Last Updated : 11 Nov, 2014 08:47 AM

 

Published : 11 Nov 2014 08:47 AM
Last Updated : 11 Nov 2014 08:47 AM

சீர்திருத்தப் பாதையில் மியான்மர்

ஜனநாயகத்தை நோக்கி முன்னேறும் மியான்மரை உலக நாடுகளும் பர்மியத் தமிழர்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

இன்று மியான்மரில் 18 நாடுகளின் தலைவர்கள் கூடுகிறார்கள். ராணுவத் தளபதிகளால் மியான்மர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பர்மாவில் நடைபெறும் கிழக்காசிய மாநாட்டுக்காக ஒபாமா, மோடி உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்கள் வருகைதந்திருக்கிறார்கள். இப்படியொரு மாநாடு மியான்மரில் நடக்குமென்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அப்போது ராணுவ ஆட்சி மியான்மரை உலகத்திலிருந்து தனிமைப்படுத்தியிருந்தது.

1962 முதல் 2011 வரை மியான்மர் ராணுவத்தின் இரும்புக் கரங்களில் கட்டுண்டு கிடந்தது. கல்வியும் தொழிலும் விவசாயமும் வர்த்தகமும் தேங்கிப் போயிருந்தன. எதிர்க் குரல்கள் ஒடுக்கப்பட்டன. பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டது. ஊழல் மலிந்திருந்தது. சர்வதேச நாடுகளின் கண்டனங்களும் தண்டனைத் தடைகளும் சூழ்ந்திருந்தன. உள்நாட்டு உற்பத்தியில் கிழக்காசி யாவிலேயே கடைசி இடத்தில் இருக்கிறது மியான்மர்.

ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, பெருந் திரளான மக்கள் எழுச்சி ஏற்பட்டது 1998-ல். ராணுவம் போராட்டத்தை ஒடுக்கியது. என்றாலும் 1990-ல் தேர்தல் நடத்தியது. மியான்மரின் பெரிய அரசியல் கட்சியான தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) வெற்றிபெற்றது. ஆனால், ராணுவம் ஆட்சிக் கட்டிலிலிருந்து இறங்க மறுத்துவிட்டது. என்.எல்.டி. கட்சியின் தலைவி ஆங் சான் சூச்சியை வீட்டுக் காவலில் வைத்தது. மீண்டும் 2010-ல் நடந்த தேர்தலை என்.எல்.டி. புறக்கணித்தது. வேறு கட்சிகள் பங்கேற்றன.

தேர்தலில் ராணுவத்தின் ஆதரவுள்ள யு.எஸ்.டி.பி. வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் ராணுவத் தளபதி தெயின் செயின் அதிபரானார். அப்போது மியான்மரில் பெரிய மாற்றங்கள் வந்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பதவி யேற்ற சில மாதங்களிலேயே சூச்சியை விடுவித்தார். பத்திரிகைத் தணிக்கை தளர்த்தப்பட்டது. தொழிற் சங்கங்கள் அனுமதிக்கப்பட்டன. வர்த்தக, வங்கி விதிகள் திருத்தப்பட்டன. 2012-ல் நடந்த இடைத் தேர்தலில் சூச்சியும் பிற என்.எல்.டி. வேட்பாளர்களும் வெற்றிபெற்றனர். சூச்சி எதிர்க் கட்சித் தலைவரானார்.

சீனாவின் செல்வாக்கு

2011-ல் புதிய அதிபரின் அறிவிப்பு ஒன்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பல நாடுகள் மியான்மருடன் ராஜீய உறவுகளைத் துண்டித்துக்கொண்டபோதும் அண்டை நாடுகளான சீனாவும் இந்தியாவும் தளபதிகளோடு நட்புறவைப் பேணிவந்தன. இந்தியாவைப் போல் சீனா கைகுலுக்குவதோடு நின்றுவிடவில்லை. பெரும் முதலீட்டில் மியான்மரில் சாலைகளும் பாலங்களும் எண்ணெய்க் குழாய்களும் நிறுவின. அப்படியான ஒரு திட்டம்தான் ஐராவதி ஆற்றுக்குக் குறுக்கே

ரூ. 24,000 கோடி மதிப்பில் சீனா கட்டிவந்த மையித்சோன் அணைக்கட்டு. அணையிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் 90% சீனாவுக்குப் போகும். திட்டத்தால் இடம்பெயர்ந்த மக்களும், சூழலியல் ஆதரவாளர்களும் தேசியவாதிகளும் திட்டத்தை எதிர்த்துவந்தனர். இந்தச் சூழலில்தான், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் திட்டத்தை இடைநிறுத்தம் செய்வதாக மியான்மர் அதிபர் அறிவித்தார். சீனாவின் செல்வாக்கு கைமீறிப்போவதாக அரசு அஞ்சுகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். மியான்மரில் வாழும் 3% சீனர்களில் பலரும் வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்; அவர்களுக்குச் சீன அரசின் ஆதரவு இருக்கிறது.

அடி மேல் அடி வைத்து…

மியான்மர் அந்நிய முதலீட்டை வரவேற்கிறது. அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளும் தண்டனைத் தடைகளை விலக்கிக்கொண்டுவிட்டன. நீர்வளம், நிலவளம், கனிமவளம், எண்ணெய் வளம் எல்லாம் ஒருங்கே அமைந்த நாடு மியான்மர். அரை நூற்றாண்டுத் தேக்கத்தால் அதன் மடி சுரந்தபடி இருக்கிறது. முட்டிப் பால் கறப்பதற்குப் பல நாடுகளும் தயாராகத்தான் உள்ளன. ஆனால், ஆட்சி இன்னும் ராணுவத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவை தயங்குகின்றன. நாடாளுமன்றத்தில் 25% இடங்கள் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. நிதி, பாதுகாப்பு, உள்துறை ஆகிய துறைகளுக்கான அமைச்சர்களைத் தளபதிகள்தான் நியமிக்கிறார்கள்; அரசியல் சட்டம் இதை அனுமதிக்கிறது.

அடுத்த பொதுத் தேர்தல் 2015-ல் நடைபெற விருக் கிறது. சூச்சி அதிபராக விரும்புகிறார். அவரது காலம் சென்ற கணவர் ஆங்கிலேயர். அரசியல் சட்டத்தில் வெளிநாட்டவரை மணந்தவர்களுக்குப் அதிபர் பதவி மறுக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தைத் திருத்த மறுத்து வந்த அரசு, கடந்த அக்டோபர் 30 அன்று சூச்சியைச் சந்தித்து இதுகுறித்துப் பேசியது. அரசு சட்டத்தைத் திருத்தாது, இது கிழக்காசிய மாநாட்டுக்கு வருகை தரும் தலைவர்களைச் சமாதானப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தந்திரம் என்கிற விமர்சனமும் இருக்கிறது.

எப்படியானாலும் அரசியல், பொருளாதாரச் சீர்திருத்தப் பாதையில் மியான்மர் சின்னச் சின்ன அடிகளை வைத்து முன்னேறுகிறது. இதை பர்மியத் தமிழர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

பர்மியத் தமிழர்கள்

1962-ல் ஏற்பட்ட ராணுவ ஆட்சியைத் தொடர்ந்து, லட்சக் கணக்கான தமிழர்கள் மியான்மரிலிருந்து வெளியேறினார்கள். அப்போது மியான்மரிலேயே தொடர்ந்து வாழ்வதெனத் தமிழர்கள் பலர் முடிவெடுத்தனர். மியான்மரின் தற்போதைய மக்கள் தொகை 5½ கோடி. அதில் இந்தியர்கள் 2% (11 லட்சம்). இந்தியர்களில் பெரும்பான்மையினர் தமிழர்களே.

நான் 2011 கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது, ஊர் சுற்றிப் பார்ப்பதற்கு ரங்கூன் போயிருந்தேன். தமிழர்கள் பலரைச் சந்திக்க முடிந்தது. ஆண்கள் அனைவரும் பர்மியர்களைப் போல சட்டையை உள்ளே விட்டுக் கைலியை மேலே கட்டியிருந்தார்கள். பெண்களில் பலரும் பர்மியர்களைப் போலவே கை வைத்த மேல்சட்டையும் கைலியும் உடுத்தியிருந்தார்கள். எல்லோரும் சரளமாக பர்மிய மொழியைப் பேசுகிறார்கள். கோயில்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் ஈடுபாட்டோடு போகிறார்கள். தமிழர்களிடையே செல்வந்தர்கள் குறைவு. கிராமவாசிகள் விவசாயத்திலும் நகரவாசிகள் சிறிய வர்த்தகங்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். பர்மிய அடையாளத்தையும் தமிழ் அடையாளத்தையும் அவர்கள் ஒருசேரப் பேணுவதாக எனக்குத் தோன்றியது. என்றாலும், சீனர்களைப் போல தமிழர்களால் பர்மியர்களோடு இரண்டறக் கலக்க முடியவில்லை. தோற்றம் ஒரு காரணமாக இருக்கலாம். சமயம் பிறிதொரு காரணமாக இருக்கலாம். மேலும், இவர்கள் ஐந்தாவது, நான்காவது, மூன்றாவது தலைமுறையாக மியான்மரில் வாழ்கிறவர்கள். எனினும் கலாச்சார வேர்களோடு இவர்களுக்கு உள்ள பிணைப்பு இன்னொரு காரணமாக இருக்கலாம்.

இளைஞர்கள் பலரும் தங்கள் பெற்றோர்களைப் போலன்றி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். பர்மியப் பயிற்றுமொழியில் படித்ததால் தமிழும் ஆங்கிலமும் பேசச் சிரமப்படுகிறார்கள்.

தமிழர்கள் ராணுவ ஆட்சியின் கெடுபிடிகளுக்கிடையே வாழக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். நான் போயிருந்த போது சூச்சி எதிர்க் கட்சித் தலைவராகவில்லை. ஆனால், விடுதலையாகியிருந்தார். என்.எல்.டி. மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தது. தமிழர்கள் பலருக்கும் அரசியலில் ஆர்வமில்லை. தமிழர் களிடையே அறியப்பட்ட அரசியல்வாதி யாரும் இல்லை. ஆனால், பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைப் பலரிடமும் பார்க்க முடிந்தது.

மியான்மர் சீர்திருத்தப் பாதையில் நடைபோடத் தொடங்கி யிருக்கிறது. 50 ஆண்டு காலத் தேக்கத்தை ஒரே பாய்ச்சலில் கடந்துவிட முடியாதுதான். ஆனால், மாற்றங்களில் தீர்க்கமும் வெளிப்படைத் தன்மையும் வேண்டும் என்று மாநாட்டில் கூடியிருக்கும் உலகத் தலைவர்கள் இன்று மியான்மரை வலியுறுத்துவார்கள். மியான்மர் தமிழ்ச் சமூகமும் மாறிவரும் சூழலுக்குத் தன்னைத் தானே தகவமைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்திய அரசோ தாய்த் தமிழகமோ அந்தச் சமூகத்துக்காக உரத்துக் குரல் கொடுத்ததாக வரலாறு இல்லை.

- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், முஹம்மது யூனூஸின் ‘எனது பர்மா குறிப்புகள்’ நூலின் தொகுப்பாசிரியர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x