Last Updated : 04 Jul, 2017 09:01 AM

 

Published : 04 Jul 2017 09:01 AM
Last Updated : 04 Jul 2017 09:01 AM

ஒரு நிமிடக் கட்டுரை: ஜிஎஸ்டி வரியும், வணிகர்களின் தந்திரமும்!

என்னுடைய பழைய பைக், ‘சுந்தரா டிராவல்ஸ்’ பஸ்ஸைப் போல புகை தள்ள ஆரம்பித்துவிட்டது. “மாமா, உங்க பைக் ராக்கெட் மாதிரியே போகுது” என்று பொடிப் பசங்க கேலி செய்கிறார்கள். போக்குவரத்துக் காவலர்கள் திட்டுவதைவிட, அழகான பெண்களைக் கடக்கிறபோது பெருத்த அவமானத்துக்கு ஆளாகிறேன். சிக்னலில் பின்னால் காத்திருப்பவர்கள் புகை நெடி தாங்காமல் இருமுகிறபோது, ‘கவுன்சிலர் சினேக் பாபு’ கொசு மருந்தடிக்கும் காட்சி எல்லாம் நினைவுக்கு வந்து பீதியை உண்டாக்குகிறது.

புதிய பைக் வாங்கும் நோக்கத்துடன் ஷோரூம் போனேன். ‘ஃப்ரீ ஜிஎஸ்டி ரேட்டில் வாங்கிப் பயன்பெறுங்கள்’ என்று ஏகத்துக்கும் விளம்பரம். ‘விலைக் குறிப்பு’ தந்த சீருடை அணிந்த இளம்பெண், “சீக்கிரம் எடுத்திடுங்க சார், விலை கூடுது” என்று அக்கறையாய் சொன்னார். நான் நன்றியோடு தலையாட்ட, “அவசரப்படாதடா, ஜிஎஸ்டிக்கு அப்புறம் 3,000 ரூபா குறையுது” என்று காதில் கிசுகிசுத்தான் அங்கே வேலை பார்க்கும் என் நண்பன். “அழகான பெண் சொல்வதை நம்புவதா, நண்பன் சொல்வதை நம்புவதா?” என்று ஒரே குழப்பம். அன்றைய மாலைப் பத்திரிகையில் ஜிஎஸ்டி வரியால், இருசக்கர வாகனங்கள் ரூ. 6,500 விலை உயர்வதாகப் போட்டிருந்தார்கள். எனக்குப் பகீர் என்றது. பட்ஜெட் சமயத்தில் எல்லாம் பொருளாதார நிபுணராக அவதாரம் எடுக்கிற ‘முதலாளி’ தர்மராஜிடம் கேட்டேன். “வெலை குறையுதான்னு தெரியல, குறைஞ்சா நல்லாயிருக்கும்” என்று ‘தெளிவு’படுத்தினார்.

1-ம் தேதி காலையில் பேப்பர் பார்த்தால், பைக் விலை ரூ. 3,000 குறைந்துவிட்டதாக விளம்பரம் வந்திருந்தது. இது 1 லட்சத்துக்கு உட்பட்ட அனைத்து பைக்குகளுக்கும் பொருந்தும் என்றது இன்னொரு செய்தி. எனக்கு வாயெல்லாம் பல். உடனே, ஷோரூம் நண்பனுக்கு போன் போட்டேன். “இதை ஏன்டா உங்காளுங்க வெளிப்படையாச் சொல்லித் தொலைக்க மாட்டேங்கிறாங்க?” என்றேன். “அடேய், தினமும் நல்லா வியாபாரம் நடக்கணும்கிறதுதான் வியாபாரிங்களோட ஆசை. ‘கொஞ்சம் பொறுங்க மக்களே.. 10 நாளில் விலைவாசி குறையுது’ன்னு சொன்னா, அந்த 10 நாளும் கடை காத்தாடிப்போகாதா?” என்றான். சிறு கார்கள் விஷயத்திலும் இதேதான் நடந்திருக்கிறது.

இந்த வியாபாரத் தந்திரத்தால் நிறைய பேர் 2, 3 மாதத்துக்குத் தேவையான பொருட்களை ஜூன் 30-ம் தேதி இரவே வாங்கிக் குவித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இப்போது என்ன மனநிலையில் இருக்கிறார்களோ தெரியவில்லை. அரசாங்க உத்தரவை ஜூலை 1-ம் தேதி காலையிலேயே அவசரமாக நடைமுறைப்படுத்திவிட்டார்கள் வியாபாரிகள். உணவகங்கள் தொடங்கி மருந்தகங்கள் வரையில். சிலர் கையால் பில் போட்டுத் தந்தார்கள். சாயந்தரமே போய்க் கட்டிவிடுவதைப் போல, மத்திய - மாநிலப் பங்கு என்று வரியை இரண்டாகப் பிரித்துக் காட்டியிருந்தார்கள். “எங்கள் கடையில் 01.07.17 அன்று 18,000 இட்லிகள் விற்பனையாகின. அதற்கான 18% ஜிஎஸ்டி வரி இது” என்று உடனுக்குடன் ஜேட்லியிடம் கணக்குத் தருவதைப் போலவே பாசாங்கு செய்கிறார்கள்.

25 ரூபாய் குடிநீர் கேன் விலையை 35 ரூபாயாக்கிவிட்டார்கள். 18% வரி என்றால், 4.5 ரூபாய்தானே வரி?, அதிலும் ஏற்கெனவே உள்ள வரியைக் கழித்துவிட்டால் இன்னும் குறையுமே. பிறகேன் 10 ரூபாய் உயர்த்துகிறார்கள்? வரி போடுவதை விலையேற்றத்துக்கான நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வது சில வணிகர்களின் தந்திரம். இப்போதும் அதையேதான் செய்திருக்கிறார்கள். மாநகராட்சிக்கே ஒழுங்காக வரி கட்டாத மேன்சன் உரிமையாளர்கள் எல்லாம்கூட, ஜிஎஸ்டியைக் காரணம் காட்டி, வாடகையை ரூ. 500 உயர்த்தியிருக்கிறார்கள். தமிழக அரசு அளித்த வரிவிலக்கின் பயனை நம்முடன் பங்குபோடத் தயாரில்லாத திரையரங்க அதிபர்கள், ஜிஎஸ்டியை நம்மீது சுமத்தப் பார்க்கிறார்கள். சிறுவணிகர்களே இப்படியென்றால், பெருவணிகர்கள் மறைமுகமாக என்னவெல்லாம் செய்வார்கள் என்று யோசித்தால், தலையே சுற்றுகிறது. அரசையே இயக்குகிறவர்கள் ஆயிற்றே?!

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x