Last Updated : 18 May, 2017 08:05 AM

 

Published : 18 May 2017 08:05 AM
Last Updated : 18 May 2017 08:05 AM

முத்தலாக்: பேசியே ஆக வேண்டிய பிரச்சினை!

பிரதமர் நரேந்திர மோடி இதுவரை கையாண்ட வித்தைகள் அவருக்கு இன்னமுதையே வழங்கியுள்ளன. பிஹாரில் அவர் கையாண்ட வித்தை தோற்றாலும், சோர்ந்திடாமல் அடுத்தடுத்த தேர்தல் உத்திகளை வகுத்திருக்கிறார் என்பதைத்தான் அவரது அடுத்தடுத்த வெற்றிகள் காட்டுகின்றன. இப்போது அவரின் உயரம் பெரிது. எதைச் செய்தாலும் ஊசலாட்டம் இல்லாமல் செயல்படுகிறார். எதைச் சொன்னாலும் அச்சம் வெளிப்படுவதில்லை. அதில் அதிக பலன்களைப் பெற்றிருக்கிறார். அவருடைய பிரம்மாண்ட வெற்றிகள் அவரின் உத்திகளை அங்கீகரிக்கும்படி செய்கின்றது. இப்படியான சூழலில்தான் அவர் முத்தலாக் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரைக்குமான பெரிய ஆயுதம் இது; அதை விடாமல் பேசிக்கொண்டே இருக்கப்போகிறார். ஓர் அதிசயம் போல, முத்தலாக் என்ற நடைமுறையை முஸ்லிம்கள் ஒரே நிமிடத்தில் கைவிட்டு விட்டாலும்கூட தான் முன்னெடுத்த குரலை அவர் நிறுத்திவிடப்போவதில்லை. ஆனால், முத்தலாக் கைவிடப்பட்டதற்கான நடைமுறைச் சான்றுகளை முஸ்லிம் சமூகம் வெளியுலகத்தில் கொண்டுபோய் நிரூபிப்பது எங்ஙனம்?

பிளவுபடுத்தும் முயற்சி

முஸ்லிம் சமுதாயத்தை நாட்டின் இதர சமூகங்களிடமிருந்து தனிமைப்படுத்தும் அதே போக்கில், அவர் முஸ்லிம் பெண்களிடமிருந்தும் முஸ்லிம் ஆண்களைப் பிரித்தெடுக்கிறார். அந்தப் போக்கில் முஸ்லிம் பெண்களிடம் அனுதாபத்தையும் திரட்டிக்கொள்கிறார். இது சமூகத்தைச் செங்குத்தாகப் பிளக்கப் போகிறது. முஸ்லிம் பெண்களின் வாயால் பொது சிவில் சட்டம் தேவை என்று சொல்லும் நிலையை அவர் உருவாக்கக் கூடும். இப்போது உத்தர பிரதேசத்திலிருந்து வரும் முஸ்லிம் பெண் குறித்த செய்திகள் அனைத்தும் முத்தலாக் பற்றியனவாகவே இருக்கின்றன. இவையெல்லாம் தற்செயலாகவா நிகழ்கின்றன? மேலும், பொதுச் சமூகத்தின் முன் விவரிக்கப்படும் செய்திகள் இட்டுக் கட்டப்பட்டவை என்றும் சொல்ல வழியில்லை. நிச்சயமாக முஸ்லிம் சமுதாயத்துக்கு இது சோதனை மிகும் காலமே; சோதனைகள் மிகுமெனில் துயர்களும் மிகுமே!

மோடி எதைப் பேசினாலும் அதை இந்தியா எங்கும் கொண்டுசெல்லும் மகத்தான ஊடக பலம் இருக்கிறது; தலைப்புச் செய்தியாகவும் முன்னெடுக்கின்றன ஊடகங்கள். இவரின் குரலுக்கு மாற்றுக்குரலாக எதுவுமே இல்லை. ஆதலால், முஸ்லிம் சமூகம் எடுத்துரைக்கும் வாதங்கள் மக்கள் மத்தியில் போய்ச் சேரா. வேறு வழியில்லை; முஸ்லிம் சமூகம் முத்தலாக் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். மோடி பேசப்பேச பிரச்சினை இன்னும் பூதாகரமாக மாறும். சமூக நடைமுறைகளை மேலும் சிக்கலாக்கும். எல்லோருக்கும் தெளிவான விஷயம் - முத்தலாக் என்பது இஸ்லாத்தின் பொதுவான நடைமுறை அன்று. இஸ்லாமிய அறக் கோட்பாட்டுக்கு அது இசைவானதல்ல. அதனை இந்த அளவில் சமூகம் முட்டுக்கொடுத்துத் தாங்க வேண்டிய அவசியமும் இல்லை. தலாக்கை முறைப்படிப் பேணுவதால் சமூகத்துக்குப் பாதகமில்லை. துரித உணவு ; என்பதுபோல இது துரித நடைமுறை அல்ல. இஸ்லாமிய மாண்புகளைப் போற்றுவதாயின், பொறுமைதான் அதன் முதல் அவசியம்.

அதிகாரப் பற்று

தம்முடைய பிடிவாத நிலைப்பாடுகளைக் கைவிட்டு, இளைஞர்களின் மத்தியில் இந்த உண்மையை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் தேவ்பந்த் மதரஸாவும் தீவிரமாகக் கொண்டுசெல்ல வேண்டும். ஓர் அதிகாரத்தை இழக்கத் துணியாமல் சமூகம் தத்தளிப்பதன் மனநோய்க் கூறுதான் இப்படி முழுச் சமூகத்தையும் இன்னல் செய்கின்றது. அந்த அதிகாரம் ஆணாதிக்கம் சார்ந்ததே! சமூக நலன் சார்ந்த நடைமுறைகளுக்குரியது மார்க்கம். இதை மார்க்க அறிஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்த உணர்தலிலிருந்து சமூகத்தின் நடைமுறைகளை வகுக்க வேண்டும். அதே கையோடு மோடியின் வியூகத்தை முறியடிக்கும் எதிர்க் களத்தையும் உருவாக்க வேண்டும். இல்லையென்றால், எதிர்நீச்சல் இட முடியாத மோடி என்கிற நீர்ச்சுழல் முஸ்லிம் சமூகத்தை ஆழத்தில் மூழ்கடிக்கும்.

உள்முகப் பார்வை தேவை

முத்தலாக் இன்னல் செய்வதும் முஸ்லிம் பெண்களைத்தானே? இதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறோம்? அந்தப் பெண் நம்முடைய தாயாக இருக்கிறார்; நம்முடைய சகோதரியாக இருக்கிறார்; நம்முடைய மகளாக இருக்கிறார்; நம் சகோதரியின் மகளாக இருக்கிறார்; நம் பேத்திகளாகவும் கொள்ளுப்பேத்திகளாகவும் இருப்பதும் அவர்களே. இந்த அனைத்து உறவுமுறைகளும் ஓர் ஆணின் நேரடி ரத்த இழைகள் ஆகும். இந்த உறவுமுறைகளை எந்த வாள் கொண்டும் வெட்டி வீச முடியாது. ஒரு முஸ்லிமின் அதிகாரம் செல்லுபடியாவது அவரின் மனைவியிடம் மாத்திரமே. ஒரே ஒரு பெண்ணை (மனைவியை) அதிகாரம் செய்வதற்காக நாம் நம்முடைய அனைத்து உறவுகளையும் முத்தலாக் என்ற நெருப்புக்குண்டத்தில் தள்ளிவிடப் பார்க்கிறோம். இது எந்த அளவுக்குக் குடும்பப் பாசமாகும்? இது எந்த அளவுக்கு இறை பக்தியாகும்?

ஒரு குடும்பத்துப் பிரிவு ஆண்களை மட்டும் கொண்டிருப்பதாகவும், பிறிதொரு குடும்பப் பிரிவினர்தான் பெண் மக்களைக் கொண்டிருப் பதாகவும் கருத முடியுமா? ஒரு திருமண விவகாரத்தில் இன்று தம் மகனை முன்னிறுத்தி அதிகாரம் மிக்கோராய் ஒரு குடும்பத்தினர் இருந்தால், நாளையே தம் பெண் மகவை முன்னிறுத்தி அதிகாரமற்றோராகவும் அதே குடும்பத்தினர்தாம் இருப்பர். அதிகாரம் சுழல்கையில் இன்றைய முத்தலாக்கின் ஆதரவாளர் நாளையே அதன் எதிர்மைத் தன்மைக்குள் வந்துவிடுவார். அன்று நம் அவலக் குரல்களைக் கேட்கும் செவிகள் இராமல் போய்விடும். ஒவ்வொரு பிரச்சினை யிலும் இத்தகைய இருமை நிலைகளை மனத்தில் கொண்டே எதனையும் அணுக வேண்டும்.

பெண் கெளரவம்

காலம் மாறிவிட்டது. பெண்கள், ஆண்களைவிடவும் கல்வி கேள்விகளில் சிறந்துகொண்டிருக்கிறார்கள். பெண்ணியச் சிந்தனைகள் ஒவ்வொரு பெண்ணையும் கவ்விக்கொண்டுள்ளது. பெண் விடுதலைக்காகப் போராடும் இயக்கங்கள் எல்லா நாடுகளிலும் எல்லாச் சமூகங்களிலும் தோன்றியுள்ளன. இதர சமூகங்களின் அதே விகிதத்தில் இது முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் நிகழ்ந்தபடியிருக்கின்றது. காலத்தின் சிந்தனை வளர்ச்சிக்கு முகம்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு சமூகத்தின் நெருக்கடி மாத்திரமல்ல; அது அத்தியாவசியத் தேவையும்கூட.

இது பெண்கள் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்ற காலமும் அல்ல. அவர்கள் பணிக்குச் செல்கிறார்கள். அவர்களைப் பணிக்குச் செல்வதைத் தடுத்தால் குடும்பச் செலவுகள் மூச்சுமுட்ட வைத்துவிடும் என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில், பெண்ணுக்கு உரிய கௌரவமும் இடமும் அவர்களுக்கே உரியதுதானே? கொடுக்கும் இடத்தில் ஆண்களும் இல்லை; வாங்கித் தக்கவைக்கும் இடத்தில் பெண்களும் இல்லை.

மோடியின் அதிகாரத்தை வெட்ட நினைத்தால், கூடவே நம்முடைய அதிகாரத்தையும் வெட்டிவிடல் வேண்டும். இது மோடிக்கும் நமக்குமான பிரச்சினை அல்ல; நமக்கும் நம் குடும்பத்துப் பெண்களுக்குமான பிரச்சினை. ஆனால், மோடி அந்தப் பிரச்சினைக்குள் நம் அனுமதியைக் கோராமலும் கோர விரும்பாமலும் தன்னை முன்வைத்துவிட்டார். சமூகம் இதை மனங்கொள்ள வேண்டும். குடும்பத்தில் எதையும் பேசித் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உருவாக வேண்டும். இறைமறை எந்தக் காலத்துக்கும் எல்லாச் சமூகங்களுக்கும் பொதுவானது என்று உலகெங்கும் முழங்கிவரும் குரல்கள் முஸ்லிம் சமூகத்தின் குரல்களே! குர் -ஆன் இத்தன்மை கொண்டதாக இருக்கும்போது அவ்வக் காலங்களின் நெகிழ்வுத் தன்மை என்னவோ அதற்குள்ளே இறைமறையின் உட்கிடைகளைப் பொருத்தித் தீர்வு காண்பதே சமூகத்தின் உய்விப்புக்கு உகந்தது.

- களந்தை பீர்முகம்மது, ‘பிறைக் கூத்து’ முதலிய நூல்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: kalanthaipeermohamed@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x