளை அதிகம் வெளியிட வேண்டும் என்கிறார்.

பருவநிலை மாறுதல், புவி வெப்பமடைதல் எல்லாம் வெறுமனே படித்துவிட்டுக் கடக்கக்கூடிய செய்திகள் அல்ல, நம்மை இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நேரடியாகப் பாதிக்கக்கூடிய நிகழ்வுகள் என்று எச்சரிக்கிறார்.

நல்ல உதாரணம்

20-வது நூற்றாண்டின் அத்தனை பெரிய அறிவியல் சாதனைகளையும் தங்களுடைய பத்திரிகையில் அவர்தான் தொடர்ந்து எழுதினார். பத்திரிகை நிர்வாகிகள், சக பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல வாசகர்களும் அவருடைய நடையை மிகவும் ரசித்துப் படித்தனர். எனவே, அவருக்கு ஓய்வு தர வேண்டும் என்றே நிர்வாகம் நினைக்கவில்லை. இப்போதும் அவராகத்தான் ஓய்வெடுக்கத் தீர்மானித்திருக்கிறார்.

தன்னைப் போலவே அறிவியல் பத்திரிகையாளராக விரும்பும் இளைஞர்களுக்கு அவர் சில உத்திகளைக் கூறுகிறார். முதலில் கலைப் பாடத்தை நன்கு படியுங்கள். பிறகு மானுடவியல், வானியல், இயற்பியல், உயிரியல் புத்தகங்களை வாசியுங்கள். விஞ்ஞானிகளை அணுகி அவர்களுடைய ஆய்வுகள், சாதனைகள் குறித்துக் கேளுங்கள். உற்சாகத்தில் அவர்களே உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் கூறுவார்கள் என்கிறார்.

அறிவியல் செய்திகளைச் சேகரிப்பதற்காக மட்டுமே உலகைச் சுற்றியிருக்கிறார். அன்டார்டிகா, தென் துருவம், அலாஸ்காவின் வட சரிவு என்று இயற்கையின் அழியாச் சின்னங்களைப் பார்வையிட்டதுடன் சீனா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த தலைமுறையினர் தாங்கள் கால் பதித்த துறையில் எந்த அளவுக்கு ஊன்றிக் களித்துப் பணியாற்றினர் என்பதற்கு பேர்ல்மேன் நல்ல உதாரணம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x